அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ புயல் ருத்ர தாண்டவமாடி விட்டது. அந்த நாட்டின் நான்காவது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ள ஹூஸ்டன் நகரம், வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இந்த நகரத்தில் மட்டுமே புயல், வெள்ளத்தில் சிக்கி நேற்றைய நிலவரப்படி இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்குள்ள பிரையான் ஏரியில் ஆனந்தமாக நீச்சலடித்து குளிக்க சென்ற ஒரு மாணவரும், மாணவியும் மூழ்கினர். இது குறித்து உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் போராடி அந்த மாணவரையும், மாணவியையும் மீட்டு விட்டனர். அவர்கள் அங்கு ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.அவர்களது பெயர் சாலினி மற்றும் நிக்கில் பட்டியா. அவர்கள் அங்குள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் சாலினி நிலை சற்றே மேம்பட்டுள்ளதாகவும், நிகில் பட்டியாவின் நிலையில் சற்றும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தெரிகிறது. நிலைமையை அந்த நகரில் உள்ள இந்திய துணை தூதர் அனுபம் ராய் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
இந்தியாவில் இருந்து நிகில் பட்டியாவின் தாயார் டாக்டர் சுமன் பட்டியா அங்கு சென்று விட்டார். அவருக்கு தேவையான உதவிகளை இந்திய துணை தூதரகம் செய்து வருகிறது. இதேபோன்று சாலினியின் சகோதரர் இன்று (புதன்கிழமை) அங்கு சென்றடைய உள்ளதாக ஹூஸ்டன் இந்திய துணை தூதரகம் தெரிவிக்கிறது.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் 200 இந்திய மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவினை அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வழங்கி வருகின்றனர். அந்த மாணவர்களுடன் இந்திய துணை தூதர் அனுபம் ராய், தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.