விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கும் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இலங்கை அரசு மேல்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் பெயரை நீக்கி யூனியன் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. விதிமுறைகளின் கீழ் மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்படும். அதே வேளையில், இலங்கை அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக இரண்டு மாதங்களில் மேல்முறையீடு செய்யலாம்.
இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து முறையிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கான இலங்கைத் தூதர் ராட்னி பெரேரா, இது தொடர்பாக அந்த அமைப்பின் நாடாளுமன்றத்தில் ஆதரவு திரட்ட பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகருக்கு திங்கள்கிழமை விரைகிறார்.
அங்கு நடைபெறவுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரு குழுக்களிடம் விடுதலைப் புலிகள் தடை நீக்க விவகாரம் தொடர்பாகப் பேசுவார் எனத் தெரிகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக, ஐரோப்பிய யூனியன் 2006-இல் அறிவித்தது. இலங்கை, இந்தியா தவிர, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.