உயிர்க்கொல்லியான எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கினியா, சியார்ராலோன் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 1500 பேர் பலியாகி உள்ளனர்.
இதை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. எனவே, இந்த நோய் பரவுவதை தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை கண்டறிய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அதன் பின்னரே எபோலா வைரஸ் கிருமிகளை கண்டுபிடிக்க முடிகிறது.
ஆனால் ஜப்பானில் 30 நிமிடத்தில் எபோலா நோய் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனை முறையை நாகசாகி பல்கலைக்கழக பேராசிரியர் ஜிரோ யசுதா தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த புதுவிதமான பரிசோதனை முறை மிகவும் எளிமையானது. மேலும் செலவும் மிக குறைவு. ஆகவே ஜப்பானில் இந்த பரிசோதனை முறையை கடைபிடிக்க டாக்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரத்தம் மற்றும் உடலில் இருந்து வெளியாகும் திரவம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பரிசோதனைக்கு பிரிமெர் என பெயரிட்டுள்ளனர்.