Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் புதை குழி | முல்லையின் ஹர்வி

புதை குழி | முல்லையின் ஹர்வி

1 minutes read

என் தமக்கையும் தனயனும் அங்குதான் மரித்தார்கள் ,
இறப்பை அறிந்தேன் நான் – ஆயினும்
பிணங்களை பார்க்காமலே!!
மீண்டும் அவர்தம் உடலுக்கு,
எங்கு நான் தேடிச் செல்ல???

அழவும் அரற்றவும் அவர்களுக் கென்று நான் மட்டுமே!!!
கிண்டிய புதை குழியாவிலும்
சிதைக்கப்பட்ட என்புத் தொகுதி
தனியாக பிரித் தெடுக்கப் பட்ட தலைகளின் குவியல்கள்
என்னை தேடு என்றார்கள், அதனிடை
என்னவர்களை கண்டு பிடிப்பதெப்படி???

மீள நினைந்துருக நாள் இருக்கு
ஆனால் என்னவர் வருவரோ??
சில தறப்பாள் அரண்மனைகள்
மண்டை ஓட்டு அஸ்திவாரத்திற்கு மேலே ஓய்வெடுக்கின்றன..

குண்டுகளுக்கு பயந்து தினம் தோண்டும் வங்கர்களில்
கணப் பொழுதுகளில் பெய்யும் குருதியின் ஈரம்
இன்னமும் கசிந்து கொண்டிருக்கின்றது
மப்பற்ற ஆழிப் பேரலையாக !!

களையப்பட்ட ஆடைக் குவியல் களிடையேயும்
அவர்களை தேடு என்றார்கள்!!
கணக்கிட முடியாத ஆத்மாக்களின் உக்கல் ஆடைக்குள்
என்னவர்களை எப்படி பிரித்தறிவேன்???

மனுநீதி கேட்பதற்கு மண்டியிட்டு
வரை படத்தோடு காத்திருந்தேன்,
உணவற்றும் போராடினேன்,
உறக்க மின்றியும் காத்திருந்தேன்
வந்து விழுந்த செய்தி எல்லாம்
அலைச்சலில் முற்றுப்புள்ளி..

இனமும் இரத்தமும் ஒன்றாகி
இதயங்களின் இரணமாய்
இம்சித்துக் கொண்டிருக்கின்றது
மீண்டும் என்னவர் மீள கல்லறைகள்
உயிர்த் தெள வேண்டுமே!!!!!
நம்புகிறேன் !!!

மாண்டவரை பழி சுமத்தி
மீண்டவர் ஆணையிடுகிறார்
நிந்திக்க தடையென்று
ஆயினும் – கொன்றும்
திண்டும் கழித்த தரை மணலில்
என்னவர்களை கோபுரம் கட்டி
வழிபடப் போகிறேன்….

நினைவேந்திக் கொள்வதற்கு
கைகளில் சிட்டிகை ஏந்த மனம் கனக்கிறது
மதுரையை எரித்த கண்ணகி போல் நானாகி விட்டாலும்
நடை முறைச் சாத்தியம் இல்லை

இனிப் புதுயுகத்தில்
மாற்றங்கள் வரலாம்,
மரணமும் நிகழலாம்,
நினைவுகளை இவை
மறைத்து விடும் என்றால்!!!
ஆழப் பெருங் கடலின் அழியாச் சுவடுகளாய்,
மீள இன்றும் பார்கிறேன்,
கண்ணீரும் கவலையும் எனதாகிக் கொள்கிறது!!!!!!!
கனவுகள் வந்து போகும்
நினைவுகளின் வலிகளை அழித்திட இயலா….

முல்லையின் ஹர்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More