அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. ஹிலாரி, டிரம்ப் உச்சக்கட்ட பிரசாரம் செய்கின்றனர். இருவரது பேச்சிலும் அனல் பறக்கிறது.
உலகமே பெரும்பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓட்டு போட தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 69 சதவீதம் பேர் நிச்சயம் இந்த தேர்தலில் ஓட்டு போடப்போவதாக உறுதி அளித்துள்ளனர்.
ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே ஓட்டு போடும் வசதியை பயன்படுத்தி, ஓட்டு போட்டுவிட்டனர்.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (70) இடையே ‘நீயா, நானா?’ என்கிற அளவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்தாலும், இருவருக்கும் இடையேயான ஆதரவு வித்தியாசம் குறைவாக இருக்கிறது.
எனவே வாக்காளர்களை இறுதிக்கட்டமாக கவருவதில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு, உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிலாரி தனது பிரசாரத்துக்கு பாப் பாடகிகள் பியான்சே, கேத்தி பெர்ரி ஆகியோரை பயன்படுத்தி வருகிறார்.
டிரம்பைப் பொறுத்தமட்டில் நட்சத்திர பிரசாரகர்கள் யாரும் இல்லை என்ற பட்சத்திலும் அவர் தனது குடும்பத்தினரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்.
ஹிலாரி, டிரம்ப் இருவருமே ஒருவர் மீது மற்றவர் ஆவேச குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். அனல் பறக்க பேசுகிறார்கள். அமெரிக்க மக்கள் இருவரது பேச்சுக்களையும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் தீர்ப்பை ஓட்டுச்சீட்டின் மூலம் நாளை வழங்க இருக்கிறார்கள்.
ஹிலாரி, வடக்கு கரோலினா மாகாணத்தின் தலைநகரான ராலே நகரில் தனது கடைசி பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதுபற்றி அவரது பிரசார குழுவினர் கூறும்போது, “தனது இறுதி பிரசாரத்தின்போது ஹிலாரி ஒவ்வொருவருக்கும் பலன் அளிக்கிற வகையில் பொருளாதாரத்தை உருவாக்க வைத்துள்ள திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறுவார். உச்சக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது சாமானிய மக்களுக்கும் பலன் கிடைக்கத்தக்க வகையில், அவர் அமெரிக்கா தொடர்பான தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவார்” என்று கூறுகின்றனர்.