அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட அரபு நாடுகள் எதிர்ப்புஅமெரிக்காவுடன் இணைந்து செயல்பட அரபு நாடுகள் எதிர்ப்பு

மேற்கு ஆசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும், அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட மறுத்த அரபு நாடுகள், தங்களுக்குள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

மத்திய தரைகடல் நாடுகள் மற்றும் அரேபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள, அரபி மொழி பேசும், 22 நாடுகள், அரபு நாடுகளாக கருதப்படுகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு, நெருங்கிய நட்பு நாடுகளின் உதவியை நாடிய அமெரிக்கா, அதற்காக சமீபத்தில், வேல்ஸ் பகுதியில், ‘நேட்டோ’ நாடுகள் அமைப்பின் கூட்டத்தை கூட்டி விவாதித்தது.

பயங்கரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு, நேட்டோ நாடுகள் ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்தன. ஆனால், ஐரோப்பிய யூனியன் நாடுகள் சில, சம்மதம் தெரிவிக்கவில்லை.

அதன் பிறகு, மத்திய தரைக்கடல் மற்றும் அரபு நாடுகளின் ஆதரவை, அமெரிக்கா கோரியது. இதுகுறித்து முடிவெடுக்க, அரபு நாடுகளின் தலைவர்கள், எகிப்தின் கெய்ரோ நகரில் கூடி, ஞாயிறு அன்று விவாதித்தனர். அதில், பயங்கரவாதத்தை எதிர்ப்பது என முடிவு செய்த அந்நாடுகள், ‘அதற்காக அமெரிக்காவுடன் இணைந்து, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளை எதிர்க்க முடியாது; நாங்களாகவே இணைந்து செயல்படுவோம்’ என, அறிவித்தன.

இந்த அரபு நாடுகள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஜோர்டான், வெளிப்படையாகவே, ‘பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க, எந்தவித கூட்டமைப்புடனும் சேர மாட்டோம்’ என்றும், ‘பயங்கரவாதத்தை எப்படி தடுப்பது என்பது குறித்து எங்களுக்கு தெரியும்’ என்றும் அறிவித்துள்ளது.

ஆசிரியர்