Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தலைவருடன் சில மணிப் பொழுதுகள்! | சந்திரவதனா

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்! | சந்திரவதனா

9 minutes read

தலைவர் உபசரிப்பில் #டுபாய்பிட்டு

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின், இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன்மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.

´அண்ணன்` அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளி இருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து, தளிர்த்து, சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. !நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்.` எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.

என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காகத் தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு அளவளாவ வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.

என் ஆசைக்கு அணை போட முடியாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

நேற்று முன் தினம் மாலை நான்கு மணியளவில் வெயிலில் மூழ்கியிருந்த கிளிநொச்சி வெண்புறா நிறுவனத்தில் நிழலும் தண்மையும் தேடி வரவேற்பறையின் ஓர் மூலையில் நான் அமர்ந்திருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் ஆளனுப்பியிருந்தார். `எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் ஏழு மணிக்கு வாகனம் அனுப்புவதாகவும்` சொல்லி விட்டிருந்தார்.

ஏழு மணிக்குச் சில நிமிடங்கள் முன்னரே வாகனம் வந்தது. போனோம். நட்பு நிறைந்த பார்வைகள் எம்மை வரவேற்க அரசியல்துறை அலுவலகம் தனக்கே உரிய பாணியில் உள்ளேயும் வெளியேயும் அழகாகக் காட்சி அளித்தது.

அதே சிரிப்பு..! எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்த அதே சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் எம்மை வரவேற்றார். அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார். களத்தில் காவியமான எனது தம்பிமாரைப் பற்றிக் கதைத்தார். முன்னர் பருத்தித்துறையில் புத்தக வெளியீடு செய்த தங்கை பற்றி விசாரித்தார். கதைகள் பல திசைகளிலும் விரிந்திருந்தன.

அவருடனான இரவு உணவு நளபாகம்தான். இறால், இறைச்சி, மரக்கறி… என்று சுவையாக இருந்தது. அங்கிருந்த உறவுகள் அதை நட்போடு பரிமாறிய விதம் மிகவும் இதமாக இருந்தது. அந்த இனிய உபசரிப்பில் மனசும் வயிறும் நிறைந்திருக்க நாம் விடை பெற எழுந்து கொண்டோம்.

அப்போதுதான் தமிழ்ச்செல்வன் என்னைத் தனியாகக் கூப்பிட்டு அந்த இனிய செய்தியைச் சொன்னார். “வியாழக்கிழமை (அண்ணன்) உங்களைச் சந்திக்க விரும்புறார்” என்றார். எனக்கு ஒரு தரம் மனம் சிலிர்த்தது.

அண்ணையைச் சந்திப்பது பற்றி தமிழ்ச்செல்வன் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் பதட்டமாகி விட்டேன்.

வெளியில் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த போதோ, சமையல் செய்தவர்களிடமும், உணவு பரிமாறியவர்களிடமும் நன்றி கூறி விடைபெற்ற போதோ நான் ஒன்றிலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் பதட்டமாகவே இருந்தேன்.

உண்மைதானா..? மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..? சந்தோசம்..! சந்தேகம்..! பதட்டம்..! பரபரப்பு..! எல்லாம் என்னுள். இன்று காலை தமிழச்செல்வன் அவர்கள் வெண்புறா வரை வந்து “மாலை நாலுமணிக்கு வாகனம் வரும்” என்று சொன்ன போதும், எனது படபடப்புகள் குறைய வில்லை.

நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன வாகனம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. போரின் அனர்த்தங்களால் குழி விழுந்து போயிருந்த வீதியில் வாகனம் ஏறி இறங்கிச் சென்ற போது நாங்கள் குலுங்கினோம். கூட வந்தவரின் சற்றலைற் தொலைபேசி சிணுங்கினாலே ´எங்கே.. இன்று எம்மால் அண்ணையைச் சந்திக்க முடியாது` என்று தகவல் சொல்லி விடுவார்களோ என்று மனசு பயப்பட்டது.

அண்ணனைச் சந்திக்கும் வரை எதையும் நம்ப மனசு மறுத்தது. வாகனம் எம்மை ஒரு இடத்தில் இறக்கிய போது அங்குதான் அண்ணன் நிற்பார் என நினைத்தேன். பின் அரை மணி நேரமாகக் காத்திருந்த போது அண்ணன் அங்கு வருவார் என்ற நினைப்பில் காத்திருந்தேன்.

ஆனால் வந்தது இன்னுமொரு வாகனம். போராளிகளின் மருத்துவரான, ரேகா ஓட்டி வந்தார். முதற் சந்திப்பிலேயே காலாகாலத்துக்கும் பரிச்சயமான ஒரு உறவு போல அக்கா.. அக்கா.. என்று உரிமையோடு இனிமையாகப் பேசினார்.

சில நிமிடங்களில் வாகனம் மரங்கள் குடை விரித்திருந்த ஒரு இடத்துக்குள் நுழைந்தது. முற்றத்தில் கதிரை போட்டுத் தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்தார். அதே சிரிப்புடன் எம்மை வரவேற்றார். உள்ளே வீடா, அலுவலகமா தெரிய வில்லை. மின் விளக்கில் பல முகங்கள் தெரிந்தன.

சில நிமிட உரையாடல்களின் பின் இன்னொரு வாகனம் வந்தது. கேற்றடியில் சற்று இருள் சூழ்ந்திருந்தது. ஆனாலும் இறங்கியவர்களில் தலைவர் பிரபாகரன் அவர்களும் இருக்கிறார் என்பதை அவர் நடையிலேயே கண்டு கொண்டேன். இப்போதுதான் மனசு முழுதாக நம்பிக்கை கொண்டது.

சந்திப்புக்கான பிரத்தியேகமான, தனியாக இருந்த ஒரு கட்டிடத்துள் அவர்கள் நுழைய நாங்களும் அழைக்கப் பட்டோம்.

மதிப்புக்குரிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரே கண்டதும் எப்போதும் என் வாயில் சரளமாக வரும் வணக்கம் கூட வரமறுத்தது. நா பேச மறந்து பின்னிக் கொண்டு பின் நின்றது. நம்ப முடியாதிருந்தது. சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.

எல்லோரும் உள்ளே நுழைந்ததும் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அங்கும் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான சந்திப்பின் போது போலவே அழகாகவும் பண்பாகவும் உபசரித்தார்கள். சில நிமிடங்களில் தயக்கமும் தவிப்பும் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன். அண்ணன் பிரபாகரன் மிகவும் இயல்பாகப் பேசினார். உரிமையோடு எம்மோடு அருகிருந்து பேசினார். நான் சிரிக்கும் போது “மயூரனின் சிரிப்புப் போலவே இருக்கிறது” என்றார். “இதே சுருள் தலைமயிர்தான் மயூரனுக்கும்” என்றார்.

பூநகிரித் தவளைப் பாய்ச்சலில் உடலம் கூடக் கிடைக்காமற் சிதறிப் போன மயூரனின் குறும்புகள் பற்றி நிறையச் சொன்னார். தகடை மாற்றிக் கட்டிக் கொண்டு திரியும் அவனது விளையாட்டுத் தனங்களைப் பற்றிச் சொன்னார். மொறிஸ் பற்றிச் சொன்னார். “ஆனால் மொறிஸை கடைசியில் சந்திக்க முடியாமற் போய் விட்டது.” என்றார். மொறிஸ் ஒரு கிழமையில் அவரிடம் வருவதாக இருந்தானாம். அதற்கிடையில் பருத்தித்துறையில் விதையாகி விட்டான். மயூரன்ரை அந்த எழுதுற அக்கான்ரை கடிதங்களை எனக்கு நல்லாப் பிடிக்கும். எல்லாரும் விட்டிட்டு வா எண்டுதான் கடிதங்கள் போடுவினம். ஆனால் அவ மட்டும் அப்பிடி எழுத மாட்டா. நம்பிக்கையும் உறுதியும் கூறி எழுதுவா” என்றார். அவர் குறிப்பிட்டது சந்திரா ரவீந்திரனை. புலம் பெயர்ந்து விட்ட எனது தங்கையைக் கூட அவர் இத்தனை ஞாபகம் வைத்திருப்பது எனக்குள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது. மறைந்த கவிஞர் தீட்சண்யன் பொட்டம்மானின் மகன் பார்த்திபனுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தது பற்றிச் சொன்னார்.

பலதரப்பட்ட உரையாடல்களின் மத்தியில் “சாப்பிடுவோம் வாங்கோ” என அவர் அழைத்த போது ஆச்சரியப் பட்டுத்தான் போனேன். அரைமணி நேரம்தான் எமக்காக ஒதுக்குவார் என நினைத்தேன். ஏற்கெனவே கூடிய நேரம் கதைத்து விட்டோம். விருந்து வேறையா..! மனசு புளகாங்கிதமடைந்தது.

சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. டுபாய் பிட்டு மிகவும் மென்மையாகச் சுவையாக இருந்தது. சாப்பிடும் போது நிறையக் கதைத்தோம். மனம் விட்டுச் சிரித்தோம். பெண்ணியத்திலிருந்த அரசியல் வரை அலசினோம்.

பெண்ணியம் பேசும் போதுதான் அண்ணன் பிரபாகரன் வன்னியில் வாழ்ந்தாலும் எத்தகையதொரு முற்போக்குச் சிந்தனையுடன் இருக்கிறார் என்பதும் செயற்படுகிறார் என்பதும் தெரிந்தது. அவர் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார். பெண்கள் தாழ்ந்து போவதில் எந்தவிதமான இஷ்டமும் அவருக்கு இல்லை.

அங்கெல்லாம் அனேகமாக ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்கள் சமையலில் முடங்கிப் போய்விடக் கூடாதென்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். பெண்களால் சமையல் தவிர்ந்த வேறு ஆக்க பூர்வமான பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதில் அவர் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

சில பெண்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் சாப்பாட்டைக் குறைத்து விட்டு களத்தில் விரைவில் களைத்துப் போய் விடுகிறார்கள் என்று அக்கறையோடு கவலைப்பட்டார். நீச்சல் தெரிந்த பெண்நீச்சல்ஆசிரியர் இல்லாத ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த முயன்ற போது எழுந்த கஷ்டங்களை விளக்கினார்.

“சில போராளிகள் ´ஆங்கிலத்தைப் படியுங்கோ படியுங்கோ` என்று சொன்னாலும் அக்கறைப் படுகிறார்கள் இல்லை” என்று வருந்தினார்.

அவரோடு பேசும் போது ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்சமூகத்தின் மீதான அவரது அக்கறை புரிந்தது.

பேச்சுத் திசைமாறித் திசைமாறி எனது கணவரின் நகைச்சுவைப் பேச்சுக்களினால் எழுந்த சிரிப்பலைகளோடு மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. டுபாய் பிட்டும், கோழிக்கறியும் உண்மையில் சுவையாக இருந்தது. அண்ணனிடம் சொன்னேன். “#டுபாய்புட்டு நல்லாயிருக்கு. எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு” என்று. அதை எப்படிச் சமைப்பதெனவும் கேட்டேன். “சமைக்கிறவையளைக் கூப்பிட்டுத்தான் சொல்லோணும்” என்றார்.

இப்படியே ஒரு விடயமென்றில்லாமல் குடும்பம், அரசியல், போராட்டம்… என்று பல் வேறுபட்ட கதைகளுடன் சில மணித்தியாலங்கள் களிப்போடு கழிந்தன. சேர்ந்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.

விடைபெறும் போது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அண்ணையைத்தான் சந்தித்திருக்கிறேன் என்பதை. அதற்கு மேல் என்னால் தலைவர் என்று சொல்ல முடியவில்லை. அவருடனான பொழுதுகள் அவ்வளவு நெருக்கமாக இருந்தன.

“எனது வேண்டுக்கோளுக்கமைய என்னை இவ்வளவு விரைவாகச் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்தியதற்கும் உங்கள் இனிய உபசரிப்புக்கும் மிகவும் நன்றி” என்று அண்ணையிடம் சொன்னேன்.

உடனே அண்ணன் “இல்லை, இல்லை, இதற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும். உங்கடை குடும்பத்திலை மூன்று பேரை நாட்டுக்காகக் குடுத்திருக்கிறீங்கள். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும்” என்றார்.

அவரது அந்தப் பெருமிதமற்ற பேச்சில் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போனேன். அந்த நெகிழ்ச்சியோடே, எனது பயணத்துக்கு அர்த்தம் சொன்ன அந்த இனிமையான பொழுதுகளை மனதுக்குள் நிறைத்த படி புறப்பட்டோம். வெண்புறா வந்த பின்னும் இனிய நினைவுகள் என்னுள் நிறைந்திருந்தன.

அடுத்தநாள், எனக்கு அந்த டுபாய்பிட்டை அவித்துக் காட்ட என நிமலனையும், புகழோவியனையும் அண்ணை அனுப்பியிருந்தார். எனக்கு நம்பவே இயலாமல் இருந்தது. எனக்கு அந்த டுபாய்பிட்டுப் பிடித்திருக்கிறது. அதை எப்படிச் சமைப்பது என்று ஒரு வார்த்தை கேட்டதற்காக அவர் இத்தனை அன்பாக நடந்து கொள்வார் என்று நான் துளியும் எதிர் பார்க்கவில்லை.

அண்ணை என்னோடும், என்னுடைய குடும்பத்தோடும் மட்டும் அப்படிப் பழகவில்லை. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அத்தனை உறவுகளின் குடும்பங்களுக்கும் அவர் மதிப்புக் கொடுத்து, அவர்களை எந்தளவு தூரம் தனக்குள் பூஜித்து வைத்திருக்கிறார் என்பதை அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் புரிந்து கொண்டேன்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அவர் வெறுமனே ஒரு இராணுவத் தளபதியல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவரோடு கதைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அவர் ஒவ்வொரு போராளிக்கும் எப்படியெப்படி தனது இதயத்துள் இடம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். எல்லோரும் நினைப்பார்கள் ´ஆயுதந் தூக்கிப் போராடுபவர்கள் தானே` என்று. அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பது அவரோடு நேரே பேசும் போதுதான் தெரிந்தது. போராளிகளின் மீது அவர் கொண்டிருந்த பாசமும் நெருக்கமும் என்னை வியக்க வைத்தன.

மாவீரர்கள் எல்லோரையும் அவர் மனதில் நிறுத்தி வைத்திருப்பதை, எந்த மாவீரன் பற்றிப் பேசினாலும் அந்த மாவீரனைத் தன் நினைவில் கொண்டு வந்து அந்த மாவீரன் பற்றி அவன் இப்படி அவன் அப்படி என்று அவர் சொன்ன போது அறிந்து நான் வியந்து போனேன். தலைவர் என்பதன் அர்த்தத்தை அங்குதான் புரிந்து கொண்டேன்.

வன்னியின் நேர்த்தி மட்டுமா..! எது விடயத்திலும் அவர் காட்டும் ஒழுங்கு. தானே அந்த ஒழுங்கைக் கடைப் பிடிக்கும் கண்ணியமான அழகு. உண்மையான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள். என்னுள் எல்லாமே ஆழ்ந்த அதிசயமான வியப்பைத்தான் ஏற்படுத்தின.

எல்லோரும் நினைப்பது போல போராட்டம் மட்டுந்தான் அவரது குறியல்ல. ஒரு சுதந்திர தமிழீழத்தையும் அங்கு ஒரு சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதிலேயே அவர் கவனமும் செயற்பாடும் இருக்கிறது. பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு. போராட்டக் களங்களுக்குள் எந்த தவறுகளும் ஏற்பட்டு களம் களங்கப் பட்டு விடாதபடி அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகள்… சொல்லி முடியாத பிரமிப்பு என்னுள்.

அண்ணையுடனான அந்தப் பொழுதுகள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது கூட அண்ணையைச் சந்தித்த அந்தப் பொழுதுகளும் அண்ணை எம்மோடு பழகியவிதமும் மிகவும் இனிமையாக பசுமையாக என்னுள்ளே பதிந்திருக்கின்றன.

சந்திரவதனா

ஜெர்மனி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More