அதிபர் ஆட்சி முறை ரத்து | ஈழக் கோரிக்கையை கை விடும் பட்சத்தில் அதிபர் ஆட்சி முறை ரத்து | ஈழக் கோரிக்கையை கை விடும் பட்சத்தில்

தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் அதிகாரங்கள் அனைத்தும் அதிபரிடம் குவிந்திருக்கும் வகையிலான தற்போதைய ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறினார்.

இலங்கையில் அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறை நடை முறையில் உள்ளது. இதை மாற்றி நாடாளுமன்றத்துக்கு, குறிப்பாக பிரதமருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை கொண்டு வரும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் ராஜபக்சே பேசியதாவது:

“தமிழ் தேசிய கூட்டணியும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும், தமிழ் ஈழம் என்ற பிரிவினைவாத கோரிக்கையை கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், தற்போதுள்ள அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரத் தயாராக இருக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக நடை பெற்ற தீவிரவாதச் செயல்களால், எண்ணற்ற உயிர்களையும் மட்டுமல்ல, குடியிருப்புகளையும் இழந்துள்ளீர்கள்.

விடுதலைப் புலிகள் நடத்தி வந்த வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். தீவிரவாதத்துக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதன் மூலம், எவ்வித அச்சமும், சந்தேகமுமின்றி சுதந்திரமாக நீங்கள் வாழ வழி செய்துள்ளோம். விடுதலைப் புலிகளை அழிப்பதற் குத்தான் ராணுவம் போரில் ஈடுபட்டதே தவிர, தமிழர்களுக்கு எதிராக அல்ல. இவ்வாறு அதிபர் ராஜபக்சே கூறினார்.

ஆசிரியர்