Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ‘ஈழப் போராளி திலிபன் பெயரில் தெரு’ – மதுரை மக்களின் ஈழப் பாசம்!

‘ஈழப் போராளி திலிபன் பெயரில் தெரு’ – மதுரை மக்களின் ஈழப் பாசம்!

3 minutes read

மதுரை: ஈழப்போராளி திலிபனை நினைவுகூரும் வகையில் தங்களது தெருவுக்கு அவருடைய பெயரைச் சூட்டி கடந்த 32 ஆண்டுகளாக அப்பகுதியினர் அவரது நினைவுநாளை அனுசரித்துவருகின்றனர். இதையொட்டி, இந்தாண்டு நேற்று அவரது நினைவுநாள் அப்பகுதியில் அனுசரிக்கப்பட்டது.

மதுரை பெத்தானியாபுரத்தில் வட்டம் எண் 21க்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில், ஒரு தெருவின் பெயர் ஈழப் போராட்டத்தில் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த அகிம்சைப் போராளி திலிபனின் நினைவாக இன்றும் உள்ளது. அதனை மதுரை மாநகராட்சியின் பெயர்க் குறிப்பேட்டிலும், அத்தெருவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

 வடிவம் பெற்ற திலிபனின் உண்ணாநிலை போராட்டம்

இந்திய – இலங்கை அரசுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ராணுவத்தினர் மனித உரிமை அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இலங்கை அரசும் சரிவர செயல்படவில்லை எனக்குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார் திலிபன். சரியாக 12 நாட்கள் கழித்து செப்டம்பர் 26ஆம் தேதி மரணமடைந்தார்.

thileepan street name in madurai 32nd memorial மதுரை மக்களின் ஈழப் பாசம் திலீபனின் பெயரில் தெரு tamil eelam திலீபன் திலீபன் தெரு ஈழப் போராளி திலீபன் பெயரில் தெரு

திலிபன் தெரு பெயர் பலகை

அந்த தருணத்தில் தனி ஈழம் கோரிய போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது. திலிபன் மரணம் இலங்கை, தமிழ்நாட்டை மட்டுமன்றி உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களின் மனசாட்சியை உலுக்குவதாக அமைந்தது. அதன் பிறகு இந்திய அமைதிப்படையை எதிர்த்து, ஈழப் போராளிகள் தங்களின் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய நிலை உருவானது.

உண்ணாவிரதமிருந்து அறவழியில் போராடி உயிர் நீத்த திலிபன் நினைவாக 1987ஆம் ஆண்டு, மதுரை பெத்தானியாபுரத்திலுள்ள ஒரு தெருவுக்கு திலிபன் பெயர் சூட்டப்பட்டது. அன்றிலிருந்து தற்போது வரை, திலிபனின் நினைவைத் தொடர்ந்து அத்தெரு மக்களும், ஈழ ஆதரவாளர்களும் அனுசரித்து வருகின்றனர். நேற்று மாலை நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

திலிபன் தெரு குறித்து ஈழ ஆதரவாளர்

திலிபனின் மறைவு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவாளர் கதிர் நிலவன் கூறுகையில், ‘ஈழத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை, இங்குள்ள பலர் கொச்சைப்படுத்தி, ஆயுதத்தின் மீது காதல் கொண்டு விடுதலைப்புலிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்கின்றனர். ஆனால் காந்தியின் தலைமையில் அகிம்சை போராட்டத்தை உலகுக்கே அறிமுகப்படுத்திய இந்தியத் தேசத்திற்கு, வேண்டுகோள் வைத்து திலிபன் உண்ணாவிரத அறப்போரைத் தொடங்கினார்.

சிங்களர் குடியேற்றங்களைத் தடுத்தல், ஈழ ஆதரவு அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், அவசரக்கால சட்டத்தை முழுமையாக விலக்குதல், தமிழர் பகுதிகளில் புதிய காவல்நிலையங்கள் திறக்கப்படுதல் கூடாது, ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை முற்றாகக் களைதல் என்பன உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை திலிபன் தொடங்கினார்.

 ஈழப் போராளி திலிபன் பெயரில் மதுரையில் தெரு

தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தை நடத்தி, சரியாக 12 நாட்களில் மரணத்தைத் தழுவினார், திலிபன். அவரது மறைவுக்குச் சிறிய வருத்தம் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை. அத்தருணத்தில் திலிபனின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் நாங்கள் அவரின் நினைவாக இந்தத் தெருவுக்கு திலிபனின் பெயரை வைத்தோம்’ என்றார். திலிபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி முழக்கம் எழுப்பி அனைவரும் கலைந்து சென்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More