June 8, 2023 5:36 am

செல்வாக்கு மிக்க உலகத்தலைவர்கள் பட்டியலில் ரஷிய அதிபர் முதல் இடம் பிரதமர் மோடிக்கு 15–வது இடம்செல்வாக்கு மிக்க உலகத்தலைவர்கள் பட்டியலில் ரஷிய அதிபர் முதல் இடம் பிரதமர் மோடிக்கு 15–வது இடம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

செல்வாக்குமிக்க உலகத்தலைவர்கள் பட்டியலை அமெரிக்க பத்திரிகை ‘போர்ப்ஸ்’ தேர்வு செய்து வெளியிட்டது. இதில் ரஷிய அதிபர் புதின் முதல் இடத்தையும், பிரதமர் மோடி 15–வது இடத்தையும் பிடித்தனர்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரசித்தி பெற்ற ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களை தேர்வு செய்து, பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு செல்வாக்குமிக்க 72 பேரின் பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். புதினைப் பற்றி அந்தப்பத்திரிகை, ‘‘உக்ரைனில் புதின் மறைமுகப்போர் நடத்தினார். சீனாவுடன் 70 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கோடி) மதிப்பிலான கியாஸ் குழாய் திட்டத்தை நிறைவேற்ற உடன்படிக்கை செய்தார். ரஷியா மென்மேலும் ஊக்கம் பெற்று திகழ்கிறது. எனவே புதின் எளிதாக முதலிடம் பிடிக்கிறார்’’ என கூறி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 15–வது இடத்தை பிடித்துள்ளார்.

மோடியைப்பற்றி அந்தப் பத்திரிகை குறிப்பிடுகையில்,‘‘ மோடி இந்தியாவின் புதிய ராக் (இசை) நட்சத்திரம். ஆனால் அவர் பாலிவுட்டில் இருந்து வந்துவிடவில்லை. கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பதவிக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர். நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பல ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பாரதீய ஜனதாவுக்கு பெற்று தந்துள்ளார். இந்து தேசியவாதி. 2002–ம் ஆண்டு குஜராத் கலவரங்கள் நடந்தபோது அந்த மாநிலத்தின் முதல்–மந்திரி மோடிதான். குஜராத்தை வளர்ச்சிக்கு வித்திட்ட மோடி நிர்வாகம், நாட்டின் பிற பகுதிகளிலும் பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்த வாக்குறுதி அளித்துள்ளது. இந்திய மக்களைப்போன்று உலக மக்களாலும் அவர் கவரப்பட்டுள்ளார்’’ என கூறி உள்ளது.

இந்திய தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி 36–வது இடத்தையும், லட்சுமி மிட்டல் 57–வது இடத்தையும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சத்ய நாதெள்ளா 64–வது இடத்தையும் கைப்பற்றி உள்ளனர்.

இந்தப் பட்டியலில் 3–வது இடத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும், 4–வது இடத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சும், 5–வது இடத்தில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் உள்ளனர்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 10–வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே (17), ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி (19), பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் (22), இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ (26), ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் (40), அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் (44), வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் (49) ஆகியோரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்தப்பட்டியலில் ஆச்சரியமான விஷயம், கடந்த ஆண்டு 21–வது இடத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த முறை இடம் பெறாததுதான்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்