பிரெசில் நாட்டின் பஹியா மாநிலத்தில் உள்ள கடல்பகுதியில் 130 பயணிகளுடன் சென்ற சொகுசு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரெசில் நாட்டின் கடலோர மாநிலமான பஹியாவில், நேற்று 130 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்றுள்ளது. நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கப்பல் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்படையினரால் 20-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பார் மாநிலத்தில் 70 பயணிகளுடன் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
படகு விபத்தில் பலியானவர்களுக்காக அம்மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஒரே வாரத்தில் இரண்டு படகு விபத்துக்கள் நடந்துள்ளதால், இது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.