September 21, 2023 1:53 pm

இரு நிபந்தனைகளுடன் ரணிலுடன் தமிழ் அரசு இன்று பேச்சு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இரா. சம்பந்தன் தலைமையில் பங்கேற்கும் அந்தக் கட்சி இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பேச்சு நடத்தவுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளைமறுதினம் 11ஆம் திகதி தொடக்கம் 3 நாள்கள் பேச்சு நடத்தவுள்ளார். அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியாகச் செயற்படும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இன்று பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப்பெறாமையால் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்று புளொட் மற்றும் ரெலோ என்பன அறிவித்துள்ளன.

இந்தநிலையில் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். இதில் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவும் பங்கேற்றிருந்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தனால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்,

“தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமாக நாம் அரசோடு பேசி முடிவெடுக்கத் தயார்.

வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் சரித்திரபூர்வமான வாழ்விடங்கள் என்ற அடிப்படை சர்வதேச ரீதியாகவும் நாட்டுக்குள்ளேயும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரே அலகாக உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படைக்கு மாறாக எந்தப் பேச்சுக்களிலும் ஈடுபட நாம் தயாராக இல்லை.

இந்த அடிப்படையில்தான் இன்றைய சந்திப்பில் பங்குபற்றுவோம்.” – என்றுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்