Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் 13ஐ நீக்க முனைவதே முட்டாள் தனமானது | திஸ்ஸ விதாரண

13ஐ நீக்க முனைவதே முட்டாள் தனமானது | திஸ்ஸ விதாரண

5 minutes read
தமிழர்களிற்காக நாமே குரல் கொடுத்தவர்கள்; வடக்கிலும் களமிறங்கும் எம்மை  ஆதரியுங்கள்: திஸ்ஸ விதாரண கோரிக்கை! | Tamil Page

13 ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையில் சிறந்த கட்டமைப்பாகவே உள்ள நிலையில் புதிய அரசியலமைப்பில் அதனை மேலும் வலுவானதாக மாற்றுவதற்கு பதிலாக, முழுமையாக நீக்க வேண்டும் என்று கருதுவதோ, செயற்படுவதோ முட்டாள் தனமானதொரு நடவடிக்கையாகவே இருக்கும் என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். 

13 ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையில் சிறந்த கட்டமைப்பாகவே உள்ள நிலையில் புதிய அரசியலமைப்பில் அதனை மேலும் வலுவானதாக மாற்றுவதற்கு பதிலாக, முழுமையாக நீக்க வேண்டும் என்று கருதுவதோ, செயற்படுவதோ முட்டாள் தனமானதொரு நடவடிக்கையாகவே இருக்கும் என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். 

கேள்வி:- தற்போதைய  அரசியல் சூழலில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக உள்ளது?

ஜெனீவா அறிக்கையை விமர்சிக்க திஸ்ஸ விதாரணவுக்கு அருகதையில்லை! | தினகரன்

கேள்வி:- தற்போதைய  அரசியல் சூழலில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக உள்ளது?

பதில்:- எங்களுடைய கட்சியின் கொள்கையில் மாற்றமில்லை. சோஷலிசத்தினை அடிப்படையாக் கொண்டுள்ள நாம், அதிகாரங்கள் மக்களிடத்தில் அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அதாவது, அனைத்துப் பிரஜைகளும் பேதங்களின்றி சமத்துவமாக, அதிகாரங்களை அனுபவிப்பதற்குரிய  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

அதிகாரங்கள் கொழும்பை மையப்படுத்தி குவிவதை தவிர்த்து மாகாணசபைகள், மாவட்ட சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், கிராமிய சபைகள் வரையில் படிமுறை ரீதியாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்தியாவைப் பார்த்தீர்கள் என்றால் அந்நாட்டின் அரசியலமைப்பில் பஞ்சாயத்து முறைக்கு கூட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. 

ஆகவே அடிமட்டம் வரையில் அதிகாரங்கள் பகிரப்படுகின்ற போதுதான் நிலையான நல்லாட்சியொன்று தோற்றம் பெறும். அதனை நோக்கிய நகர்வுகளையே எடுக்க வேண்டியமை அவசியமாகின்றது. 

கேள்வி:- அதிகாரப்பகிர்வினை ஆதரிக்கும் நீங்கள், தற்போதைய அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்ட ஏற்பாடு தொடர்பில் எவ்விதமான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றீர்கள்? 

பதில்:- 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதிலிருந்து எமது கட்சி அக்கட்டமைப்பில் பங்கேற்று வருகின்றது. ஆரம்பத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொண்டமைக்காக உயிர் அச்சுறுத்தலுக்கு கூட எமது தோழர்கள் முகங்கொடுத்திருந்தார்கள். தற்போதும் எமது கட்சி மாகாண சபை முறைமை தொடர வேண்டும் என்றும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. 

அரசியலமைப்பு ரீதியாக 13 ஆவது திருத்தச் சட்டமே அதிகாரங்களை பகிர்வதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒன்றாக இருக்கின்றது. ஆகவே அந்த ஏற்பாட்டினை நடைமுறைச் சாத்தியமாக்க வேண்டும். மாகாண சபை கட்டமைப்பு  தமிழ் மக்களுக்கு விசேடமானது என்ற நிலைப்பாட்டிற்கு அப்பால் ஏனைய பிராந்தியங்களில் உரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு வினைத்திறனான நிர்வாகத்தினை முன்னெடுப்பது அவசியமாகின்றது. 

அனைத்து மாகாணங்களில் உள்ளவர்களும் தமக்கான தீர்மானங்களை எடுப்பதற்கான உரிமையை வழங்குவதே பொருத்தமானதாகும். அவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றபோது பிரிவினையை மையப்படுத்திய சிந்தனைகளும் தோற்றம் பெறாதிருக்கும். மக்கள் அதிகாரங்களை அனுபவிக்கின்றபோது பிரிவினை தொடர்பிலான சிந்தனைகளுக்கு துணைபோக மாட்டார்கள். 

கேள்வி:- ஜனாதிபதி, பொதுத்தேர்தல்களின் பின்னர் 13ஆவது திருத்தச்சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் ஆரம்பத்தில் காணப்பட்டாலும் அண்மைக்காலமாக ’13’ முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகின்றது. இதுபற்றிய கலந்துரையாடல்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதா?

பதில்:-13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் அரசாங்கத்தினுள் உத்தியோக பூர்வமாக நடைபெறவில்லை.  இந்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு எம்மை அழைப்பதும் கிடையாது. எங்களுடைய முன்மொழிவுகளை செவிமடுப்பதும் இல்லை. ஊடகங்கள் ஊடாகவே 13 இற்கு எதிரான விடயங்களை நான் அறிந்து கொள்கின்றேன். 

இதனைவிடவும், மாகாண சபைகள் தொடர்பான விடயத்திற்காக நியமிக்கப்படும் அமைச்சர், இராஜங்க அமைச்சர் ஆகியோர் அந்த முறைமையை ஏற்றுக்கொள்கின்ற அல்லது ஆதரிக்கும் நபர் ஒருவரையே நியமித்திருக்க வேண்டும். ஆனால் மாகாண சபை முறைமையை எதிர்க்கும் ஒருவரிடமே மாகாண சபை விடயங்களை  கையாள்வதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறான தீர்மானமானது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்.  

கேள்வி:-13ஆவது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு  மூன்று தசாப்தங்கள் கடந்து விட்ட நிலையில் அச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதென்பது சாத்தியமானதொன்றாக இருக்குமா?

பதில்:- 13ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படுகின்ற காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தான் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆரம்பகாலத்திலிருந்தே வடக்கில் பிரிவினை கோட்பாடு உக்கிரமடைந்திருந்தமையால் தான் தென்னிலங்கையில் சந்தேகங்கள் அதிகமாக வலுத்திருந்தன. 

ஆனால் தற்போது வடக்கின் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஒருமித்த நாட்டிற்குள்ளே தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டாகிவிட்டது. ஆகவே தென்னிலங்கை தரப்புக்கள் தொடர்ந்தும் சந்தேகத்துடன் இருக்க வேண்டியதில்லை. அதிகாரங்களை நடைமுறைச் சாத்தியமாக்குவது தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடலை முன்னெடுத்து தீர்மானங்களை எடுக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது. 

கேள்வி:- புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா? ஆறுமாத காலத்தினுள் தயாரிப்பது சாத்தியமாகுமா?

பதில்:- உத்தியோக பூர்வமாக அரசாங்கத்தினுள் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், கடந்த காலத்தில் அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட குழுவினால் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட 30விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளும் அந்த அறிக்கையில் காணப்பட்டிருந்த பரிந்துரைகளை ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருந்தன. ஆகவே அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நடவடிக்கைகளை எடுத்தால் ஆறுமாத காலத்தினுள்ளேயே புதிய அரசியலமைப்பினை தயாரிக்க முடியும். 

கேள்வி:- புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படுகின்றபோது 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகின்றதே?

பதில்:- 13ஆவது திருத்தச்சட்டத்தில் குறைபாடுகள் இருக்கின்றன. தனியே இந்த திருத்தச்சட்டத்தில் மட்டுமல்ல, உள்ளூராட்சி மன்றங்கள், மத்திய அரசாங்கம் என்று அனைத்து கட்டமைப்புக்களிலும் குறை,நிறைகள் இல்லாமலில்லை. சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அதனை பிரயோக ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற போதுதான் குறைபாடுகளை அவதானிக்க முடியும். அவற்றை உரிய கலந்துரையாடல்கள் மூலமாக தீர்த்துக்கொள்ள முடியும். 

இதனைவிட 13ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையில் சிறந்த கட்டமைப்பாகவே உள்ளது. அவ்வாறானதொன்றை மேலும் வலுவானதாக மாற்றுவதற்கு பதிலாக, முழுமையாக நீக்க வேண்டும் என்று கருதுவதோ, செயற்படுவதோ முட்டாள் தனமானதொரு நடவடிக்கையாகவே இருக்கும். 

கேள்வி:-13 ஆவது திருத்தம் தொடர்ச்சியாக நீடிக்குமாயின் இந்தியாவின் தலையீடுகளுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாக நேரிடும் என்ற தர்க்க ரீதியான கருத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- இறைமை உள்ள நாடான இலங்கையின் இந்தியாவுக்கு தலையீடுகளைச் செய்ய முடியாது. எமது சுயாதீனம், சுதந்திரம் என்பனவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமாகின்றது. இதேநேரம், கடந்த காலத்தலைவர்கள் தவறான முடிவுகளை எடுத்தமையால் தான் இந்தியா தலையீடுகளைச் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனை உணர்ந்து தற்போதைய அரசத் தலைவர்கள் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான நியாயமான தீர்வினை பெறுவதற்காக இந்தியாவைத் தலையீடு செய்யுமாறு தொடர்ச்சியாக கோரி வருகின்றார்கள். அவ்விதமான நிலைமையானது தவிர்க்கப்பட வேண்டும். எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. 

நேர்காணல்: ஆர்.ராம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More