Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த முடியுமா? | சுரேஷ் செவ்வி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த முடியுமா? | சுரேஷ் செவ்வி

5 minutes read

(நேர்காணல்:- ஆர்.ராம்) 

இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் கொண்டு செல்வதற்கு முன்னதாக பல படிகளைத் தாண்ட வேண்டியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கான பொது ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடயத்தில் மூன்று அரசியல் கூட்டுக்கள் ஒன்றுபட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்:- இதுவொரு நல்ல தொடக்கம். இது நீடிக்க வேண்டும். இதுதான் எமது நீண்டகால அவாவாகவும் இருந்தது. ஆயுதப் போராட்ட காலம் தொட்டு இன்றுவரை நாம் ஐக்கியத்தையே வலியுறுத்தி வந்துள்ளோம். இலங்கை தொடர்பான ஐ.நா.நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் தமிழர் தரப்பில் மாறுபட்ட சிந்தனைகளும் மாறுபட்ட கருத்துகளும் இருந்து வந்துள்ளன. 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வரையறுக்கப்பட்டதொரு வரம்பெல்லைக்குள் மட்டுமே பணியாற்ற முடியும். அதனால் ஒரு நாட்டை தண்டிக்க முடியாது. குறிப்பிட்ட நாட்டின் ஒப்புதலுடனேயே எதனையும் செய்யலாம். இந்த அடிப்படையில் கடந்த ஆறு வருடங்களாக இலங்கை அனுசரணையுடன் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு தீர்மானங்களின் ஊடாக 2021 மார்ச் வரை அவகாசம் வழங்கப்பட்டது. 

இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் காரணமாக இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் காலத்தை வீணடித்தது. ஏனைய தமிழ்க் கட்சிகள், அமைப்புகளைப் பொறுத்தவரையில் 2015முதல் 2021வரை கால அவகாசத்தை நீடித்துக்கொண்டு செல்வது அர்த்தமற்றதாகும். இதனை அடுத்த கட்டமாக சர்வதேச நீதி விசாரணைக்காக பாரப்படுத்த நகர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டே வந்தது.

தற்பொழுது கடந்த கால தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற தவறியமையால், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதானது ஆரோக்கியமான விடயமாகும்.

கேள்வி:– பொது ஆவணத்தில் உங்களுடைய கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் கையொப்பம் இடாமைக்கு அதன் தலைவரான விக்னேஸ்வரனே பொறுப்பாக இருப்பதாக சுமந்திரன், கூறியுள்ளாரே?

பதில்:- இது ஒரு தவறான செய்தி. மூன்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டும் கையெழுத்திடுவதென வவுனியா கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை. அங்கு அவ்வாறான முடிவெடுத்ததாக ஒருங்கிணைப்பாளர்கள் யாரும் கூறவில்லை. அதில் கலந்துகொண்ட எமது கூட்டணியின் பிரதிநிதிகள் அவ்வாறு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்கள். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் புதியதும் பழையதுமான பத்து கட்சிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் கையெழுத்திட்டிருந்தால் அதுவொரு கனதியான ஆவணமாக அமைந்திருக்கும். இப்பொழுது மூன்றுபேர் தான் கையெழுத்திடுவது என்ற விடயத்தில் சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் மாறி மாறி ஒருவர்மீது ஒருவர் குற்றஞ் சுமத்தி வருகின்றனர். இந்த பொது ஆவணத்தில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற வாசகத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதுடன், சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எமது கருத்தினை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு நீண்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. 

எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை இந்த பொது ஆவணத்தில் முன்வைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தி இருந்தோம். அதனை சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் ஏற்காமையால் அதனை இணைத்துக்கொள்ள முடியவில்லை.

எமது இனத்தின் நலன்கருதி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய காலத்தில் அநாவசியமான விமர்சனங்களையும் தேவையற்ற கருத்துக்களையும் பொதுவெளியில் தவிர்த்துக்கொள்வது நல்லது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கேள்வி:- ஏற்கனவே தமிழ் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைவு முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டு சில சந்திப்புக்களும் நடைபெற்று அரசியலமைப்புக்கான வரைவு உருவாக்க விடயத்தில் குழுவும் அமைக்கப்பட்டதன் பின்னர் அக்கூட்டு காணாமலாகிவிட்டதே?

பதில்:- புதிய அரசியல் யாப்பிற்கான பரிந்துரையில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து பொதுவரைபைக் முன்வைக்க முடியாமல் போனது வருந்தத்தக்கது. பொதுவரைபைக் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில், பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் அனைத்தும் குழுவை அமைத்து, வரைபைத் தயாரிக்க முயற்சித்த போதும், மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் அதனைப் புறந்தள்ளி தன்னிச்சையாக நடந்துகொண்டதால் ஏனைய அரசியல் கட்சிகள் தனித்தனியாக சமர்ப்பணங்களைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இருந்தாலும்கூட, எமது இனத்தினைப் பாதிக்கும் அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாகவும் உறுதியுடனும் இருக்கின்றோம். அந்த வகையில், காணி நிலங்கள், தொன்மை மற்றும் இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒன்றுகூடி கலந்து பேசியிருக்கின்றோம். 

இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்காக  நடவடிக்கைக் குழுவை அமைக்க முயற்சிக்கின்றோம். இவை தொடர்பாக தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், வட-கிழக்கு பல்கலைக்கழகங்கள், வர்த்தக சம்மேளனங்கள் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். ஆகவே, தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் மத்தியில் ஒருங்கிணைப்பு தேவை என்பதில் நாம் உறுதியாகச் செயற்பட்டு வருகிறோம்.

கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள், இம்முறை ஐ.நாவில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணை பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்:- ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையானது தமிழ் மக்களுக்கு சிறு நம்பிக்கை அமைந்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை தொடர்பான விடயம் பாரப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருப்பதும், போர்க்குற்றங்கள் போன்றவற்றுடன் தொடர்புபட்ட அதிகாரிகளின் பயணங்களை தடைசெய்வதுடன் அவர்களது சொத்துகளை முடக்க வேண்டும் என்று கூறியிருப்பதும் தமிழ் இனத்திற்கு எதிராக நடைபெற்ற யுத்தம் தொடர்பாக சாட்சியங்களைச் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதும் முக்கியமான விடயமாகும். 

தமிழ்த் தேசிய இனத்தின் மீதான தொடர்ச்சியான ஒடுக்கு முறையின் காரணமாகவே தமிழ்த் தேசிய இனம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் அவரின் அறிக்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் மனித உரிமைகள் தொடர்பாகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பேசப்படுகின்றதே தவிர, இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது குறித்து பேசப்படவில்லை. வரவிருக்கின்ற கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இனப்படுகொலை உள்ளிட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தமிழர் தரப்பு அனைத்தும் முயற்சிக்க வேண்டும்.

ஆனால் மேற்கண்ட விடயங்கள் 47 நாடுகளை உள்ளடக்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமாக எடுக்கப்படுவதன் ஊடாகவே இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். 47 நாடுகளில் குறைந்த பட்சம் 24 அல்லது 25 நாடுகளாவது இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆகவே புலம்பெயர் தமிழர்களும் தாயகத்தில் உள்ள கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு அதனை சாத்தியமாக்க வேண்டும்.

கேள்வி:- இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் விடயமானது குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதென்று கருதுகின்றீர்களா?

பதில்:- முதலாவதாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஐ.நா. பொதுச்சபையிடம் கையளிக்கப்படவேண்டும். ஐ.நா. பொதுச்சபையானது அதனை பாதுகாப்புச் சபையிடம் கையளிப்பதன் மூலம் அவர்களின் ஆதரவு கிட்டுமானால் அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப முடியும். ஆனால் பாதுகாப்புச் சபையில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இலங்கையைப் பாதுகாக்க முயற்சிக்கலாம். ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்னர் நாம் பல தடைகளை தாண்ட வேண்டும்.

அதேநேரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்யும் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தரப்பானது தனது முறைப்பாடுகளை முன்வைக்கும்போது அவை சரியானதா, வழக்கிற்கு முகாந்தரம் உள்ளதா என்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்வதற்கான ஒரு சூழல் ஏற்படும். ஆகவே எமக்கிருக்கக்கூடிய வழிமுறைகள் அனைத்தையும் நாங்கள் சரியாகப் பின்பற்றி எமது இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More