லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவு- எபோலா?லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவு- எபோலா?

எபோலா எனும் கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெகுவாக பரவுகிறது. கினியாவில் தொடங்கிய இந்த நோய் லைபீரியா, சியாராலேபான், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கும் வேகமாக பரவி மக்களின் உயிரை பறித்து வருகிறது.

இக்கொடிய வைரஸ் காய்ச்சலுக்கு 1,229 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லைபீரியாவில் எபோலா நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு வெஸ்ட் பாயிண்ட் என்ற பகுதியில் நோய் கடுமையாக பாதித்துள்ளது. எனவே இங்குள்ள ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த 17 நோயாளிகள் தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே நோய் பரவுவதை தடுக்க லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எபோலா நோய் பரவாமல் தடுக்க தலைநகர் மான்ரோவியா மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதுபோன்று நோய் பாதிப்பு அதிகம் உள்ள வெஸ்ட் பாயின்ட் பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, உள்ளே நுழையவோ அனுமதிக்கப்படவில்லை. இந்த தகவலை லைபீரியா அதிபர் எல்லென் ஜான்சன் சர்லீப் தெரிவித்தார்.

அவரது பேச்சு ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது. இந்த நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைக்காததே நோய் பரவுதலுக்கு காரணமாகிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் பரிசோதிக்கப்படாத மருந்துகளை பயன்படுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து லைபீரியாவில் எபோலா தாக்கிய 3 டாக்டர்களுக்கு பரிசோதிக்கப்படாத மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதில் அவர்கள் குணம் அடைந்துள்ளதாக தகவல் தொடர்பு மந்திரி லீவிஸ் பிரவுன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்