1. இந்து சமுத்திரத்தில் (Indian Ocean) டிசெம்பர் 26, 2004 ஏற்பட்ட பூகம்பத்தால் (earth quack) உண்டான சுனாமியால் (tsunami) தாக்கப்பட்ட நாடுகளில் ஶ்ரீ லங்காவும் ஒன்று. இந்த சுனாமியால் ஶ்ரீ லங்காவின் தெற்கு கடற்கரையும் கிழக்கு கடற்கரையும் கூடுதலாக தாக்கப்பட்டன.
மனித இழப்புகள்: 31,229 உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள், காணாமல் போனவர்கள்: 4093, காயப்பட்டவர்கள்: 21,411.
2. இந்தியாவில் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு அஸ்ஸாமில் (Assam) 1998 ஆம் ஆண்டு ஏற்பட்டது. 2015 ஆம் ஆண்டு பெய்த பெரு மழையினால் தென்னிந்தியாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கினால் அடையார், கூவம் ஆறு போன்ற தமிழ்நாட்டிலுள்ள சென்னையின் பகுதிகளில் பெரும் சேதம் உண்டானது. பொருளாதார இழப்புகளுடன் மனித உயிர்களின் இழப்புக்களும் ஏற்பட்டன.
3. அவுஸ்திரேலியாவின் காடுகளில் உண்டான காட்டுத்தீயிற்கு (bush fire) நியூ சவுத் வேல்சிலுள்ள (New South Wales) கொஸ்பெர்ஸ் மலை (Gospers Mountain) தான் மையப்புள்ளி (epicentre —> central point) ஆக இருந்தது. அவுஸ்திரேலியாவின் காட்டில் 26, October 2019 இல் (26 ஒக்டோபர் 2019) ஏற்பட்ட (forest fire) காட்டுத்தீயினால் 444,000 ha அளவான காடுகள் எரிந்து அழிந்து போயின. பெரு வெள்ளம், காட்டுத்தீ, புயல், சூறாவளி, நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அழிவுகளுடன், உலக மகா யுத்தம் 1, உலக மகாயுத்தம் 2, நாடுகளுக்கிடையிலான யுத்தம், நாட்டுக்குள்ளேயே விடுதலைப் போராட்டங்கள் முதலிய மனிதரால் உண்டான அழிவுகளும், காலரா, அம்மை, மலேரியா காய்ச்சல், டெங்கு காய்ச்சல், கொரோனா பொன்ற தொற்று நோய்களும் மனித இனத்தை அழித்தன.
பொன்னம்மாவும் மணியும் சுப்பிரமணியம் வீட்டில் பாதுகாப்பாக இருந்தார்கள். ஆண்பிள்ளைகள் இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். பெரிய பரந்தன் மக்களை கணபதியார் பார்த்துக் கொள்வார். அதனால் மகாலிங்கத்தின் கவனம் முழுவதும் ஊரியான், முரசுமோட்டை மக்களை காப்பாற்றுவதிலேயே இருந்தது.
மகாலிங்கமும் பொலிசும் ‘போட்’ டில் ஏறிப்போகும் போது வெள்ளம் கடல் போல பாய்வதைக் கண்டார்கள். தொடக்கத்தில் பனைமரங்களின் மேல் பகுதி தான் தெரிந்தது. போகப்போக மாடுகள், ஆடுகள், நாய்கள் முதலியன அடித்துச் செல்லப்படுவதைக் கண்டார்கள். சில பாம்புகளும் அடித்து வரப்பட்டன.
பொலிஸ்காரன் “என்ன விதானையார் ஒண்டையும் காணேல்லை. நாங்கள் யாரைக் காப்பாற்றப் போறம்” என்று சொல்லி வாய் மூடவில்லை தூரத்தில் வீட்டுக்கூரைகள் தெரிந்தன. கடற்படை வீரன் தோணியை கிட்டவாக கொண்டு போகப்போக வீட்டுக் கூரைகளில் மனிதர்களைக் கண்டார்கள்.
மகாலிங்கமும் பொலிசும் ஒரு பக்கம் போய் மக்களை ஏற்றி, ‘போட்’ (boat) நிரம்பியதும் கொண்டு வந்து பரந்தன் சந்தியில் விட்டார்கள்.
அவர்கள் குமரபுரத்தில் உயரமாக கட்டப்பட்டிருந்த பாடசாலையை நோக்கி தளர்வாக நடந்து சென்றார்கள்.
அதே நேரம் முரசுமோட்டை விதானையாரும் பொலிசும் மற்றப் பக்கமாக போய் மக்களை ஏற்றி வந்தார்கள். மக்களின் காலை உணவைப்பற்றி யோசிக்க விதானைமாருக்கு அவகாசமில்லை.
எவ்வளவு வசதியாக வாழ்ந்த மக்கள் இன்று எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நின்றார்கள். திருவையாறு கடல் மட்டத்திலிருந்து இருந்த உயரத்தையும், முரசுமோட்டை கடல் மட்டத்திலிருந்து இருந்த உயரத்தையும் ஒப்பிட்டால், திருவையாறு கிட்ட தட்ட ஐம்பதடி (50 அடி) உயரமானது. இரணைமடு உடைப்பெடுத்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது நேரே கீழாக இருந்த ஊரியான், முரசு மோட்டை, பழைய கமம் ஆகிய ஊர்களே கூடுதலாக பாதிப்படைந்தன.
ஆடுகள், மாடுகள், கோழிகள், நெற்சூடுகள், வீட்டு பாவனைப் பொருட்கள், நெல் மூட்டைகள், உடுப்புகள், கட்டில்கள், கதிரைகள், மேசைகள் யாவற்றையும் வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. ஆட்கள் மட்டும் வீட்டுக் கூரைகளில் ஏறி இருந்தும், மரங்களில் தொங்கியும் தங்கள் உயிரை ஒருவாறு காப்பாற்றிக் கொண்டனர். சில மக்களை காணவில்லை என்றும் அவர்களையும் வெள்ளம் அடித்துச் சென்றிருக்கலாம் என்றும் மக்கள் கதைத்தார்கள்.
வீட்டுக் கூரைகளிலிருந்தவர்கள் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியான தமது நிலையை நினைத்து மனம் பேதலித்துப் போயினர். அதனால் மீட்புக்குழு “இறங்கி வந்து ‘போட்டில்’ ஏறுங்கோ” என்று கத்திக் கூப்பிட்ட போதும் சிலர் அசையாது எங்கோ பார்த்தபடி இருந்தனர்.
பின்னர் மீட்புக்குழுவினர் தாங்கள் இறங்கி தூக்கி ஏற்ற வேண்டி வந்தது. மீட்புக்குழுவினர் தேடித் தேடி மக்களை காப்பாற்றி அழைத்து வந்தனர். கடற்படை தோணிகளும் கடற்படையினரும் மக்களை காப்பாற்றுவதில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டார்கள்.
சுப்பிரமணியத்தார், மிகவும் வசதியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்த மக்கள் எல்லாவற்றையும் இழந்து பாடசாலையில் தஞ்சம் அடைந்ததைக் கண்டு நெஞ்சம் பதைபதைத்துப் போனார். பாடசாலைக்கு முன் வீட்டில் இருந்தபடியால் அவர் விரைந்து செயற்பட வேண்டி வந்தது. விபரம் அறிந்து ஏனைய குமரபுரம் மக்களும் ஓடி வருவார்கள் என்று அவருக்கு தெரியும்.
அவர், பரமசாமி, தர்மலிங்கம், நாகலிங்கம், தேசிகன் முதலிய இளைஞர்களைக் கூப்பிட்டு “தம்பிமார், சனங்கள் பசியைப்பற்றி யோசிக்கிற நிலைமையில இல்லை. குழந்தைகளும் சிறுவர்களும் பசியில் கத்துகினம். என்னட்டை அரிசி, தேங்காய் இருக்குது. இப்போதைக்கு கஞ்சியை காய்ச்சி குடுப்பம், மத்தியானத்திற்கு ஏதும் சாப்பாடு செய்வம். கொஞ்சம் கெதியாய் காய்ச்சுங்கோ” என்று இளைஞர்களிடம் சொன்னார். இளைஞர்களும் வேகமாக பெரிய கிடாரத்தில் கஞ்சியை காய்ச்ச தொடங்கினார்கள்.
மக்கள் வந்திருப்பதைக் அறிந்த செட்டியார், சண்முகம், சுப்பையா, சிதம்பரப்பிள்ளை, சின்னப்பு, சரவணமுத்து, கார்த்திகேசு ஆகியோர் அரிசியும் தேங்காயும் சைக்கிளில் கட்டி கொண்டு வந்தார்கள்.
சுப்பிரமணியத்தின் மனைவி இராசம்மா, பொன்னம்மாவை பார்த்து “வாருங்கோ தேத்தண்ணி போட்டுக் கொண்டு போய் பிள்ளைகளுக்கு குடுப்பம்” என்று சொல்ல, பொன்னம்மாவும் “ஓம், அதுக்கென்ன” என்று சொல்லி இராசம்மாவுடன் சேர்ந்து கொண்டா. இருவரும் தேநீரையும் பேணிகளையும் எடுத்துக்கொண்டு பாடசாலைக்கு சென்று பிள்ளைகளுக்கு கொடுத்தார்கள்.
முதல் வருசம் வெள்ளம் வந்த போது குமரபுரத்தின் பின் பக்கமுள்ள மக்கள் பாடசாலையில் வந்து இருந்தனர். அந்த ஞாபகத்தில் இராசம்மா கொஞ்சம் கூடுதலாக தோசைக்கு போட்டிருந்தா. வந்தவர்களுக்கு அவ வைத்திருந்த தோசை மா காணாது. ஆனால் சிறுவர்களின் குட்டி வயிற்றுக்கு போதுமானது.
இராசம்மா தோசை சுட, பொன்னம்மா தேங்காய் துருவி கொடுக்க, இராசம்மாவின் தங்கச்சியாரும் வேறு சில பெண்களும் சம்பல் இடித்தனர்.
இராசம்மா சிறுவர்களை தங்கள் வீட்டிற்கு கூட்டி வந்து, முன் விறாந்தையிலும் பின் விறாந்தையிலும் இருத்தி தோசையும் சம்பலும் கொடுத்து சாப்பிட வைத்தா.
விதானைமார் தொடர்ந்து ஒரு இடமும் விடாது தேடி மக்களை கூட்டி வந்தனர். றோட்டிலை கார்கள் ஓடமுடியாதபடி வெள்ளம் பாய்ந்ததால், அரசாங்க அதிபரும் (GA), டீ. ஆர். ஓ. வும் (D.R.O) ‘கெலிகொப்ரரில்’ (Helihopter) வந்து கிளிநொச்சி ‘றொட்றிக்கோ (Rodrico) மைதானத்தில் இறங்கி, பின் ஜீப்பில் ஏறி பரந்தனுக்கு வந்து நிலமையை அவதானித்து மேலிடத்துக்கு அறிவித்தார்கள்.
இலங்கை விமானப்படையினரிடம் அப்போது இருந்த ‘கெலிகொப்ரர்கள்’ போதாது. அதனால் இந்திய விமானப்படையினரின் உதவியும் கோரப்பட்டது. இரு பகுதியும் இணைந்து முதலில் சமைத்த உணவுப் பொதிகளையும், பின்னர் உலர் உணவுப்பொருள் பொதிகளையும் போட்டனர்.
அவற்றை மகாலிங்கம் விதானையார், குமரபுரம் இளைஞர்களின் உதவியுடன் எடுத்து, மக்களுக்கு பங்கிட்டு வழங்கினார். கொடுத்து முடியும் மட்டும் சுப்பிரமணியத்தார் விதானையார் கூடவே நின்று உதவிகள் செய்தார்.
பெரியபரந்தன் பாடசாலையிலும் பொதிகள் போடப்பட்டதாக தகவல் வந்ததால் மகாலிங்கம் நிம்மதி அடைந்தார். எந்த சூழ் நிலையையும் தகப்பன் தனது தம்பிமாரினதும் மைத்துனர்களினதும் உதவியுடன் சமாளித்திருப்பார் என்பது மகாலிங்கத்திற்குத் தெரியும்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த போதும், வெள்ளம் குறையத் தொடங்க மகாலிங்கம், மார்க்கண்டு விதானையாருடன் ஒரு ‘ஜீப்பில்’ பெரியபரந்தனுக்கு போனார். நீலனாறு பாய்ந்து கொண்டிருந்தது, ஆனால் ‘ஜீப்’ உயரமானதாக இருந்ததால் அதனூடாக செல்ல முடிந்தது.
பெரியபரந்தன் பாடசாலையில் தங்கியிருந்தவர்களைப் பார்த்து விசாரித்தார். அவர்கள் மகாலிங்கத்தைக் கண்ட மகிழ்ச்சியில் சிரித்த போதும் அந்த சிரிப்பில் விரக்தி இருந்தது தெரிந்தது. கணபதியார் ஒரு பெரிய அறையை சீமேந்தினால் உயரமாகக் கட்டி, கூரையை கிடுகினால் வேய்ந்திருந்தார்.
வல்லிபுரம் இரண்டு அறைகளும் விறாந்தையும் கொண்ட சிறிய வீட்டை கட்டி கூரைக்கு ஓடு போட்டிருந்தார். அதனால் அவர்கள் வீடுகளுக்குள் வெள்ளம் போகவில்லை. பேரம்பலத்தின் வீடும் நல்லையரின் வீடும் மிகவும் உயரமான காணியில் கட்டப்பட்டிருந்ததால் தண்ணீர் போகவில்லை.
இவ்வாறு உயரமான இடங்களில் வீடுகளை கட்டியிருந்தவர்களின் வீடுகள் மட்டும் தப்பியிருந்தன. ஆனால் எல்லாருடைய வளவுகளுக்குள் நின்ற ஆடுகள், வண்டில் மாடுகள், கோழிகள், தாராக்கள், நெற்சூடுகள் எல்லாவற்றையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. காட்டில் மேயப்போன எருமைகள், பசுக்கள், ஆடுகள் மேடான பகுதியில் ஏறி தப்பி இருக்க கூடும் என்று நம்பினார்கள்.
நல்லையர் “பொன்னம்மாவும் பிள்ளைகளும் சுகமாயிருக்கினமா?” என்று கேட்டார். மகாலிங்கம் “பொன்னம்மாவும் பிள்ளையும் சுப்பிரமணியத்தார் வீட்டிலை நிக்கினம். நான் பரந்தனை விட்டு அசைய ஏலாது. கார்க்கார நாதனை அனுப்பி பொடியளை கூப்பிடப் போறன். அவங்களும் வந்தாப்பிறகு எல்லாருமாக வாறம்.” என்றார்.
அப்போது பேரம்பலம் “நாங்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்திட்டம். செருக்கன், குஞ்சுப்பரந்தன் ஆட்கள் கொல்லன் ஆற்றைக் கடந்து வர ஏலாமல் போட்டுது. அவை எல்லாரும் உருத்திரபுரம் பள்ளிக்கூடத்திற்கு போனவையாம்.” என்றார். அவர்களை நினைத்து பயந்திருந்த மகாலிங்கம் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
மூன்று நான்கு நாட்களில் வெள்ளம் குறையத் தொடங்கியது. வெள்ளம் நன்றாக குறைந்த பிறகு, ஆம்பிளைகள் மட்டும் போய் நிலைமையை அவதானித்து வருவதெனவும், வீடுகளை துப்பரவாக்கவும் திருத்தவும் ஆக்களுக்கு உதவிகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும், அதன் பிறகே பெண்களையும் பிள்ளைகளையும் கூட்டிச் செல்வதெனவும் டீ. ஆர். ஓ. வும் விதானைமாரும் ஏனைய அதிகாரிகளும் தீர்மானித்தார்கள்.
டீ. ஆர். ஓ. கந்தோர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை பதிந்தார்கள். விதானைமார் கூட நின்று அவர்களுக்கு உதவிகள் செய்தார்கள். சுகாதாரத்துறையினர் நீரிறைக்கும் இயந்திரங்களைக் கொண்டு போய், கிணறுகளை சுத்தம் செய்வதற்கு முன் வந்தனர். முரசுமோட்டை, பழையகமம், ஊரியான் மக்களை மீளவும் குடியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தன.
மகாலிங்கத்திற்கு யாழ்ப்பாணத்தில் பிள்ளைகள் கவலைப்படுவார்கள் என்று தெரியும், ஆனால் அவரால் தனது கடமையை விட்டு விலத்த முடியவில்லை. அதனால் கார்க்கார நாதனைக் கூப்பிட்டு “தம்பி பிள்ளையள் கொட்டடியில் பெரியாச்சி வீட்டில நிக்கினம். ஒருக்கால் போய் அவையளைக் கூட்டி வா. உனக்கு இடம் தெரியும் தானே?” என்று கேட்டார்.
கார்க்கார நாதன் “ஐயா, நான் உங்களை இரண்டு மூன்று முறை அங்கை கொண்டு போய் விட்டிருக்கிறன். எனக்கு பெரியாச்சி வீடு நல்லாய் தெரியும், நான் போய் பிள்ளையளைக் கூட்டிவாறன்” என்று சொல்லிவிட்டு யாழ்ப்பாணம் நோக்கி காரை செலுத்தினார். வெள்ளம் வடிந்ததால் யாழ்ப்பாண றோட்டிலை வாகனங்கள் போய் வந்தன.
இனி பழையபடி அந்தந்த ஊருக்கு அந்தந்த விதானைமார் போய் தமது கடமையை பார்க்க வேண்டும் என்று டீ. ஆர். ஓ. அறிவித்தார். ஊரியான், முரசுமோட்டை மக்களை மீள குடியேற்றும் பொறுப்பு முரசுமோட்டை விதானையாருக்கு வந்தது.
அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக போகத் தொடங்கினார்கள். உருத்திரபுரத்தின் பொறுப்பு அவசர நிலைமையில் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவரும் திறம்பட செயற்பட்டிருந்தார். ஆனால் செருக்கன், குஞ்சுப்பரந்தன், உருத்திரபுரத்திற்கும் மகாலிங்கமே விதானை என்றபடியால் அவர்களைப் போய் பார்த்து ஆறுதல் கூறி, இனி செய்ய வேண்டியதை தானே செய்ய வேண்டும் என்று மகாலிங்கம் எண்ணிக் கொண்டிருக்கையில், கார்க்கார நானும் பிள்ளைகளுடன் வந்து சேர்ந்தார்.
பிள்ளைகள் வந்திருப்பதை அறிந்து பொன்னம்மா ஓடி வருவதற்கிடையில், மகாலிங்கம் பிள்ளைகளைக் கண்ட மகிழ்ச்சியில் அவர்களிருவரையும் அணைத்து முத்தமிட்டார். பிள்ளைகளுடன் தவமும் வந்திருந்தா. வழக்கமாக தவத்துடன் கமலாவும் வருவது வழக்கம்.
தவம் “பிள்ளைகளை தனிய விட ஏலாது. கமலா இப்ப ஒரு ‘டிஸ்பென்சரியிலை’ (Dispensary) வேலை செய்கிறா. அது தான் நான் கூட்டிக் கொண்டு வந்தனான்” என்றா.
பிள்ளைகளைக் கூட்டி வந்த கார்க்கார நாதனைப் பார்த்து “தம்பி, மிச்சம் பெரிய உபகாரம். பிள்ளைகளை கவனமாக கொண்டு வந்து விட்டிட்டாய்” என்று கூறிய மகாலிங்கம் அவருக்குரிய காசைக் கொடுத்து அனுப்பிவிட்டு பெரியபரந்தனுக்கு போக வெளிக்கிட்டார்.
அப்போது சுப்பிரமணியம் “விதானையார் சமையல் முடிஞ்சுது சாப்பிட்டிட்டு போகலாம்” என்றார். மகாலிங்கம் பிள்ளைகளை கூட்டி வருவதாக கூறியதால் கணபதியார், வேலுப்பிள்ளையையும் சுந்தரத்தையும் சுப்பையாவையும் கூட்டிக்கொண்டு போய் தியாகர்வயல் வளவையும் வீடுகளையும் துப்பரவாக்கினார்.
மகாலிங்கம் ஒரு பெரிய அறையையும் விறாந்தையையும் கட்டி கூரையை கிடுகால் வேய்ந்திருந்தார். ஒரு அறையையும் தலைவாசலையும் மண் போட்டுயர்த்தி மண்ணினால் அரைச்சுவர் வைத்து கட்டி கூரையை கிடுகால் வேய்ந்திருந்தார். தலைவாசல் கொஞ்சம் உயரம் குறைவென்பதால் தண்ணீர் போய் மண்சுவரும் விழுந்து விட்டது. அறையை உயரமாக கட்டியிருந்தபடியால் அரைச்சுவரும் விழவில்லை, நிலமும் ஊறவில்லை.
வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகள் உடனே பள்ளிக்கூடத்துக்கு ஓடினார்கள். அங்கு வந்திருந்த எல்லாரும் பாடசாலையை துப்பரவு செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருந்தனர். வைத்தீஸ்வரக்குருக்கள் பொடியளின்ரை படிப்பை பற்றியும் வெள்ளத்தைத் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார்.
மகாலிங்கமும் பொன்னம்மாவும் அவர்களிடம் போய் சொல்லி விட்டு, பிள்ளைகளுடன் தியாகர்வயலை நோக்கி நடந்தனர். ஊரே வெறிச்சோடிப் போயிருந்தது. பனைமரங்கள் மட்டும் அசையாது ‘நாங்கள் இருக்கிறோம் வாருங்கள்’ என்று சொல்லுமாப்போல உயர்ந்து நின்றன.
வழியில் ஒரு அறையை உயரமாக கட்டியிருந்த ரீச்சர் “நாங்கள் வீட்டை விட்டு வெளிக்கிடேல்லை. நெஞ்சளவு தண்ணிக்குள்ளாலை பொடியங்கள் அரிசி சாமான் கொண்டு வந்து தந்தவங்கள்” என்றா. சூட்டுப்புட்டிகளில் நிமிர்ந்து நின்ற நெற்சூடுகள் ஒன்றையும் காணவில்லை. வயல்களில் நெற்பயிர்கள் எல்லாம் அள்ளுப்பட்டு போய்விட்டன. பார்க்கும் இடமெல்லாம் ஒரே வெள்ளக்காடாக இருந்தது.
ஒன்றுமில்லாமல் வந்து ஊரைக் கட்டியெழுப்பிய மக்கள், உயிரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்து நிற்பதைப் பார்த்த மகாலிங்கத்தின் மனம் பதைபதைத்தது. பிள்ளைகளுடன் வீட்டை நோக்கி நடந்தார். வழியில் சில வீடுகள் பாதிக்கப்படாமல் இருந்தன.
இன்னும் சிலவற்றில் வீட்டில் நிலம் ஊறிப்போயிருந்தது. சிறிய கொட்டில்கள் வெள்ளத்தில் அடிபட்டுப் போயிருந்தன. தியாகர்வயலுக்கு மகாலிங்கம் போய்ச் சேர்ந்தவுடன் முத்தர்கணபதியும் கந்தையரும் வந்து நடந்தவற்றை கதை கதையாக கூறினார்கள். இன்னும் கொஞ்சம் வெள்ளம் வத்திய பிறகு காட்டுக்குள் போய் ஆடு, மாடு, எருமைகளில் எதாவது தப்பியிருக்குதா என்று பார்க்க இருப்பதாகவும் கூறினார்கள்.
மகாலிங்கம் “எனக்கும் உங்களோடை வர விருப்பம் தான். என்ன செய்யிறது நான் நாளைக்கு செருக்கன், குஞ்சுப்பரந்தன், உருத்திரபுரம் போய் மக்களைப் பார்க்க வேண்டும்” என்றார்.
மனிதன் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால், பிறகு தன்னிலும் பெரிய சக்தி ஒன்று இருப்பதை மனிதன் மறந்து விடுவான். மகாலிங்கம் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டு முற்றத்தில் வெள்ளம் பழையபடி வந்திருப்பதைக் கண்டார்.
இம்முறை வெள்ளம் கடல் பக்கமிருந்து வந்ததை அவதானித்த போது தான் கடல் பெருக்கெடுத்து வருகிறது என்பது விளங்கியது. பரந்தன், முரசுமோட்டை, ஊரியானில் வெள்ளம் வடிய பெரிய பரந்தன், செருக்கன், பூனகரி பொன்ற கரையோர கிராமங்களுக்கு கடல் நீர் பெருக்கெடுத்து வந்திருந்தது. பிள்ளைகள் வெள்ளத்தைத் கண்டு மகிழ்ந்து, கைக்கு அகப்பட்ட கடதாசிகளினால் கப்பல் செய்து தண்ணீரில் மிதக்க விட்டு விளையாடினார்கள்.
கந்தையராலும் முத்தர்கணபதியாலும் காட்டிற்குள் சென்று மாடுகளை தேட முடியவில்லை. மகாலிங்கத்தால் உருத்திரபுரத்திற்கு செல்ல முடியவில்லை. தவமும் பொன்னம்மாவும் இவ்வளவு துன்பத்திலும் பிள்ளைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதைக் கண்டு சோகமாக சிரித்தார்கள்.
அடுத்த நாள் கடல் நீர் உள்வாங்கத் தொடங்கியதும், காட்டுக்குள் போய் தேடுவதற்கு கணபதியார், நல்லையர், முத்தர்கணபதி, கந்தையர் முதலியவர்களுடன் இளைஞர்கள் சிலரும் வெளிக்கிட்டு தியாகர்வயலுக்கு வந்தார்கள்.
அப்போது முத்தர் கணபதி மகாலிங்கத்தைப் பார்த்து “பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்தது போலை வெள்ளம் வந்தது போதாதென்று கடலும் பெருக்கெடுத்து வந்து விட்டது” என்று கவலையாக சொன்னார். அவர்கள் மகாலிங்கத்துக்கு சொல்லி விட்டு வெளிக்கிட, சிறிது தூரத்தில் தோளில் துவக்குடன் பேரம்பலத்தார் “கொஞ்சம் பொறுங்கோ, நானும் வாறன்” என்று சொன்னபடி ஓடி வருவது தெரிந்தது.
அவர்கள் போவதை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்ற மகாலிங்கம் ‘பாவம் சனங்கள், அவையள் உடனடி நட்டத்தை மட்டும் பார்க்கினம். கடல் நீர் வந்ததால் வயல்களின் மேற்பரப்பு உவராகப் போவதையும் பூவல்களுக்குள்ளும் கிணறுகளுக்குள்ளும் போன கடல் நீர் குடி தண்ணீரை உவராக்கியதையும் காலம் கடந்து தான் யோசிப்பார்கள்’ என்று மிகவும் கவலையுடன் நினைத்து கொண்டார்.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/
பகுதி 14 – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/
பகுதி 15 – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/
பகுதி 16 – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/
பகுதி 17 – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/
பகுதி 18 – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/
பகுதி 19 – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/
பகுதி 20 – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/
பகுதி 21 – https://vanakkamlondon.com/stories/2021/01/99913/
பகுதி 22 – https://vanakkamlondon.com/stories/2021/02/100718/
பகுதி 23 – https://vanakkamlondon.com/stories/2021/02/101415/
பகுதி 24 – https://vanakkamlondon.com/stories/2021/02/101804/
பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/
பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/
பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/
பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/
பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/
பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/
பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/
பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/
பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/
பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/
பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/
பகுதி 36 – https://vanakkamlondon.com/stories/2021/05/111664/
பகுதி 37 – https://vanakkamlondon.com/stories/2021/05/112697/