செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஒரு வருடமானாலும் ஓயாது போராட்டம்!

ஒரு வருடமானாலும் ஓயாது போராட்டம்!

2 minutes read

இந்திய மத்திய அரசு கோரிக்கையை ஏற்க மறுப்பதால் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 42 நாட்களாக தொடர்கின்றது

இந்தியத் தலைநகர் டெல்லியின் மாநில எல்லையில் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடும் குளிர் மற்றும் மழைக்கு மத்தியில் நடத்தி வருகின்ற போராட்டம் நேற்று 42-வது நாளாக நீடித்தது. மத்திய விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த 42 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு இரு தினங்களுக்கு முன்னர் நடத்திய 7ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்வர் 26ஆம் திகதி டெல்லியை நோக்கி படையெடுத்தனர். பொலிஸாரின் தடைகளை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகள், டெல்லியின் புராரி மைதானத்தில் முகாமிட்டனர். விவசாயம் சம்பந்தமான சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ஒரு வருடம் ஆனாலும் இந்தப் போராட்டம் ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்த விவசாயிகள், தொடர்ந்து 42 ஆவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

டெல்லியில் கடும் குளிர், பனி மூட்டம் நிலவி வருகிறது. வீதிகளில் சமைத்து உண்டு கொண்டு, ட்ராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கிக் கொண்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை.

இதுவரை நடைபெற்ற பல கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தால் இனி பேச்சுவார்த்தையே கிடையாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராடும் விவசாயிகளுக்கு, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள், மற்றும் பிற அமைப்புகள் சார்பில் உணவு, படுக்கை, கூடாரம் உள்ளிட்ட, பலதரப்பட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் போரட்டத்திற்கு ஆதரவும் அதிகரித்து வருகின்றது. டெல்லியில் மோசமான வானிலை நிலவுவதால், நேற்று நடைபெற இருந்த டிராக்டர் பேரணி இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று அறிவித்தனர்.

டெல்லி எல்லையில் போராட்டம் நடக்கும் குண்ட்லி மானேசர் பல்வால் பகுதியில் நேற்று டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இப்போராட்டம் மோசமான வானிலை காரணமாக இன்றைய தினம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ‘சுவராஜ் அபியான்’ சங்க தலைவர் யோகேந்திர யாதவ் அளித்த பேட்டியில், “மோசமான வானிலை நிலவுவதால் டிராக்டர் பேரணி ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனி எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். குடியரசு தினமான வரும் 26ம் திகதி டெல்லி நோக்கிய டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதில், அரியானாவின் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 10 டிராக்டர்கள் பங்கேற்கும். ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒருநபர் இப்போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்” என்றார்.

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்தப்படும் டிராக்டர் பேரணியில் பெண்களும் டிராக்டர் செலுத்தி வருவார்கள் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், அரியானாவில் ஏராளமான பெண்கள் டிராக்டர் செலுத்தும் பயிற்சியை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.

இது இவ்விதமிருக்க, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டுமென்ற விவசாயிகளின் முக்கிய கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை 8 ம் திகதி நடைபெற உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.