எபோலா தாக்கி குணமடைந்தவர்களின் ரத்தம்: ஆப்பிரிக்க நாடுகளில் கடும் கிராக்கிஎபோலா தாக்கி குணமடைந்தவர்களின் ரத்தம்: ஆப்பிரிக்க நாடுகளில் கடும் கிராக்கி

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளிலும் பரவி இதுவரை 2461 உயிர்களைப் பலி வாங்கியுள்ளது.

இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த நோய்த்தாக்கத்திற்கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எபோலா நோய்த்தொற்று தாக்கி, ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தவர்களின் ரத்தம் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும், இதற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

லைபீரியாவில் எபோலா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுவந்த அமெரிக்காவைச் சேர்ந்த சமூகச் சேவகரான டாக்டர் ரிச்சர்ட் ஸக்ரா என்பவரையும் சமீபத்தில் எபோலா நோய்த்தொற்று பற்றிக் கொண்டது.

உடனடியாக, லைபீரியாவில் இருந்து விமானம் மூலம் அவர் அமெரிக்காவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சை நீங்கலாக, அவருக்கு ஒரு மாதம் முன்னதாக எபோலா நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்த மற்றொரு அமெரிக்கரான டாக்டர் கெண்ட் பிராண்ட்லி என்பவரின் ரத்தமும்,  டாக்டர் ரிச்சர்ட் ஸக்ரா-வுக்கு ரத்த மறுசுழற்சி முறை மூலம் செலுத்தப்பட்டது.

இந்த சிகிச்சையையடுத்து, டாக்டர் ரிக் ஸக்ரா தற்போது பூரண குணமடைந்து விட்டதால், எபோலா தாக்கி, உரிய சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் ரத்தமானது, எல்லா கொடிய நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்னும் நம்பிக்கை ஆப்பிரிக்க மக்களிடையே தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதனால், எபோலா தொற்றுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் ரத்தத்தை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள அந்நாட்டைச் சேர்ந்த பல செல்வந்தர்கள் தயாராக உள்ளனர்.

இந்த தேவை அதிகரித்து வருவதால், எபோலா தாக்கி சிகிச்சை பெற்று, குணமடைந்து, வீடு திரும்பியவர்களை தற்போது தரகர்கள் கூட்டம் வட்டமிடத் தொடங்கியுள்ளது.

அவர்களது ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு, அதே ரத்த வகையை சேர்ந்த செல்வந்தர்களிடம் இந்த தரகு கும்பல் பெரும் தொகைக்கு பேரம் பேசி, அதில் ஒரு சிறிய தொகையை ரத்தம் விற்பனை செய்யும் நபருக்கு அளித்துவிட்டு, இதைப் போன்ற கள்ளச்சந்தை வியாபாரத்தின் வாயிலாக கொழுத்த லாபம் சம்பாதித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அதே வேளையில், இதைப்போன்ற நபர்களிடமிருந்து பெறப்படும் ரத்தத்தை செலுத்திக் கொள்பவர்கள், உரியமுறையிலான மருத்துவ கண்காணிப்பை தொடர்ந்து பெறத் தவறினால், ’எந்த நோயையும் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது’ என்று ஆப்பிரிக்க மக்கள் கருதும் இதே ரத்தம், புதிதாக செலுத்திக் கொள்பவர்களின் உயிரையே பறித்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மார்கரெட் சான் எச்சரித்துள்ளார்.

ஆசிரியர்