உலகளாவிய ரீதியில் வெப்பநிலை அதிகரிப்பானது 1.5 பாகை செல்சியஸைத் தாண்டும் பட்சத்தில், பனிப்பாறைகள், கடல் பனி மற்றும் பூமியின் உறைந்த பகுதிகளில் மீள முடியாத அளவுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் தீவிரமான எதிர்விளைவுகளைத் தடுக்கும் நோக்கில், உலக வெப்பநிலை உயர்வை 2 பாகை செல்சியஸிற்கும் குறைவாகக் கட்டுப்படுத்துவதுடன், அதனை 1.5 பாகை செல்சியஸுக்குள் மட்டுப்படுத்துவதற்கான துரித முயற்சிகளை முன்னெடுக்குமாறு ஐ.நா வெளியிட்டுள்ள இரு முக்கிய அறிக்கைகள் வலியுறுத்தியுள்ளன. இதன்போது 2015ஆம் ஆண்டு எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் முக்கியத்துவமும் நினைவூட்டப்பட்டுள்ளது.
பூகோள வெப்பநிலையானது நிர்ணயிக்கப்பட்ட 1.5 பாகை செல்சியஸ் என்ற வரம்பைத் தாண்டும் சந்தர்ப்பத்தில், பூமியின் சகல பனி அமைப்புகளையும் உள்ளடக்கிய ‘கிரையோஸ்பியர்’ (cryosphere) எனப்படும் உறைபனிப் பகுதிகளில் பாரியதும் மீளச் சரிசெய்ய முடியாததுமான பேரிழப்புகள் ஏற்படும் என அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பனிப்பாறைகள் மற்றும் கடல் பனி உருகுதல், உறைபனி நிலங்கள் இளகுதல் மற்றும் கடல் மட்டம் சடுதியாக உயர்வடைதல் போன்றவற்றினால் வெள்ளப்பெருக்கு முதல் குடிநீர் பற்றாக்குறை வரை பலதரப்பட்ட தீவிர தாக்கங்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. அத்துடன் வெப்பநிலை உயர்வின் சில பாதகமான விளைவுகள் தற்போதே தெளிவாக வெளிப்படத் தொடங்கியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.