மே.இ.தீவுகளின் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது | 171 ஓட்டங்களினால் இலங்கை முன்னிலை

இலங்கை அணிக்கு எதிரான முதல் டேஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் மதிய நேர உணவு இடைவேளையில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2021 டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றரன்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி சார்பில் அணித் தலைவர திமுத் கருணாரத்ன அதிகபடியாக 147 ஓட்டங்களை பெற்றார்.

Image

இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 13 ஆவது சதம் ஆகும், அதேநேரம் நீண்ட இன்னிங்ஸுக்கு பெயர் பெற்ற திமுத் 7 ஆவது முறையாக எடுத்த 140 ஓட்டங்கள் இதுவாகும்.

அவரைத் தவிர ஆரம்ப வீரராக களமிறங்கிய பத்தும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும், தனஞ்சய டிசில்வா 61 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 45 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கிந்திய தீவு அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசி 105 ஓட்டங்களுக்குள் இலங்கையின் இறுதி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் மற்றும் கேப்ரியல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது.

Image

இந் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் மதிய நேர உணவு இடைவேளை வரை மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து மொத்தமாக 215 ஓட்டங்களை குவித்துள்ளனர்.

ஜோசுவா டா சில்வா 9 ஓட்டங்களுடனும், ரஹ்கீம் கார்ன்வால் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் பிரவீன் ஜெயவிக்ரம மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்தெனிய, தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை அணி தற்சமயம் வரை முதல் இன்னிங்ஸில் 171 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளனர்.

Image

ஆசிரியர்