இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ராவல்பிண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமானது.
இப் போட்டிக்கான நாணய சுழற்சியல் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
ஏழு போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இரண்டு சுற்றுகளைக் கொண்டது.
முதல் சுற்றுக்கான மூன்று போட்டிகள் ராவல்பிண்டியிலும் இரண்டாம் சுற்றுக்கான 3 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன லாகூரிலும் நடைபெறும்.
இரண்டு சுற்றுகள் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடரைப் பறிகொடுத்த போதிலும் கடைசிப் போட்டியில் ஈட்டிய ஆறுதல் வெற்றியுடன் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை எதிர்கொள்கிறது.
மேலும் அடுத்த் வருடம் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிக்கு தங்களைத் தயார் படுத்துவதற்கான முதலாவது தொடராக இந்த மும்முனை தொடர் இல்ஙகை, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு அமையவுள்ளது.
பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில், அதன் இரசிகர்கள் முன்னிலையில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல. ஆகையால் இன்றைய ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானிடம் கடும் சவாலை இலங்கை எதிர்கொள்வது நிச்சயம்.
வழமையான ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க காயத்திலிருந்து பூரண சுகம் அடையாததால் அவருக்குப் பதிலாக ரி20 தொடரில் விளையாடிய லஹிரு உதார அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கையும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 160 போட்டிகளில் 96இல் பாகிஸ்தானும் 59இல் இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி சம நிலையில் முடிவடைந்ததுடன் 4 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.
இந்த இரண்டு அணிகளும் கடைசியாக மோதிக்கொண்ட 5 போட்டிகளிலும் (2025இல்ராவல்பிண்டியில் 3, 2019இல் கராச்சியில் 2) பாகிஸ்தான் வெற்றியீட்டியது.