தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவின்போது, தமிழுக்கு தகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் எல்லா இடங்களிலும் திருமுறைகள் ஓதப்படுமென்றும் கோயிலின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் பெருமளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.
“இதற்கு முன்பாக 1997-98ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட்டது” என்று ஜனவரி 21ஆம் தேதியன்று மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
அப்போது பெரிய கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஒரு குறிப்பு அளிக்கப்பட்டது. அதில், 1980 மற்றும் 1997ல் நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாக்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படியே இந்தத் திருக்குடமுழுக்கு விழாவும் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.
‘தமிழுக்கு தகுந்த முக்கியத்துவம்’
இந்த நிலையில், தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சார்பில் அதன் துணை ஆணையர் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், திருக்குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், குடமுழுக்கின் எல்லா நிகழ்வுகளின்போது திருமுறைகள் ஓதப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“கடந்த காலங்களில் கும்பாபிஷேகம் நடந்தபோது, யாரும் பிரச்சனை செய்யவில்லை. தற்போது கோயிலின் நடைமுறை அறியாதவர்கள், இதுபோல சலசலப்பை ஏற்படுத்துகிறார்கள். பெருவுடையார் கோவிலில் நடக்கும் எல்லா பூஜைகளும் திருமுறையும் திருவிசைப்பாவும் இசைத்தே நடத்தப்படுகின்றன.
திருக்குடமுழுக்கு நடக்கும்போது, 12 திருமுறைகளிலும் இருந்து பாடல்கள் பாடப்படும். யாக சாலையில் மட்டுமல்ல, மகாகுடமுழுக்கு நடைபெறும்போதும் இவை பாடப்படும். அதனால், மனுதாரர் இது குறித்து பிரச்சனை எழுப்ப வேண்டியதில்லை. குடமுழுக்கு நிகழ்வில் தமிழுக்கு பிரதானமான இடம் தரப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து ஐந்தாம் தேதிவரை யாக சாலையில் பூஜைகள் நடக்கும்போது 13 ஓதுவார்கள் திருமுறைகளைப் படிப்பார்கள். இந்த நாட்களில் நடராஜர் மண்டபத்தில் திருமுறை பண்ணிசை அகண்ட பாராயணம் செய்ய 35 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று திருமுறை பாராயணத்தை ஓதுவார்களும் குழந்தைகளும் பாடுவார்கள்.
இது தவிர பிப்ரவரி ஒன்றாம் தேதியன்று காளிமேடு அப்பர் பேரவை குழுவினர் திருமுறை பாராயணம் செய்வார்கள். மகா அபிஷேகத்தின்போது ஸ்தல ஓதுவார்கள் திருமுறைகளை பாராயணம் செய்வார்கள்.
நேற்று கொடி மரம் நிறுவப்பட்டபோதுகூட, பெரிய கோயில் வார வழிபாட்டுக் குழுவினர் திருமுறைகளை ஓதினார்கள். குடமுழுக்கு விழாவிற்கு ஆலவாய் அண்ணல் அறக்கட்டளைக் குழுவினர், சிதம்பரம் ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை தேவாரப் பாடசாலை ஆகியவற்றுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
தானம் கொடுப்பதைப் பொறுத்தவரை, பிராமணர்களுக்கு மட்டுமல்லாமல் ஓதுவார்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன” என இந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நன்றி- பிபிசி தமிழ்