2005இல் விட்ட தவறினால் முள்ளிவாய்க்காலை சந்தித்தோம்: விஜயகலா

வடக்கு கிழக்கு மக்கள் 2005இல் தேர்தலில் வாக்களிப்பை தவிர்த்ததன் காரணமாகவே முள்ளிவாய்க்கால் வரை எமது உறவுகளை கொண்டு சென்றதுடன் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படக் காரணமாகவும் அமைந்தது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 2001ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை மக்கள் வடக்கு கிழக்கு உட்பட மலையகம் எங்கும் எவ்வாறு வாழ்ந்து கொண்டனர்.

அப்போது, எமது மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடியதாகவும், வௌிநாடுகளில் இருந்தவர்கள் இங்கு வரக் கூடியதாகவும் இருந்தது. வடக்கில் முக்கியமாக பாதைகள் திறந்துவிடப்பட்டிருந்தன.

அந்த காலங்களில் தான் வன்னி பிரதேசத்தை ஆண்டுகொண்டிருந்த நிர்வாகத்தோடு, ரணில் அரசாங்கமும் இணைந்து ஒஸ்லோவில் சமாதான பேச்சுவார்த்தையை நடத்தியது.

ஆனால் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்ட வேளை வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் அளிக்கப்படாததன் காரணத்தால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் மாற்றுக் கட்சியில் அமர்ந்த ஆட்சியாளர்களால் இன்று முள்ளிவாய்க்கால் வரை சென்று, உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து துன்பங்களை சந்தித்தித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைந்திருந்தால் இன்று எமது உறவுகள் எம்முடன் இருந்திப்பார்கள். எனவே இனிமேலும் தமிழ் மக்கள் துன்பங்களை சந்திக்கக் கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்