சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் கடைசி நகரமான மயாடீன் நகரை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.
இந்நிலையில், மயாடீன் நகரில் ரஷிய விமானப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 80 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் அல்பு கமால் நகரில் 40 பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர, வெளிநாடுகளில் இருந்து வந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டையிட்டுவரும் மேலும் 60 பேர் கொல்லப்பட்டதாக ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து இன்று வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ரஷிய விமானப் படைகள் நடத்திய தாக்குதல்களில் வடக்கு கக்காசஸ் பகுதியில் உள்ள ஐ.எஸ். படையை சேர்ந்த மூத்த தளபதிகள் ஒமர் அல்-ஷிஷானி, அலா அல்-டின் அல்-ஷிஷானி, சலா அல்-டின் ஷிஷானி ஆகியோரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.