நியூஸிலாந்துக்கு எதிராக மௌன்ட் மௌங்காயி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 22 ஓட்டங்களால் இந்தியா வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 3 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்டது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட கடைசிப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் அற்புதமாக பந்துவீசி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 42.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் அக்சார் பட்டேல், இஷான் கிஷான் ஆகியோர் தலா 46 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயர், நாமன் திர் ஆகியோர் தலா 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேக்கப் டபி 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ ஃபிஷர் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 48. 1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
நியூஸிலாந்து 31ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், அதன் பின்னர் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 68 ஓட்டங்களுக்கு சரிந்தன.
இதில் டீன் ஃபொக்ஸ்க்ரொவ்ட் 31 ஓட்டங்களையும் நிக் கெலி, மிச்செல் சென்ட்னர் ஆகியோர் தலா 24 ஓட்டங்களையும் வில் யங் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
![]()
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன்: அர்ஷ்தீப் சிங்; தொடர் நாயகன்: குர்நூர் ப்ரார் (9 விக்கெட்கள்)