சிங்கப்பூரில் தமிழ் தேசிய கீதத்தை இயற்றிய தமிழனுக்கு பாராட்டு சிங்கப்பூரில் தமிழ் தேசிய கீதத்தை இயற்றிய தமிழனுக்கு பாராட்டு

சிங்கப்பூர் நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிய ஜேசுதாஸன் என்பவரிடம் அப்பள்ளியின் ஆசிரியர் கடந்த 1966-ம் ஆண்டு தமிழ் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இசைக்கத்தகுந்த வகையில் தேசப்பற்றும், விழிப்புணர்வும் ஏற்படுத்தக்கூடிய ஒரு தமிழ்ப் பாடலை இயற்றித்தரும்படி கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, அவர் இயற்றிய ‘முன்னேற்று.., தமிழா, முன்னேறு..,’ என்ற கொள்கை முழக்கப் பாடல் அடந்த 1967-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் அணிவகுப்பின்போதும், பள்ளி ஆண்டுவிழாக்களின்போதும் தவறாமல் இசைக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பாடல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக இசைக்கப்பட வேண்டும் என சிங்கப்பூர் அரசு அறிவித்ததையடுத்து, கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சீனம் மற்றும் மலாய் ஆகியவற்றை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் இந்த தமிழ்ப் பாடலை மிக தெள்ளத் தெளிவாக பாடக் கற்றுக் கொண்டனர். இதே பாடல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, இசைப்பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புக்குரிய பாடலை இயற்றிய தமிழாசிரியர் ஜேசுதாஸன் பல ஆண்டுகளுக்கு முன்னரே பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

தற்போது 84 வயதாகும் இவரை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அந்நாட்டின் சட்டம் மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி கே.சண்முகம், தமிழாசிரியர் ஜேசுதாஸனின் அருமை, பெருமையை வெகுவாக பாராட்டியும், புகழ்ந்தும் பேசினார்.

தற்போதைய தமிழாசிரியர்களும், தங்களின் முன்னோடிகளின் வழியொற்றி தமிழுக்கும், தமிழ் மாணவச் சமுதாயத்துக்கும் தொண்டு செய்து, ஆசிரியர் பணிக்கு பெருமைத் தேடித் தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஆசிரியர்