ஜனநாயகம் கோரி மோதல் | போராட்டக்காரர்களுக்கும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையில்ஜனநாயகம் கோரி மோதல் | போராட்டக்காரர்களுக்கும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையில்

சீன ஆளுகைக்குள்பட்ட ஹாங்காங்கில், ஜனநாயகம் கோரி சாலைகளை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்களுக்கும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

அங்குள்ள மக்கள் நெரிசல் மிகுந்த கெளலூன் பகுதியில் ஏற்பட்ட மோதல், ஒரு வார காலமாக நீடித்து வரும் மாணவர்களின் முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் தொடர்ந்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.

வயதில் இளைய போராட்டக்காரர்களை, பெரும்பாலும் அதிக வயது கொண்டவர்களாகக் காணப்படும் போராட்ட எதிர்ப்பாளர்கள் இழுத்துத் தள்ளியும், கலைந்து செல்லுமாறு கோஷமிட்டும் வருகின்றனர்.

தங்களைப் நெட்டித் தள்ளும் பெருந்திரளமான மக்களுக்கு எதிராக, மனிதச் சங்கிலி அமைத்து ஜனநாயக ஆதரவாளர்கள் அந்த இடத்தைவிட்டு அகலாமல் நின்று வருகின்றனர். நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

போலீஸார் ஒருவர் கையை ஒருவர் இறுகப் பற்றி, மோதலில் ஈடுபடுவோரை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

ஹாங்காங் ஆட்சித் தலைவருக்கான தேர்தலில் ஜனநாயக சீர்திருத்தங்களைக் கொண்டுவர வலியுறுத்தி மாணவர்களும், ஜனநாயக ஆதரவாளர்களும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வீதிகளில் ஆர்ப்பார்ட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாங்காங் ஆட்சித் தலைவர் லியூங் சுன்யிங் கடந்த வியாழக்கிழமைக்குள் பதவி விலகாவிட்டால் முக்கிய அரசுக் கட்டடங்களை ஆக்கிரமிக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தனர். எனினும், தான் பதவி விலகப் போவதில்லை என லியூங் சுன்யிங் வியாழக்கிழமை அறிவித்தார்.

இந்தச் சூழலில், போராட்டக்காரர்கள், போராட்ட எதிர்ப்பாளர்கள் ஆகிய இரு தரப்பினருமே தங்களது நிலையைத் தீவிரப்படுத்தி வருவது அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.

பிரிட்டனின் காலனியாக இருந்த வந்த ஹாங்காங், 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு, முதல் முறையாக அப்பகுதியில் சீன அரசு எதிர்கொள்ளும் மிகப் பெரும் சவாலாக இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.

ஆசிரியர்