Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் அடிப்படை உரிமையை கேட்டால்கூட அதை தமிழீழம் என்கிறார்கள்! ஜூனியர் விகடனுக்கு விக்கி பதில்

அடிப்படை உரிமையை கேட்டால்கூட அதை தமிழீழம் என்கிறார்கள்! ஜூனியர் விகடனுக்கு விக்கி பதில்

3 minutes read

ஆகஸ்ட் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல். இது குறித்து இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரான விக்னேஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ் மக்களுக்கு எத்தகைய தேர்தலாக இருக்கும்?’’

“வட கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேர்தலை ஒரு போராட்டமாகத்தான் அணுகிவந்துள்ளனர். இந்த முறையும் அப்படித்தான். நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான, உரிமை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடையிலான தேர்தலாகத்தான் இது இருக்கும். மக்கள் நீதியையும், தர்மத்தையும், உரிமையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு.”

“இலங்கை தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாகத் தமிழ் அரசியல் கட்சிகள் இவ்வளவு பிளவுபட்டு நிற்பது ஏன்?’’

“எல்லோரும் ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், கொள்கை தவறுகிறவர்களுடன் எவ்வாறு சேர்ந்து பயணிக்க முடியும்? அது சாத்தியமே இல்லை. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் சேராது. தன்னலமான அரசியலையும், மக்களை ஏமாற்றுகின்ற போக்கையும், வெளிப்படைத்தன்மை இல்லாத இயல்பையும் கொண்ட ஒரு சில தமிழ்த் தலைவர்களால்தான் இத்தகைய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. வட கிழக்கில் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ள மிகப்பெரிய கூட்டணி எங்களுடைய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிதான். மக்கள் எம்மை ஏற்பார்கள். பிளவுகள் இல்லாதொழிந்துவிடும் என்பது எமது நம்பிக்கை.”

“குறிப்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய மூன்று அணிகள் தனித் தனியாகப் போட்டியிடுவது ஏன்?’’

“ஒவ்வொருவரும் சுயநல எண்ணங்களில் அமிழ்ந்திருப்பதை நான் காண்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயநல அரசியலை நடத்தியதால் அவர்கள் மாற்றப்பட வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமீது அதிருப்திகொண்ட, அதேநேரம் தமிழ்த் தேசிய உணர்வுகொண்ட அனைவரும் ஒரே அணியில் நின்று ஒரு மாற்று அணியை உருவாக்குவது அப்போது எங்கள் நோக்கமாக இருந்தது. நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்தோம். சிலர் அதற்குத் தயாராக இல்லை. அதனால் உடன்பாடுகள் எட்டாமல் போயின. இப்போது தேர்தலில் எங்கள் கொள்கையை மக்கள் முன்னால் வைத்துள்ளோம். அதே நேரம் தமிழ்த் தலைவர்கள் என்று கூறப்படுபவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறோம். மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள். மூன்று அணிகளுக்கு இடையே கொள்கை அளவில் தமிழ்த் தேசிய நிலைப்பாடு இருந்தாலும், அணுகுமுறைகள் மற்றும் அந்தக் கொள்கைகள் மீதான பற்றுறுதி ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் இருக்கின்றன. தனித்து வாழ்வது சேர, சோழ, பாண்டியர் காலத்திலிருந்து பேணப்பட்ட தமிழர்களின் சிறப்பியல்புதானே!’’

“நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகியது ஏன்?’’

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்னை வற்புறுத்தியே அரசியலுக்கு அழைத்துவந்தார்கள். நான் தெற்கில் வாழ்ந்து வந்திருந்தாலும், பத்து வருடங்கள் வட கிழக்கில் நீதிபதியாகக் கடமையாற்றியவன். வடக்குக்கு வந்ததும் அந்தப் பகுதி மக்களின் மனங்களைப் புரிந்துகொண்டேன். ஆனால், என்னைக் கூட்டி வந்தவர்களோ வட கிழக்கில் வாழ்ந்தாலும் கொழும்பு மனநிலையில்தான் இருந்தார்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தடையாக இருந்தார்கள். வடமாகாண சபையில் இனப்படுகொலை எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது உள்ளிட்ட பல காரியங்களுடன் அவர்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஏனென்றால், சுயநல காரணங்களுக்காக அவர்கள் இலங்கை அரசைக் காப்பாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். இறுதியில், எனக்கெதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து எனது பதவியைப் பறிக்க முற்பட்டார்கள். ஆனால், மக்கள் அதற்கு வாய்ப்பு தரவில்லை. தமிழ் மக்களின் கூட்டு நலன்களுக்கு எதிராக முழுமையாக மாறிவிட்ட அவர்களுடன் நான் எப்படிப் பயணிப்பது?’’

“ராஜபக்சேவின் கட்சிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?’’

“தெற்கில் இனவாதம் கடுமையாக இருக்கிறது. போர் வெற்றியையும் இனவாதத்தையும் அங்கு அவர்கள் தூண்டுகிறார்கள். நாங்கள் எங்கள் மக்களின் அடிப்படை உரிமைகள்பற்றிப் பேசினால்கூட அதை, தமிழீழம் கோருகிறோம் என்று சொல்லியே அரசியல் செய்கிறார்கள். எம்மை பயங்கரவாதிகள் என்று சித்திரிக்கிறார்கள்.

தெற்கில் யார் வென்றாலும் எங்களுக்கு ஒன்றுதான். அப்படித்தான் கடந்தகால வரலாறு முழுவதும் இருந்திருக்கிறது.’’

“ராஜபக்சே சகோதரர்கள் நாட்டை மேலும் ராணுவமயப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறதே?’’

“வட கிழக்கு ராணுவமயப்பட்டே இருக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இப்போது `கொரோனா தடுப்புத் திட்டங்கள்’ என்ற பெயரில் வடக்கு மேலும் ராணுவமயப்படுத்தப் படுகிறது. பாகிஸ்தானின் பழைய ஆட்சிமுறை இங்கு நிறுவப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற் கில்லை.’’

நன்றி – ஜூனியர் விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More