செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர் லீக்கில் அப்கன்ட்றி லயன்ஸிடம் பணிந்தது கலம்போ எவ்சி

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர் லீக்கில் அப்கன்ட்றி லயன்ஸிடம் பணிந்தது கலம்போ எவ்சி

2 minutes read

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்  தோல்வியே காணாத இரண்டு அணிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (08) மாலை நடைபெற்ற சுப்பர் லீக் ஆதிக்க போராட்டத்தில் கலம்போ எவ்சி தனது முதலாவது தோல்வியை அப்கன்ட்றி லயன்ஸ் அணியிடம் சந்தித்தது.

இப் போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் இந்த வருட சுப்பர் லீக்கில் தனது 7ஆவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டியது.

இக் கழகம் மாத்திரமே இந்த வருடம் இதுவரை விளையாடிய சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி தோல்வி அடையாத அணியாக இருக்கிறது.

போட்டி ஆரம்பித்தது முதலே வெற்றியை மாத்திரம் குறிவைத்து நன்கு திட்டமிட்டு சிறந்த வியூகங்களுடன் அப்ன்ட்றி லயன்ஸ் விளையாடியதுடன் கலம்போ எவ்சி தடுமாற்றத்துடன் விளையாடியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இந்தப் போட்டியின் 15ஆவது நிமிடத்தில் மொஹமத் ஆக்கிப் கோல் போட எடுத்த முயற்சியை கலம்போ எவ்சி கோல்காப்பாளர் மொஹமத் இம்ரான் மிகத் திறமையாக செயற்பட்டு தடுத்தார். அத்துடன் அவரது இடது முழுங்கைக்கு மேலே தசைப் பகுதியில் பந்து பலமாக பட்டதால் அவர் கடும் உபாதைக்குள்ளானார். அந்த இடம் க்ன்னிப்போயிருந்ததை போட்டி முடிவில் நேரடியாக காண முடிந்தது.

ஆறு நிமிடங்கள் கழித்து அப்கன்ட்றி லயன்ஸ் வீரர்களான நவீன் ஜூட், மொஹமத் ஷான், அப்துல் ரஹ்மான் யஹியா, பெஞ்சமின் யோர்க் ஆகியோரிடையே பரிமாறப்பட்ட பந்து இறுதியில் பெஞ்சமின் யோர்க்கினால் கோலாக்கப்பட்டது.

25ஆவது நிமிடத்தில் விதிகளுக்கு முரணான வகையில் விளையாடிய கலம்போ எவ்சியின் முன்னாள் அணித் தலைவர் சரித் ரத்நாயக்கவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் அதே தவறை இழைத்த சரித் ரத்நாயக்கவுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டையைக் காட்டிய மத்தியஸ்தர் சத்துர மதுரங்க, உடனடியாகவே சிவப்பு அட்டையைக் காட்டி அவரை வெளியேற்றினார்.

இது கலம்போ எவ்சிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

மறுபக்கத்தில் அப்கன்ட்றி லயன்ஸ் வீரர்கள் அனைவருமே தத்தமது நிலைகளில் ஆரம்பம் முதல் கடைசிவரை மிகத் திறமையாக விளையாடி தமது பங்களிப்பை செவ்வனே ஆற்றினர்.

இதனிடையே இடதுகாலால் மாத்திரம் விளையாடும் ஆற்றல் உடைய அப்கன்ட்றி லயன்ஸ் வீரர் மொஹமத் இஷான் பல தடவைகள் இடது காலால் மாத்திரம் பந்தை நகர்த்தியதால் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தடுமாறினார்.

அவருக்கு வலது காலால் பந்தை உதைப்பதற்கான பயிற்சிகளை  பயிற்றுநர் ரஹுமான் வழங்கி, அவ் வீரரை அதில் தேர்ச்சி பெறச்செய்தால் அவர் ஒரு பரிபூரண கால்பந்தாட்ட வீரராக உயர்வார் என்பது உறுதி.

மேலும் மொஹமத் இஷான், நவீன் ஜுட் ஆகிய இருவரும் எதிரணி வீரர்களைக் கடந்து பந்தை உருட்டிச் செல்வதை விட உடன் பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்டால் அது அணிக்கு பலன்தரக்கூடியதாக இருக்கும் என போட்டியைப் பார்வையிட்ட கால்ந்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியவாறு அப்கன்ட்றி லயன்ஸ் விளையாடிக்கொண்டிருந்தது.

போட்டியின் 37ஆவது நிமிடத்தில் அப்கன்ட்றி லயன்ஸ் வீரர் மொஹமத் அசாத் சுமார் 30 யார் தூரத்திலிருந்து பலமாக உதைத்த பந்து கோல் காப்புக்கு மேலாக சென்றது.

இடைவேளைக்குப் பின்னர் 58ஆவது நிமிடத்தில் அப்கன்ட்றி லயன்ஸுக்கு கோல் போடக் கிடைத்த வாய்ப்பு தவறவிடப்பட்டது.

சற்று நேரத்தில் கலம்போ எவ்சி வீரர் மொஹமத் ஷஹில் 35 யார் தூரத்தில் இருந்து உதைத்த பந்து கோலின் குறுக்குக் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

அந்த சந்தர்ப்பத்தில் அப்கன்ட்றி லயன்ஸ் கோல் காப்பாளர், அணித் தலைவர் கவீஷ் லக்ப்ரிய செய்வதறியாது பிரமித்து நின்றார்.

சில நிமிடங்கள் கழித்து மறுமுனையில் மொஹமத் அக்கீல் தாழ்வாக பரிமாறிய பந்தை கோலாக்க நவீன் ஜூட் தவறினார்.

போட்டியின் 66ஆவது நிமிடத்தில் அப்துல் ரஹ்மான் யஹியா உதைத்த பந்தை கோல்காப்பாளர் இம்ரான் தடுத்தபோது பந்து அவரது கைகளில் இருந்து எகிறிப் பாய்ந்தது.

அப்போது வேகமாக செயற்பட்ட மொஹமத் ஆக்கிப், கோல் கோட்டுக்கு மிக அருகில் இருந்து பந்தை கோலினுள் புகுத்தி அப்கன்ட்றி லயன்ஸின் இரண்டாவது கோலை போட்டார்.

தொடர்ந்து 78ஆவது நிமிடத்தில் எதிரணி கோல்காப்பாளர் இம்ரானை மாத்திரமே கடக்க வேண்டியிருந்த நவீன் ஜூட், கோல் போடும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டார்.

உபாதையீடு நேரத்தில் அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தின் மாற்று வீரர் தீக்ஷன கவிந்த சுமார் 20 யார் தூரத்தில் இருந்து பலமாக உதைத்த பந்து கோலிலிருந்து சற்று விலகி வெளியே சென்றது. சற்று நேரத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.