வீரர்கள் சிறைபிடிப்பு: உக்ரைன் அதிபருடன் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைவீரர்கள் சிறைபிடிப்பு: உக்ரைன் அதிபருடன் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை

உக்ரைனின் கிழக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோவும் நேற்று முன்தினம் முதன் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கிழக்கு உக்ரைனில் கடந்த சில மாதங்களுக்கு முன் கிரீமியாவில் வாக்கெடுப்பு நடைபெற்று ரஷ்யாவுடன் இணைந்தது. இதை தொடர்ந்து பல்வேறு நகரங்களையும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதிகளில் உக்ரைன் ராணுவம் விமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவ வீரர்கள் ஊடுருவுகின்றனர் என்று உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோ தொடர்ந்து குற்றம் சாட்டினார். இதற்கிடையே தென்கிழக்கு உக்ரைனில் ஊடுருவிய 10 ரஷ்ய ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

ரஷ்ய எல்லைக்கு அருகே பாராசூட் மூலம் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் தவறுதலாக உக்ரைன் எல்லைக்குள் இறங்கி விட்டனர். எங்களது வீரர்கள் உக்ரைன் எல்லையில் ஊடுருவவில்லை என்று ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த திங்களன்று ரஷ்ய எல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உக்ரைன் கிராமத்தில் பாராசூட்டில் தரையிறங்கிய ரஷ்ய வீரர்கள் நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டனர் என்று உக்ரைன் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோவும் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது பெலாரஸ் மற்றும் கஜகஸ்தான் நாட்டு அதிபர்கள் உடனிருந்தனர். உக்ரைனில் மக்களிடையே சமாதானம் நிலவுவதற்காக ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து மின்ஸ்க்கில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று உக்ரைனிய அதிபர் பெட்ரோ போரோசென்கோ கூறினார்.

ஆசிரியர்