இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பின் 8ஆம் வாரப் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு றினோன் – புளூ ஸ்டார் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகிறது.

றினோன் கழகத்துக்கும் புளூ ஈக்ள்ஸ் கழகத்துக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என்பதுடன் யார் வெற்றிபெறுவார் என்பதை அறுதியிட்டு கூற முடியாது.
றினோன் தனது முதல் மூன்று போட்டிகளில் ரட்னம் (3 – 0), டிபெண்டர்ஸ் (3 – 0), நியூ யங்ஸ் (10 – 0) ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்ட போதிலும் அடுத்த மூன்று போட்டிகளை (கலம்போ எவ்சி (0 – 0), ரெட் ஸ்டார் (0 – 0), சீ ஹோக்ஸ் (2 – 2) வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

தனது ஏழாவது போட்டியில் புளூ ஸ்டார் கழகத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட றினோன் இறுதியில் 3 – 2 என வெற்றிபெற்றது.
நியூ யங்ஸ் கழகத்துடனுனான தனது ஆரம்பப் போட்டியை (1 – 1) என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட புளூ ஈக்ள்ஸ் கழகம் அதன் பின்னர் மாறுபாடான பெறுபேறுகளையே பெற்றுள்ளது.

டிபெண்டர்ஸ் (2 – 0), ரட்னம் (2 – 0) ஆகிய அணிகளுடனான போட்டிகளில் புளூ ஈக்ள்ஸ் வெற்றிபெற்றது. ஆனால், புளூ ஸ்டார் (0 – 3), கலம்போ எவ்சி (0 – 1), ரெட் ஸ்டார் (0 – 1), அப்கன்ட்றி லயன்ஸ் (0 – 4) ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்தது.
இந்த முடிவுகளின் அடிப்படையில் இன்றைய போட்டியில் றினோன் கழகம் வெற்றிபெறக்கூடிய அனுகூலமான அணியாகத் திகழ்கிறது.
எனினும் புளூ ஈக்ள்ஸ் கழகம் தலைகீழ் முடிவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சுப்பர் சிக்ஸுக்கு 3 அணிகள் தகுதி
கடந்த வாரம் வரை 35 போட்டிகள் நடந்து முடிந்துள்ளதன் அடிப்படையில் நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் (21 புள்ளிகள்), கொட்டாஞ்சேனை றினோன் (15 புள்ளிகள்), கலம்போ எவ்சி (15 புள்ளிகள்) ஆகிய மூன்று அணிகளே தோல்வி அடையாத அணிகளாக சுப்பர் சிக்ஸில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு செல்லப்போகும் மற்றைய 3 அணிகள் எவை என்பதற்கான போட்டி சீ ஹோக்ஸ் (12 புள்ளிகள்), ரெட் ஸ்டார் (11 புள்ளிகள்), நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் (7 புள்ளிகள்), புளூ ஈக்ள்ஸ் (7 புள்ளிகள்) ஆகிய அணிகளுக்கு இடையில் நிலவுகின்றது.
இந்த நான்கு அணிகளில் சீ ஹோக்ஸ், ரெட் ஸ்டார் அணிகளுக்கு சுப்பர் சிக்ஸ் தகுதியைப் பெற இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படுகிறது.
இந்த வாரம் சீஹோக்ஸ் அணிக்கும் ரெட் ஸ்டார் அணிக்கும் இலகுவான போட்டிகள் இருப்பதால் பெரும்பாலும் அவை இரண்டும் வெற்றிபெற்று சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை உறுதிசெய்யும் என நம்பப்படுகிறது.
ஒருவேளை இந்த இரண்டு அணிகளும் தங்களது எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து புளூ ஸ்டார், புளூ ஈக்ள்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் கடைசி இரண்டு பொட்டிகளில் வெற்றிபெற்றால் ரெட் ஸ்டார் வெளியேற நேரிடும். அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது.
தொடரும் கடைசி இரண்டு வாரங்களில் புளூ ஸ்டார் – டிபெண்டர்ஸ், நியூ யங்ஸ் – சீ ஹோக்ஸ், டிபெண்டர்ஸ் – நியூ யங்ஸ், சீ ஹோக்ஸ் – புளூ ஈக்ள்ஸ் ஆகிய போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. எனவே இந்த போட்டி முடிவுகள் அந்தந்த அணிகளுக்கு தீர்மானம் மிக்கவையாக அமையும் என்பது உறுதி.