செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் காமன்வெல்த் நாடுகளுக்கான கடன் நிவாரணம்: மன்னிப்புக் கோரல் விவகாரத்தில் இங்கிலாந்து புதிய நகர்வு

காமன்வெல்த் நாடுகளுக்கான கடன் நிவாரணம்: மன்னிப்புக் கோரல் விவகாரத்தில் இங்கிலாந்து புதிய நகர்வு

1 minutes read

அன்டிகுவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய (காமன்வெல்த்) அரச தலைவர்கள் உச்சி மாநாட்டின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் மன்னருடன் இணைந்து இங்கிலாந்து பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் கலந்துகொள்ளவுள்ளார். இதன்போது, கடந்த கால அடிமை வர்த்தகம் தொடர்பில் அடுத்த ஆண்டில் இங்கிலாந்து உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோருவது குறித்து ஏனைய உறுப்பு நாட்டுத் தலைவர்களுடன் அவர் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

காமன்வெல்த் நாடுகள் எதிர்கொண்டு வரும் அதிகரித்த கடன் வட்டிச் சுமைகளுக்கு உதவும் வகையில் ‘கடன் மறுசீரமைப்பு’ திட்டமொன்றை பிரதமர் முன்வைப்பார் என டவுனிங் வீதி பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உறுப்புரிமை பெற்றுள்ள 56 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த உச்சி மாநாட்டில், அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான நட்டஈடு விவகாரம் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமோவா தீவில் நடைபெற்ற கடந்த உச்சி மாநாடு இங்கிலாந்தின் நிலைப்பாட்டில் சாதகமாக அமையவில்லை என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர், இங்கிலாந்து இம்முறை ஒரு புதிய அணுகுமுறையுடன் இம்மாநாட்டில் பங்கேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நட்டஈடு விவகாரம் உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என முன்னாள் பிரதமர் சர் கியர் ஸ்டார்மர் கடந்த முறை தெரிவித்திருந்த போதிலும், ஏனைய நாட்டுத் தலைவர்கள் அதனை வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் கடந்த மாநாட்டுக்குப் பின்னர் வெளிப்பட்ட சில தலைவர்களின் அதிருப்தியை நேரடியாகக் கையாண்டு, முன்னிலை பெற தற்போதைய பிரதமர் முயன்றுள்ளார்.

அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட காமன்வெல்த் நாடுகள் பல வருடங்களாக அது குறித்து ஒரு வெளிப்படையான கலந்துரையாடலை கோரி வருவதாகவும், பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் ஒதுங்கியிருந்ததன் மூலம் அமைப்பின் வினைத்திறனே பாதிக்கப்பட்டதாகவும் கார்டியன் நாளிதழில் எழுதிய கட்டுரையில் பிரதமர் பேர்ன்ஹாம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிணங்க, வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபான்ட் மற்றும் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் ஆகியோருடன் இணைந்து அவர் முன்னெடுக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகள் நட்டஈடு தொடர்பான வாதப்பிரதிவாதங்களின் தீவிரத்தைத் தணிக்கும் என இங்கிலாந்துத் தரப்பு நம்புகின்றது.

அரசாங்கம் அத்தகைய உத்தியோகபூர்வ மன்னிப்பைக் கோருவதற்குத் தயாராக உள்ளதாகவும், அதுவொரு காத்திரமான நகர்வு எனவும் வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.

எனினும் வரலாற்று ரீதியான இச்செயல்களுக்காக தற்கால இங்கிலாந்து வரி செலுத்துவோரின் நிதியிலிருந்து இழப்பீடு வழங்குவது சரியான அணுகுமுறையல்ல எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளை, அடிமை வர்த்தகத்திற்காக மன்னிப்புக் கோர வேண்டாம் என கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் கெமி பேடனோக் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு மன்னிப்புக் கோருவது பிற நாடுகள் இழப்பீடு கோருவதற்கான கதவைத் திறந்துவிடும் என்றும், அடிமை வர்த்தகத்திற்காக பண இழப்பீடு வழங்கப்படக் கூடாது என்றும் அவர் வாதிட்டுள்ளார். இருப்பினும் அடுத்த இரு தினங்களில் உறுப்பு நாடுகளுடன் பரந்தளவிலான ஆக்கபூர்வ உரையாடல்களை முன்னெடுக்க முடியும் என்பதில் இங்கிலாந்து அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.