தமிழர்கள் துணை அமைச்சர்களாக நியமனம்-இலங்கையில் தமிழர்கள் துணை அமைச்சர்களாக நியமனம்-இலங்கையில்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களை துணை அமைச்சர்களாக இலங்கை அதிபர் ராஜபட்ச நியமித்துள்ளார்.

பிரபா கணேசன், பி.திகம்பரம் ஆகிய இருவருக்கும் அதிபர் மாளிகையில் வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் கணிசமான அளவில் வசிக்கும் ஊவா மாகாணத்தில் அடுத்த மாதம் 20-ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இரு தமிழர்களை அதிபர் ராஜபட்ச துணை அமைச்சர்களாக நியமித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

பிரபா கணேசன், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினராவார். இவருக்கு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேசிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பி.திகம்பரம், தேசிய மொழிகள், சமூக ஒற்றுமை ஆகிய துறைகளின் துண அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு, இவர்கள் இருவரும் முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிட்ட இவர்கள், பின்னர், மகிந்த ராஜபட்சவின் அரசுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் பதவியேற்றுள்ள நிலையில், ராஜபட்சவின் அமைச்சரவையில் துணை அமைச்சர்களின் எண்ணிக்கை 42 ஆகியுள்ளது. அமைச்சரவையில் மொத்தம் 67 அமைச்சர்கள் உள்ளனர்.

ஊவா மாகாணத் தேர்தலானது, இலங்கைப் பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றுக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது.

இவ்விரண்டு தேர்தல்களும் 2016-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளன. ஆயினும், ராஜபட்ச தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு மாகாணத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழும் எனக் கூறப்படுகிறது.

ஆசிரியர்