பாகிஸ்தானில் கனமழை – 55 பேர் பலிபாகிஸ்தானில் கனமழை – 55 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இங்குள்ள பல்வேறு பகுதிகளில் 130 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. லாகூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சராசரியாக 155 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பைசலாபாத், குஜ்ரன்வாலா, சியால்கோட், கசூர், கனேவால் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிந்து பலர் உயிரிழந்துள்ளனர். இந்த கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்களும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கனமழை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளச்சேதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்குள்ள ரவி, செனாப் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆசிரியர்