முழு அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்துக்கு 8 நாடுகளுக்கு ஐ.நா வேண்டுகோள்முழு அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்துக்கு 8 நாடுகளுக்கு ஐ.நா வேண்டுகோள்

முழு அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்துக்கு ஏற்புறுதி வழங்க இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ-மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் சனிக்கிழமை (ஆக. 29), அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனையொட்டி பான் கீ-மூன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முழு அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்துக்கு இதுவரை ஏற்புறுதி வழங்காத சீனா, வட கொரியா, எகிப்து, இந்தியா, ஈரான், இஸ்ரேல், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் மக்களுக்கு எனது வேண்டுகோள்…

இனி அணு ஆயுதங்களை பரிசோதிக்கவே கூடாது என நாம் அனைவரும் ஒன்றுகூடி அரசுகளை வலியுறுத்த வேண்டும்.

அதன்மூலம், இந்த உலகை, அணு ஆயுதங்களற்ற உலகமாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தை முழுமையடையச் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் அணு ஆயுதப் பரிசோதனைகளில் ஈடுபடுவதை சட்டப்படி தடை செய்யும் இந்த ஒப்பந்தத்தில் 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

எனினும், இந்தியா, வட கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை.

சீனா, எகிப்து, ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அதற்கு ஏற்புறுதி வழங்கவில்லை

ஆசிரியர்