மனித உரிமை மீறல் பிரச்சினையில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை – அமெரிக்காமனித உரிமை மீறல் பிரச்சினையில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை – அமெரிக்கா

மனித உரிமை மீறல் பிரச்சினையில் இலங்கை மீதான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தது.

இந்நிலையில், அண்மையில் ஐ.நா. பொதுச்சபை வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அந்நாட்டு வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களில் வெளியாகின. இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா, இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை சற்று தளர்த்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது, அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறியதாவது: “இலங்கை – அமெரிக்கா குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ஒன்று மட்டும்தான் உண்மைச் செய்தி. அது, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் – அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் சந்தித்தனர் என்பதே.

அந்த சந்திப்பின் போதும் இலங்கை மீதான நிலைப்பாட்டை கெர்ரி வலியுறுத்தியுள்ளார். இலங்கையுடனான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அமெரிக்கா இப்போதும் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் நிறைவேற வேண்டுமானால் இலங்கை அந்நாட்டில் உள்ள அனைத்து மொழி, இன, மதத்தினருக்கும் அமைதியும், வளமும் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.

அதன் காரணமாகவே வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, போரில் இருந்து மீண்ட தேசமாக உருவெடுக்க இலங்கை அதிபர் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்” என்றார்.

ஆசிரியர்