மனிதர்களை கொண்டு செல்லும் ஓரியான் விண்வெளி ஓடம் தயார்! மனிதர்களை கொண்டு செல்லும் ஓரியான் விண்வெளி ஓடம் தயார்!

நாசாவின் ஓரியான் விண்வெளி ஓடம் சோதனை ஓட்டத்திற்குத் தயாராகியுள்ளது. மனிதர்களை விண்வெளியில் தொலைதூரத்திற்குப் பயணிக்க வைக்கும் திறன் படைத்தது இந்த புதிய விண்வெளி ஓடம். டிசம்பர் மாதம் இந்த விண்வெளி ஓடம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தற்போது எரிபொருள் நிரப்பும் பணிக்காக இது காத்திருக்கிறது.

நாசா உருவாக்கியுள்ள அதி நவீன விண்வெளி ஓடமாகும் இது. தற்போது இது நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சோதனைகள் முடிந்து வெளியே வந்துள்ளது. அடுத்து இந்த விண்வெளி ஓடத்தில் எரிபொருள் நிரப்பப்படவுள்ளது. டிசம்பரில் இந்த விண்வெளி ஓடம் தனது பயணத்தைத் தொடங்குகிறது.

இந்த விண்வெளி ஓடத்தை உருவாக்குவது எளிதாக இருக்கவில்லை. மிகவும் கடினமான பணி. ஆனால் நிச்சயம் இது மிகப் பெரிய சாதனையாக அமையும் என்று ஓரியான் திட்ட மேலாளர் மார்க் கெயர் தெரிவித்துள்ளார். வழக்கமான ராக்கெட்டின் முன்பகுதியில் இந்த விண்வெளி ஓடத்தை இணைத்து உருவாக்கியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

இதில், புதிய பிரஷர் வாகனம், வெப்ப கவசத் தகடுகள், பாராசூட், ஏவியானிக்ஸ் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இது விமானம் போலவே மனிதர்களால் இயக்கி பயன்படுத்தப்படும் என்பதுதான் விசேஷமானது. தொடக்கத்தில் இது விண்வெளியில் 3600 மைல் தூரத்திற்கு பயணம் மேற்கொள்ளும்.

இந்தப் பயணம், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. டெல்டா 4 கன ரக ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்படும். எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் நாசாவிடம் உள்ளது. அதற்கான முன்னோடிப் பயணமாக இதைக் கருதலாம்.

விண்வெளியில் இதுவரை மனிதர்கள் அதிக அளவில் செல்லமுடியாத தூரத்திற்கும் கூட இந்த விண்வெளி ஓடம் மூலம் பயணிக்கலாம். அதற்கான சோதனை ஓட்டம்தான் இது. சோதனை ஓட்டத்தின்போது ஆட்கள் யாரும் இதில் செல்ல மாட்டார்கள். ஆனால் எதிர்காலத் திட்டங்களில் விண்வெளி வீரர்கள் இதில் பயணிப்பார்கள்

ஆசிரியர்