கனடா தயாரித்துள்ள எபோலா நோய்த் தடுப்பு மருந்தை உலக சுகாதார அமைப்பிடம் வழங்குகிறது கனடா தயாரித்துள்ள எபோலா நோய்த் தடுப்பு மருந்தை உலக சுகாதார அமைப்பிடம் வழங்குகிறது

 

கனடா தயாரித்துள்ள எபோலா நோய்த் தடுப்பு மருந்தை உலக சுகாதார அமைப்பிடம் வழங்கப் போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை கனடாவின் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், ஸ்விஸ் நாட்டின் தலைநகரான ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார மையத்தின் தலைமையகத்தில்அளிக்கவிருக்கிறார்கள்.

800 குப்பிகள் அளவு தயாரிக்கப்பட்டுள்ள இம்மருந்து, மூன்று கட்டங்களாக உலக சுகாதார அமைப்பிடம் அளிக்கப்படும்.

எபோலா நோய் தடுப்பு மருந்தின் சிகிச்சைப் பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கப்பட்டதாக கனடா ஏற்கெனவே அறிவித்திருந்தது. அந்த சோதனையின் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளன.

இன்னும் பரிசோதனை நிலையில் உள்ள மருந்தை நோயாளிகளுக்கு அளிக்கலாமா என்பது குறித்து, பல்வேறு நிலைகளில் ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவெடுத்திருக்கிறது.

நோய் பாதிப்புள்ள நாடுகளைச் சேர்ந்த அரசுகளின் சுகாதாரத் துறை உள்ளிட்டோருடன் இதற்கான முதற்கட்ட ஆலோசனைகள் தொடங்கியுள்ளன.

1976 ஜூனில் எபோலா நோய் முதலில் சூடான் நாட்டில் கண்டறியப்பட்டது. டிசம்பர் வரை நோய் பாதிப்பு இருந்தது. இருநூறுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்; 151 பேர் இந்நோயால் உயிரிழந்தனர்.

அதே வருடம் ஆகஸ்டில் காங்கோ நாட்டில் இந்நோய் கண்டறியப்பட்டது. காங்கோவில் உள்ள எபோலா ஆற்றுக்கு அருகே இந்நோய் அறிகுறி தென்பட்ட காரணத்தால், நோய்க்கு காரணமான வைரஸூக்கு எபோலா வைரஸ் எனப் பெயரிடப்பட்டது.

கனடாவில் எபோலா தொடர்பாகப் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்