கொலைப் புகாரில் நவாஸூக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்.கொலைப் புகாரில் நவாஸூக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்.

பிரதமர் நவாஸ் ஷெரீப் உட்பட 21 பேர் மீது கொலை வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற மதகுரு காத்ரியின் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு ஏற்றுக் கொண்டது.

பாகிஸ்தானின் தேர்தலில் முறைகேடு செய்து ஆட்சியை பிடித்ததாக பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பாகிஸ்தான் அவாமி லீக் தலைவரும், மதகுருவான  தாகிர் அல் காத்ரியும், தெஹ்ரிக்எஇன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானும் குற்றம்சாட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்தை கடந்த 14ம் தேதி முதல் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், லாகூரில் கடந்த ஜூன் 17ம் தேதி நடந்த கலவரத்தில் 14 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரர் ஷாபாஸ் மற்றும் அமைச்சர்கள் உட்பட 21 மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் காத்ரி கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் இதை ஏற்க பாகிஸ்தான் போலீசார் மறுத்தனர். அரசு தரப்பில் இம்ரான் கானிடமும், காத்ரியிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இந்நிலையில் காத்ரியின் கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் சாத் ரபீக் கூறுகையில், ‘‘காத்ரி கோரிக்கையின் படி 21 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால், அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றார்.

ஆசிரியர்