நேபாளம் உலகின் மிகப்பெரிய மனித தேசியக்கொடியை அமைக்க முயற்சிநேபாளம் உலகின் மிகப்பெரிய மனித தேசியக்கொடியை அமைக்க முயற்சி

பத்து வருட உள்நாட்டு யுத்தம் கடந்த 2006ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் நேபாளத்தில் தொடங்கப்பட்ட அமைதிக்கான முயற்சிகள் பாதியில் தடைப்பட்டு நின்றது.

இதனை முழுமையாக நிறைவேற்றும்வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் நேபாள தலைவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

சாதி மற்றும் பாலினம் அடிப்படையிலான பாகுபாட்டினை முடிவுக்குக் கொண்டுவந்து ஒருங்கிணைப்புடன் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இந்த நிலையில், தலைநகர் காத்மாண்டுவின் நகர மையத்தின் வெட்டவெளியில் இன்று கூடிய 35,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உலகிலேயே பெரிய மனித தேசியக் கொடியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நாட்டின் தேசிய கீதம் இசைக்கத் தொடங்கியதும் அங்கு கூடியிருந்த மக்கள் தொடர்ந்து 10 நிமிடத்திற்கு சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிற அட்டைகளை கைகளில் ஏந்தி தங்கள் நாட்டுக் கொடியின் அமைப்பை வெளிப்படுத்தினர். அதன்பின்னர் ‘நேபாள்’ என்று தங்கள் நாட்டின் பெயரை உரக்கக் கத்திக்கொண்டே அட்டைகளை விசிறி எறிந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

நேபாள நாட்டுக் கொடி மட்டுமே செவ்வக வடிவில் இல்லாமல் இரண்டு முக்கோணங்களை இணைத்ததுபோல் இருக்கும். நாங்கள் அனைவரும் ஒரு கொடியின் கீழ் ஒன்றுபட்டு இருப்போம் என்ற செய்தியை உலகுக்கு அறிவிக்க இது ஒரு நல்ல திட்டமாக எங்களுக்குத் தோன்றியது என்று இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அமைதி மற்றும் சுபிட்சத்திற்கான மனித மதிப்பீட்டின் தலைவர் பவேஷ் கனால் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு புதிய உலக சாதனையை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்மூலம் எங்கள் கனவு நினைவாகும் என்ற கனால் இந்த சாதனையை வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் லண்டனில் உள்ள கின்னஸ் உலக சாதனைகள் குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார். இரண்டு மாதங்களில் இதற்கான முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானின் லாகூரில் கூடிய 28,957 பேர் அமைத்த அவர்கள் நாட்டு தேசியக் கொடியே தற்போதைய கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ள பெரிய மனித தேசியக் கொடி என்பதுவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்