Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் இனி ஜெனீவா தீர்மானம் பலவீனப்படும் | முன்னாள் இராஜதந்திரி நேர்காணல்

இனி ஜெனீவா தீர்மானம் பலவீனப்படும் | முன்னாள் இராஜதந்திரி நேர்காணல்

4 minutes read

“தற்போதை நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஆதரவும் கிடைத்திருக்கின்றது. அரசை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவிலும் எதிரொலிக்கும். அதனால் ஜெனீவா தீர்மானங்கள் இனிமேல் பலவீனப்பட்டுப்போய்விடும்” என்று சொல்கின்றார் முன்னாள் இராஜதந்திரியான ஐயம்பிள்ளை தர்குலசிங்கம்.

ஜெனீவா உட்பட பல நாடுகளின் தலைநகரங்களில் இராஜதந்திரியாகப் பணிபுரிந்த ஐயம்பிள்ளை தர்குலசிங்கம் பொதுத் தேர்தலின் முடிவுகள் குறித்தும், சர்வதேச அரங்கில் அதன் தாக்கம் தொடர்பாகவும் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார். அவரது நேர்காணலின் முக்கியமான விபரம் வருமாறு;

கேள்வி: பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெருவெற்றியைப் பெற்றிருக்கின்றது. வடக்கு, கிழக்கில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இவை குறித்த உங்களுடைய கருத்து என்ன?

பதில்: ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தேர்தலுக்கு முன்னர் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில், தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் தமது அரசில் பங்காளிகளாக இணைந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இப்போது மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு அந்த அழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை நிரூபித்திருக்கின்றது. அது சாதகமான நிலைப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

கேள்வி: எந்த வகையில் அவ்வாறு சொல்கின்றீர்கள்?

பதில்: எப்படியான்றால் யாழ்ப்பாணத்தில் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு தொகுயைக் கைப்பற்றியிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. டக்களஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. வடபகுதியில் இரண்டு ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாக செல்வாக்கான கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வடக்கில் மட்டுமன்றி, கிழக்கிலும் இந்த நிலைமைதான் உள்ளது. மலையகத்திலும் இதேபோன்ற ஒரு வெற்றியைக் காணமுடிகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் நான் இதனைச் சொல்கின்றேன்.

கேள்வி: தென்பகுதி தேர்தல் முடிவுகள் ஒரு வகையில் சிங்களத் தேசியவாதப் பாதையில் அரசங்கம் செல்வதற்கான சாத்தியங்களைக் காட்டியிருப்பதாகச் சொல்லப்படுகின்நதே?

பதில்: சிங்களத் தேசியவாதம் எனச் சொல்லப்படுவது தமிழத் தேசிவாதம் பேசுபவர்களின் கருத்து. அவர்கள்தான் அப்படிச் சொல்கின்றார்கள். சிங்களத் தேசியவாத் என்ற எண்ணக்கருவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எமது தமிழ்த் தரப்புக்கள் அதனைச் சொல்வதால் தமிழ் ஊடகங்களும் அதனைப் பய்படுத்துகின்றன. சிங்களவர்கள் – சிங்களக் கட்சிகள் பொதுக் கூட்டங்களில் இனங்களைக் குறிப்பிடுவதில்லை. அவர்கள் நாட்டைத்தான் குறிப்பிடுகின்றன.

தமிழ்த் தரப்பினர் ஐ.தே.க.வை மென்போக்கில் அணுகுவதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சிங்களத் தேசியவாதக் கட்சி எனச் சொல்வதும் மிகவும் தவறான அணுகுமுறை என்பதே எனது கருத்து. அந்த நிலைப்பாட்டை – கருத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

கேள்வி: ஐ.தே.க. இன்று எதிர்கொண்டுள்ள பாரிய தோல்விக்குக் காரணம் என்ன?

பதில்: ரணில் விக்கீரமசிங்க ஒரு தோல்வியின் வெற்றி நாயகன். அவரது தற்போதைய தோல்விக்குப் பல காரணங்கள் சொல்லலாம். அவர் அரசியலில் ஒரு மதியூகியாகச் சொல்லப்பட்ட போதிலும், நீண்டகாலம் தொடர்ச்சியாக அவர் மற்றவர்களுக்கு இடம்கொடுக்காமல் தலைமையைத் தக்கவைத்துக்கொண்டமை முதலாது காரணம். நல்லாட்சி எனக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் இடம்பெற்ற மத்திய வங்கியில் இம்பெற்ற ஊழல்கள் இரண்டாவது காரணம். புலனாய்வுத் தகவல்கள் துல்லியமாகக் கிடைத்திருந்த போதிலும் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மூன்றாது காரணம். அதற்குப் பொறுப்பேற்க மறுத்திருந்தார். இலங்கையின் மிகப் பழைய கட்சியான ஐ.தே.க.வை அவர் நடத்திய முறையை கட்சி ஆதரவாளர்களும் பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைவிட தலைமைத்துவத்தில் அவர் விட்ட தவறுகளும் இற்குக் காரணம்.

2005 இல் நடைபெற்ற நிகழ்வும் இந்த நிலைமைக்குக் காரணம். அப்போது தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு விடுதலைப் புலிகள் கோராமல் இருந்திருந்தால் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார். அதன்தொடர்ச்சியாக இப்போதைய நிலைமை அவருக்கோ கட்சிக்கோ ஏற்பட்டிருக்காது.

கேள்வி: தமிழ்ப் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவுக்குக் காரணம் என்ன?

பதில்: ஒரே அரசியல் கோஷத்தை வைத்து மக்களை வழிநடத்த முடியாது. இன்று உலகம் மாற்றமடைந்து செல்கின்றது. அன்று சொன்ன அதே விடயங்களை இப்போதும் சொன்னால் அதனை இளைய தலைமுறை ஏற்றுக்கொள்ளாது. அதேவேளையில், அவர்களிலிருந்து பிரிந்து சென்றவர்களும் அதே தீவிரவாதத்தைத்தான் பேசுகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராகவில்லை.

அங்கையன் யாழ்ப்பாணத்தில் பெற்ற வெற்றி எதிர்காலத்தில் என்ன நடைபெறப்போகின்றது என்பதைக் காட்சியிருக்கின்றது. 1960 களில் தமிழ்க் கட்சிகளில்தான் முஸ்லிம்கள் இருந்தார்கள். பின்னர் அவர்கள் அதிலிருந்து பிரிந்து தேசியக் கட்சிகளுடன் இணையத் தொடங்கிவிட்டனர். மக்களுக்குத் தேவையானதைப் பெற்றுக்கொடுத்தனர். இதேபோன்ற பாதையில்தான் தொண்டமானும் சென்றார். அவர்மூலமாக மலையகத்தின் அபிவிருத்திக்கு அவர் வழிவகுத்தார்.

அதேபோன்ற பாதையை தமிழ்க் கட்சிகள் ஏற்கவில்லை. ஆனால், நல்லாட்சியில் அரச அனுசரணையுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டனர். இதனை மக்கள் ஏற்கவில்லை.

கேள்வி: சர்வதேச உறவுகளை – குறிப்பாக ஜெனீவா மனித உரிமைகள் போன்ற விடயங்களில் கோத்தாபய ராஜபக்‌ஷ அரசு எவ்வாறு கையாளும்?

பதில்: நான் ஜெனீவாவிலும் இராஜதந்திரியாகப் பணியாற்றியுள்ளேன். ஜெனீவா என்பது ஒரு பெரிய விடயமல்ல. ஜெனீவா ஒரு பேச்சு மண்டபம் மட்டும்தான். ஐ.நா.வில் பலமுள்ளது எது எனக் கேட்டால் அது பாதுகாப்புக் கவுன்ஸில்தான்.

அதேவேளையில் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை இலங்கை ஏற்றுக்கொண்டு இணை அனுசரணை வழங்கியதை இலங்கை மக்கள் – சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போதை நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஆதரவும் கிடைத்திருக்கின்றது. அரசை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவிலும் எதிரொலிக்கும். அதனால் ஜெனீவா விடயங்கள் பலவீனப்பட்டுப்போய்விடும்.

கேள்வி: பொது ஜன பெரமுனவுக்கு இந்தளவு மக்கள் ஆதரவு கிடைத்தமைக்குக் காரணம் என்ன?

பதில்: இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸை அரசாங்கம் இலங்கையில் கட்டுப்படுத்தியிருக்கின்றது. செல்வந்த – வளர்ச்சியடைந்த நாடுகளே இதனைக் கட்டுப்படுத்துவதில் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், வரையறுக்கப்பட்ட வழங்களுடன் கோத்தாபாய இதனை கட்டுப்படுத்தியமைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது.

இரண்டாவது போதைவஸ்த்துக்காரர், பாதாள உலக குற்றவாளிகளைகட்டுப்படுத்துவதில் அரசாங்கம் வெற்றிபெற்றிருக்கின்றது. இதனை கோத்தாபய ராஜபக்‌ஷ அரசினால்தான் கட்டுப்படுத்த முடியும் என மக்கள் நம்புகின்றார்கள். இதனைவிட ஊழலற்ற, சிறிய அமைச்சரவையைக் கொண்ட அரசாங்கத்தை அவர் அமைப்பார் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். இவை அனைத்தும்தான் அவர்களுடைய தேர்தல் வெற்றிக்குக் காரணம்.

ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு ஐரோப்பிய நாடுகள் நெருக்கடிகளைக் கொடுக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தத் தேர்தலின் முடிவுகள் அந்த நிலையையும் மாற்றிவிடும்.

நன்றி – தினக்குரல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More