பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாயின் இரு தரப்பும் நம்பிக்கை, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து பேச வேண்டும்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாயின் இரு தரப்பும் நம்பிக்கை, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து பேச வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தூதுக்குழுவிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

எந்தத் தீர்வானாலும் இலங்கை அரசுடன் பேசியே எட்டப்பட வேண்டும் என்பதில் இந்தியத் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்தியா புதுடில்லி சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சனிக்கிழமை முற்பகல் சந்தித்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பின் போது பிரதமர் மோடி தமிழ்க் கூட்டமைப்பினரிடம் சில விடயங்களை உறுதிபடத் தெரிவித்திருப்பதாக இந்தியத் துறை நம்பிக்கை வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைத்துள்ளதாக தமிழ் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பாக இலங்கை அரசாங்கத் துடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவ்வாறு ஒத்துழைத்தால் மட்டுமே மிக நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான நீடித்த சமாதானமான தீர்வைக் காண முடியும் என பிரதமர் மோடி அழுத்தமாகக் கூறியதாகவும் அந்த இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்க் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் நம்பிக்கையுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசு நல்லுறவைப் பேணி வருவதால், இது குறித்து இலங்கை அரசிற்கும் தாம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் முன்னதாக வெள்ளிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்துரையாடினர்.

இவ்விரு இந்தியத் தலைவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை முழுமையாகச் செவிமடுத்த போதிலும், இறுதியில் 13ஆவது திருத்தச் சட்டம் என்றாலும் சரி, அதனை விடவும் கூடிய அதிகாரமானாலும் சரி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பேச்சு நடத்தியே ஒரு தீர்வினை எட்ட வேண்டும் எனத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்