இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக பாடுபட்ட குமார்பொன்னம்பலம் 2000ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் மறைந்து இன்றுடன் இருபது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், அவரை தமிழ் பேசும் மக்கள் இன்றும் நினைவு வைத்துள்ளனர்.
அவருடைய தந்தையார் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இலங்கை வரலாற்றில் ஒப்பாரும், மிக்காரும் அற்ற வழக்கறிஞர் ஆவார். தமது வழக்குரைக்கும் திறமையை தென்கிழக்கு ஆசியா எங்கும் பதித்த மதியூகி அவர். தமது ஆங்கில நாவன்மையால் ஐக்கிய நாடுகள் சபையில் பாராட்டப்பட்டவர். 1947இல் சோல்பரி கமிஷன் முன் வாதிட்ட விடயங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டன.
அதே வழியில்சட்டத்துறையிலும், அரசியலிலும் செயற்படுவதற்கு தமது புதல்வர் குமார் பொன்னம்பலத்தை அவர் வழிநடத்தினார். அமரர் குமார் பொன்னம்பலம் தந்தையார் மறைந்த பின்னர் தமிழ் காங்கிரஸ் கட்சியை பொறுப்பேற்று வளர்த்தெடுத்தார். புகழ் பெற்ற வழக்கறிஞர் அவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றதோடு, பரிஸ்ரர் பட்டமும் பெற்றார். இவர் தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்காக பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றார்.
செம்மணி புதைகுழிகள் பற்றிய செய்திகள் உலகுக்கு வெளிவருவதற்கு காரணமாக இருந்தவர். கிருஷாந்தி பாலியல் வல்லுறவு வழக்கு, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலைகள் சம்பந்தப்பட்ட விசாரணைகளின் போது வாதிட்டு பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தவர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளில் ஆஜராகி எவ்வித இலாபமும் கருதாமல் வழக்காடியவர் அமரர் குமார் பொன்னம்பலம். தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்களை தட்டிக் கேட்க யாரும் முன்வராத வேளையில், நீதிமன்றத்தில் வாதாடியவர். அவர் ஆடம்பரமாக வாழ நினைத்திருந்தால் வெளிநாடு சென்று வாழ்ந்திருக்கலாம். அதை விடுத்து எந்நேரமும் தமிழ் மக்களைப் பற்றிச் சிந்தித்து பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிடினும் வெளியே சிறப்பாக செயலாற்றினார்.
வெளிநாடுகளிலும் இலங்கையின் இனப்பிரச்சினையை எடுத்துச் சென்றவர் அவர். சர்வதேச அளவில் நடைபெற்ற மனித உரிமை மாநாடுகள், கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொண்டு, தமது சிறந்த ஆங்கில புலமையூடாக புள்ளிவிபரங்களோடு இனப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அதிகார சக்திகளின் பலத்த கண்டனத்திற்கும், விமரிசனத்திற்கும், அச்சுறுத்தலுக்கும்ஆளானார். தமிழ் மக்களுக்கு நியாயம் வேண்டி செயற்பட்டவர் குமார் பொன்னம்பலம்.
நீதிக்காகவும்,சமாதானத்திற்காகவும், சமூக விடுதலைக்காகவும் உயிருக்கும் அஞ்சாது தம்மையே அர்ப்பணித்த அவரது வாழ்வு சிறப்பானது.கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்து சிறிது காலம் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.