Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் ‘ஐ.நா.வில் பிரேரணை நிறைவேறினால் வெளிநாட்டு படைகள் பிரசன்னமாகலாம்’ | தமரா குணநாயகம் எச்சரிக்கை

‘ஐ.நா.வில் பிரேரணை நிறைவேறினால் வெளிநாட்டு படைகள் பிரசன்னமாகலாம்’ | தமரா குணநாயகம் எச்சரிக்கை

4 minutes read

 பிரேரணை மீது இலங்கை வாக்கெடுப்பைக் கோர வேண்டும்

 தமிழ் மக்களின் விடயங்கள் துருப்புச் சீட்டாக மாற்றப்பட்டுள்ளது

 சீன எதிர்ப்புக்காக இலங்கையைப் பயன்படுத்துகிறது மேற்குலம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தினை முன்னேற்றுதல் என்னும் தொனிப்பொருளிலான பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் கூட்டிணைந்து முன்வைத்துள்ள பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் வெளிநாட்டு படைகள் பிரசன்னமாகலாம் இலங்கையில் தங்கு தடையின்றி பிரசன்னமாகலாம் என்று ஐ.நாவுக்கான(ஜெனிவா) முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்தார்.

நிறைவேற்றப்படும் பிரேரணை தமிழ் மக்களின் விடயங்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கானது என்று பிம்பப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், இந்தியாவுடன் இணைந்து இலங்கையின் கேந்திரஸ்தானித்தினை தமக்குச் சார்பாகப் பயன்படுத்தி பூகோள ரீதியான சீன எதிர்ப்பினை முன்னெடுப்பதே இலக்காகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இலங்கை அரசங்கம் பிரேரணையை நிரகாரிப்பதாக தொடர்ச்சியாக கூறிவருகின்றது. உண்மையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அப்பிரேரனை பெயிரிட்டு அறிவிக்கப்பட்டதும் இலங்கையின் சார்பில் உறுப்புரிமை கொண்ட நாடொன்று வாக்கெடுப்பினைக் கோர வேண்டும். அவ்வாறு கோராது நிராகரிப்பதாக பூச்சாண்டி காண்பித்துக்கொண்டிருப்பதால் எவ்விதமான பயனுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின் உள்ளடக்கம் மற்றும் அப்பிரேரணை நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஏற்படவுள்ள அடுத்தகட்ட விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”இலங்கையில் 1987ஆம் ஆண்டு ஜனநாயக மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்ட தருணத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிகளே கோரப்பட்டிருந்தன. ஆனால் இந்திய விமானப்படைகள் உலருணவுப்பொருட்களை வடபகுதியின் வான்பரப்பில் பறந்து வழங்கியிருந்தன.

அதன் பின்னர் ஓரிரு மாதங்களுக்குள் இலங்கைரூபவ் இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய அமைதிகாக்கும் படைகள் வரவழைக்கப்பட்டன.

இந்திய அமைதிகாக்கும் படைகள் வடபகுதிக்கு வந்த வேளையில் அங்கிருந்த நிலைமைகளை அனைவரும் அறிவர். விடுதலைப்புலிகள் கூட அமைதிகாக்கும் படைகளை எதிர்த்திருந்தனர் என்றால் நிலைமைகளை அனைவரும் புரிந்து கொண்டிருந்தனர் என்பது தான் அர்த்தமாகும்.

இந்த நிலையில் தற்போதும் அவ்விதமான நிலைமையொன்றை ஏற்படுத்தவே முயற்சிக்கப்படுகின்றது. குறிப்பாக, இலங்கையின் கேந்திர ஸ்தானத்தினை அடிப்படையாக வைத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையின் முழுப்பகுதியையும் தங்கு தடைகளின் தமது படைத்தரப்புக்கள் உள்ளிட்ட சுயநலன்களுக்கு பயன்படுத்தவே அதிகளவில் ரூடவ்டுபாட்டைக் கொண்டுள்ளன.

அத்துடன் அமெரிக்காவின் பூகோள சீன எதிர்ப்பின் ஒரு அங்கமாக இந்து – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னத்தினை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவை முன்னிலைப்படுத்தி இலங்கையைப் பயன்படுத்தவே விளைகின்றன. இதற்காகவே அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ள நான்கு நாடுகளின் கூட்டான ‘குவாட்’ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாலைதீவுரூபவ் இலங்கைரூபவ் இந்தியா பாதுகாப்பு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக அமெரிக்கா தனது படைகள் இலங்கையின் விமானநிலையங்கள்,  துறைமுகங்களை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கே முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே 2017இல் ‘எக்ஸா’ உடன்படிக்கையை கைச்சாத்திட்டதன் மூலமாக கணிசமான அளவில் இலங்கையில் பாதுகாப்பு படைகள் கூட்டுப்பயிற்சிகளையும் திறந்த பயணங்களையும் மேற்கொள்கின்றன. இந்த நிலைமையை மேலும் மேம்படுத்தவே எம்.சி.சி மற்றும் சோபா ஒப்பந்தங்களைச் செய்வதற்கு அமெரிக்க முனைந்து வருகின்றது.

தற்போதைய நிலையில் எம்.சி.சி.ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் திரைமறைவில் தனியார் மயப்படுத்தலின் ஊடாக வளங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் பின்னணியுடன் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன. இது நாளடைவில் அமெரிக்காவின் செல்வாக்கிற்கு முழுமையாகச் சென்றுவிடும் நிலையே உள்ளது.

இந்நிலையில், ‘சோபா’ ஒப்பந்தத்தினை கைச்சாத்திடுவதற்கு பெருமளவான முயற்சிகள் நடைபெறுகின்றன. இதுவும் படைகளின் பிரசன்னத்தினை அடிப்படையாகக் கொண்டவை தான்.

இந்தப் பின்னணியில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், மனிதாபிமான செயற்பாடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட விடயப்பரப்புக்கள் காணப்படுகின்றன.

இந்தத் ‘தலைப்புக்களின் கீழேயே’ அண்மைய தசாப்தத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்தின் படைகள் பிற நாடுகளுக்குள் பிரவேசித்துள்ளது. உதாரணமாக கூறுவதாயின், ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மேற்குலப்படைகள் பிரவேசித்தமையை காணக்கூடியதாக உள்ளது.

சிரியாவிலும் அவ்வாறான நிலைமை காணப்பட்டபோதும் அங்கு அப்படைகளின் இலக்குகள் வெற்றிபெறவில்லை. ஆகவே இந்த விடயத்தில் இலங்கைப் பிரஜைகள் அனைவரும் பொறுப்புடனும் அவதானமாகவும் இருக்கவேண்டும்.

துருப்புச்சீட்டாகும் தமிழ்மக்கள்

தமிழ் மக்களின் மீது அதிகளவான கரிசனைகளைக் கொண்டே மேற்குலக நாடுகள் ஐ.நா.அரங்கில் பிரேரணைகளைக் கொண்டுவருவதாக காண்பிக்கின்றது. இதனை தமிழ் மக்கள் நம்பி ஏமாந்துவிடக்கூடாது. 

இதில் இந்தியாவுக்கும் பங்குகள் உள்ளன. இந்திய, மேற்குல கூட்டானது, தமிழர்களின் விடயத்தினை வைத்தே இலங்கையின் சீனாவுக்கு எதிரான தமது காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றன என்ற யதார்த்தத்தினைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த வலைக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொண்டால் உள்நாட்டில் இனங்களுக்கு இடையிலலான பிரிவினைகளே அதிகமாக இருக்கும்.

இதனால் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படாது மேலும் மேலும் அதிகரித்தே செல்வதற்கு வித்திடுவதாக இருக்கும். ஆகவே தாம் பிறியதொரு தரப்பின் நலன்களுக்கு பயன்படுத்தப்படுகின்றோம் என்பதை தமிழ் மக்கள் பூரணமாக விளங்கிக்கொள்ளவது அவசியமாகின்றது.

அரசு வாக்கெடுப்பைக் கோருதல் வேண்டும்

தற்போதைய அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பிலான விடயப்பரப்பு முன்னெடுக்கப்படும் தருணத்தில் உறுப்புரிமை கொண்ட நாடொன்றைப் பயன்படுத்தி வாக்கெடுப்பினைக் கோர வேண்டும். அதனைவிடுத்து வெறுமனே பார்வையாளராக இருந்துவிட்டு பிரேரணையை ஏற்கவில்லை. தீர்மானத்தினை நிராகரிக்கின்றோம் என்று கூறுவதால் எவ்விதமான பயனுமில்லை. இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பினைக் கோருவதன் ஊடாகவே சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றது என்பது வெளிப்படும். இந்த விடயத்தினை பலர் அறிந்திருப்பதில்லை.

வெறுமனே இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக ஊடகங்களுக்கு கூறிவருவதால் ஜெனிவாவில் எதுவும் நிகழ்ந்துவிடாது.

தீர்மானம் நிறைவேற்றப்படும் போது இலங்கையும் பார்வையாளராக இருக்குமே தவிர அந்தசந்தர்ப்பத்தில் இலங்கையால் எதனையும் பிரதிபலிக்க முடியாது.

ஆகவே வாக்கெடுப்பினைக் கோருவதே பொருத்தமான செயற்பாடு. அதற்காக உறுப்புரிமை கொண்டதொரு நாட்டைதயார்ப்படுத்தவேண்டியது கட்டாயமாகின்றது. அவ்விதமான செயற்பாடு இம்முறை நடைபெற்றதா என்பது கேள்விக்குறாகின்றது. ஆனால் பிரேரணையை நிராகரிப்பதாக தொடர்ச்சியாக கூறப்படுகின்றது. இறுதியாக எமக்கு எதுவும் தெரியாது என்று பதிலளிக்க முடியாது. அமைதியாக இலங்கை அமர்ந்திருந்தால் அது பிரேரணையை ஏற்றுக்கொள்வதாகவே அமையும்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More