கனடாவின் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பான மத்திய நிலையம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள புதிய தரப்படுத்தல் பட்டியலில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம் உலகத்தில் மூன்றாவது சிறந்த தகவல் அறியும் சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப்பட்டியலில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம் இதற்கு முன்னர் ஏழாவது இடத்தில் இருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு பின்னர் இது 9 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.
எனினும் கடந்த வாரம் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க வெளியிட்டிருந்த வர்த்தமானியில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான சட்டம் மற்றும் விதி முறைகளைக் கவனத்திற்கொண்டு இலங்கைக்கு தரப்படுத்தலில் 10 புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்பட்டதினால் மற்றைய நாடுகளை பின்தள்ளி இலங்கை மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. சட்டம் மற்றும் நிபந்தனைகள் தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடனும் இணக்கத்துடனயே வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
‘சாதாரணமாக சட்டம் மற்றும் நிபந்தனைகளை வெளியிடும் போது நாடொன்று தரப்படுத்தலில் உயர்வதென்பது பிம அரிதான விடயமாகும். எனினும் இலங்கை பெற்றுக் கொண்ட இந்த வெற்றி தொடர்பில் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சருக்கும், தகவல் ஆணைக்குழுவிற்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகும்’ என கனடா மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் டொபி மென்டல் தெரிவித்துள்ளார்.
இத்தரப்படுத்தலின் அடிப்படையில் முதல் இரு இடங்களையும் முறையே மெக்சிகோ மற்றும் சேர்பியா ஆகிய நாடுகள் பெற்றுக் கொண்டுள்ளன. இலங்கை பெற்றுக் கொண்ட இவ்வெற்றியுடன் தெற்காசியாவில் இலங்கையின் தகவல் அறியும் சட்டம் முதல் இடத்தை பெற்றுள்ளது. உலக தரப்படுத்தலின் அடிப்படையில் இந்தியாவிற்கு 05 ஆவது இடமே கிடைத்துள்ளது.