Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 35 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 35 | பத்மநாபன் மகாலிங்கம்

17 minutes read

இலங்கையும் இந்தியாவும் சுதந்திரம் அடையும் வரை இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மக்கள் போய் வந்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், முறையான ‘பாஸ்போர்ட்’ (Passport), ‘விசா’ (Visa) இன்றி அவ்வாறு பயணம் செய்ய முடியாது. அவ்வாறு வருவது ‘கள்ளக்குடியேற்றம்’ என்றும், தோணியில் வருபவர்களை ‘கள்ளத்தோணிகள்’ என்றும் அழைத்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கையின் தென் பகுதிக்கு போறவர்கள், ஆனையிறவில் ஒரு தடையை (Barrier) தாண்டித் தான் போகவேண்டும். குடாநாட்டிற்குள் வருபவர்களும் அந்த தடையை (Barrier) தாண்டி தான் உள் நுழையலாம்.

ஆரம்பத்தில் இரண்டு பொலிஸார் (Police) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து காலை நேரத்தில் சைக்கிளில் வருவார்கள். மத்தியான சாப்பாட்டை பொலிஸ் நிலையத்திலிருந்து, யாழ்ப்பாணம் செல்லும் வாகனங்களில் கொடுத்து விடுவார்கள். கள்ளக்குடியேற்றம் செய்ய முயற்சி செய்யும் ‘கள்ளத்தோணிகளை’ தடுப்பது தடையின் (Barrier) பிரதான நோக்கமாக இருந்தது. மாலை நேரத்தில் இரண்டு பொலிஸார் சைக்கிளில் இரவுச் சாப்பாட்டுடன் வந்து காலையில் வந்தவர்களை விடுவிப்பார்கள்.

ஆனையிறவில் முற்காலத்தில் ஆங்கிலேயர் போக்குவரத்து செய்யும் போது களைப்பாறி சென்ற தங்குமிடம் இப்போது புதியதொரு கட்டிடத்தில் ஓய்வு விடுதியாக (Rest house) மாற்றப்பட்டுள்ளது. பிரயாணம் செய்பவர்கள் அங்கே தங்கி செல்வார்கள். அது சில வேளைகளில் ‘விருந்தினர் விடுதி’ (Guesthouse) என்றும் அழைக்கப்பட்டது. ‘ஓய்வு விடுதிகள்’ அரசினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. இங்கு முதலே சொல்லி வைப்பதன் மூலம் உணவையும் பெற்றுக் கொள்ளலாம்.

ஓய்வு விடுதிகளில் வெளிநாட்டு மதுபானங்களும் வழங்கப்பட்டன. பெரிய பெரிய உத்தியோகத்தர்களும், வியாபாரிகளும், செல்வந்தர்களும், வெளிநாட்டினரும் தான் கூடுதலாக தங்குவார்கள். சாமானிய மனிதர்கள் கூடிய காசுக்களைக் கொடுத்து அங்கு தங்குவது சாத்தியமற்றது.

1923ஆம் ஆண்டு ஓய்வு விடுதிகளை, ஹோட்டல்கள் இல்லாத இடங்களாகப் பார்த்து கட்டினார்கள்.

மகாலிங்கம் மிகவும் பொறுப்புணர்வுடன் தனது கடமையை ஆற்றி வந்தார். அவரின் நிர்வாக எல்லைகள் படிப்படியாக கூடியது. கூழாவடிச் சந்திக்கு காரில் போய், அப்போது அங்கிருந்த ஒரே தேநீர் கடையினருகில் மரநிழலில் நிறுத்தி விட்டு, கடைக்காரனின் சைக்கிளில் ஓடி உருத்திரபுரத்தை சுற்றி வருவார்.

கார் பொனெற்றில் (bonnet) வைத்து தேவையான கடிதங்களுக்கு ஒப்பமிட்டு, பதவி முத்திரையையும் பதித்து கொடுப்பார். அப்போது உருத்திரபுரத்தில் ஒரு பகுதி மக்கள் குடும்பங்களுடன் குடியேறி விட, ஏனைய பகுதிகளில் குடும்பத் தலைவர் மட்டும் நின்று காணிகளை திருத்துதல், அரசினர் உதவியுடன் இரண்டு அறைகள் கொண்ட கொலனி வீடுகளை கட்டி முடித்தல், நெற்பயிர்களை விதைத்தல் முதலிய வேலைகளைச் செய்தார்கள்.

விதானையார் அடுத்து கூழாவடிச் சந்தியிலிருந்து காரில் எட்டாம் வாய்க்காலுக்கு போவார். அங்கு காத்திருக்கும் மக்களுக்கான உதவிகளை செய்து விட்டு நேரே கரடிப்போக்கு சந்திக்குப் போய், பூனகரி வீதியால் திரும்பி ஐந்தாம் வாய்க்காலுக்கு வருவார். ஐந்தாம் வாய்க்காலால் வரும் தண்ணீரை பழைய பெரிய பரந்தன் கிராமத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் இடையில் நீலனாறு தடுத்தது.

எட்டாம் வாய்க்காலால் வந்த தண்ணீரை பெரிய பரந்தன் மக்கள், உருத்திரபுரம், எட்டாம் வாய்க்காலில் குடியேறிய மக்களுடன் பங்கிட வேண்டி வந்தது. அதே போல பத்தாம் வாய்க்காலால் வந்த தண்ணீரை குஞ்சுப்பரந்தன் மக்கள், உருத்திரபுரம், பத்தாம் வாய்க்காலில் குடியேறிய மக்களுடன் பங்கிட வேண்டி வந்தது. எனவே கால போகத்தில் வழமை போல முழுக்காணிகளையும் செய்த குஞ்சுப்பரந்தன், பெரிய பரந்தன் மக்கள் சிறுபோகத்தில் இரணைமடுக்குளத்தில் தேங்கி நின்ற நீரின் அளவைப் பொறுத்து, நீர்ப்பாசன பொறியியலாளர்களால் அனுமதிக்கப்பட்ட காணியின் ஒரு பகுதியையே விதைத்தனர்.

கரடிப்போக்கிலிருந்து நீலன் ஆறு வரையான பகுதி காடாக இருந்தமையால் ‘பெரியபரந்தன் காடு’ என்று அழைக்கப்பட்டது. அங்கு 1936 ஆம் ஆண்டு தொடங்கம் காலத்திற்கு காலம் யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள், ஆண்கள் மட்டும் வந்து காடு வெட்டி, களனிகளாக்கி, காலபோக, சிறுபோக நெற்செய்கை காலத்தில்  நின்று வயல் செய்தனர்.

மிகுதி நாட்கள் யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள தங்கள் ஊர்களுக்கு சென்று விடுவர். ‘பெரியபரந்தன் காட்டு’ வயல்களுக்கு ஐந்தாம் வாய்க்காலால் தான் இரணைமடு தண்ணீர் வந்தது. அதனால் பதிவுகளில் ‘பெரிய பரந்தன் காடு’ என்று இருந்தாலும் மக்கள் அந்த ஊரை ‘ஐந்தாம் வாய்க்கால் ‘ என்றே குறிப்பிடுவர்.

ஓவசியர் சந்தியில் ஒரு பெரிய நீர்ப்பாசன ஓவசியர் தங்கும் விடுதியும், ஒரே கட்டிடத்தில் நான்கு அறைகள், முன்பக்கத்தில் விறாந்தையும், பின் பக்கத்தில் சமையலறையும் கொண்ட தொகுதியாக கட்டப்பட்டு, ஒவ்வொரு தொகுதியில் ஒவ்வொரு குடும்பமாக, நீர்பாசனப் பகுதி ஊழியர்கள் நால்வர் தங்கும் விடுதியும் கட்டப்பட்டன. ஓவசியரும் (Overseer) ஊழியர்களும் அந்த விடுதியில் குடும்பங்களுடன் தங்கி தங்கள் கடமைகளை செய்தனர். அவர்களின் பிள்ளைகள் பரந்தன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலேயே கல்வி கற்றார்கள்.

‘பெரிய பரந்தன் காட்டின்’ (5ஆம் வாய்க்காலின்) ஒரு பகுதி கிளிநொச்சி விதானையாரின் பிரிவிற்குள்ளும், ஓவசியர் சந்தியிலிருந்து நீலன் ஆற்றங்கரை வரையான பகுதி பரந்தன் விதானையாரின் கீழும் வந்தன. காலையில் ஐந்தாம் வாய்க்காலில் வயல் செய்வோர் விதானையார் கட்டாயம் வருவார் என்று தெரிந்ததால், ஓவசியர் சந்தியில் வந்து காத்திருப்பர். கரடிப்போக்கில் திரும்பி பூனகரி வீதியால் வரும் மகாலிங்கம் விதானையார் அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றுவார். கடைசியாக கணபதியார் வீட்டில் வந்து விதானையாரின் கார் நிற்கும்.

கணபதியார் மகனின் தேவைக்காக ஒரு தலைவாசல் கட்டி, ஒரு மேசையும் ஒரு கதிரையும் வருபவர்கள் இருப்பதற்காக இரண்டு நீள வாங்கில்களும் போட்டிருந்தார். மகாலிங்கம் அங்கு வந்து நின்றவர்களின் தேவைகளை கவனித்து விட்டு, தியாகர் வயலுக்கு நடந்து செல்வார்.

இப்போது மகாலிங்கத்தின் மகன் பத்மநாபன் அரிவரி வகுப்பில் சேர்ந்து படிக்க, பத்மநாதன் இரண்டாம் வகுப்பில் படித்தார்.  ஓவசியரும் மனைவியுமாக தமது மகளை ஒரு ‘மைனர்’ காரில் (Morris minor) கொண்டு வந்து படிக்க விடுவார்கள்.

நீர்ப்பாசன பகுதி ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை சைக்கிளில் கொண்டு வந்து விடுவார்கள். விதானையாரின் இரண்டு பிள்ளைகளையும், வேலுப்பிள்ளை தியாகர்வயலிலிருந்து நடந்து கூட்டி வருவான். அவன் பன்னிரண்டு மணி வரை கணபதியார் வீட்டில் நின்று, அரிவரி வகுப்பு முடிய பத்மநாபனை குறுக்கு வழியால் வரம்புகளில் நடந்து கூட்டி செல்வான். மூத்த மகனை கூட்டி செல்ல பாடசாலை விடும் நேரத்திற்கு பொன்னம்மா வருவா. 

வரம்புகளில் பிள்ளைகள் பாடசாலைக்கு நடந்து செல்வதால் ஒவ்வொருவரும் தங்கள் வயலில் உள்ள அந்த வரம்புகளை அகலமாகவும் உயரமாகவும் கட்டி, புல்லுகளை வெட்டி துப்பரவாக வைத்திருப்பார்கள். அந்த வரம்புகள் ‘நடை வரம்புகள்’ என்று அழைக்கப்பட்டன.

இராணுவம், கடற்படை, பொலிஸார் அனைவரும் இணைந்து கள்ளக்குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்தனர். தென்னிந்தியாவிலிருந்து மன்னார், விடத்தல்தீவு, பள்ளிக்கூடா, நாச்சிக்குடா, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, வடமராட்சி கிழக்கு போன்ற இடங்களுக்கு தோணிகள் வருவதுண்டு.

அவர்களை படையினர் தேடிப்பிடித்து, ஒரு முகாமில் வைத்து விசாரித்து விட்டு, இந்தியாவிற்கு திரும்ப அனுப்பிவிடுவார்கள். ஒரு நாள் கடும் காற்றினால் அலைக்கழிக்கப்பட்ட தோணியொன்று சங்குப்பிட்டியை தாண்டி சுட்டதீவுக் கரையில் ஒதுங்கியது. (அப்போது சங்குப்பிட்டி பாலம் கட்டப்படவில்லை) ஆட்களை இறக்கி விட்டு ஓட்டிகள் தப்பி ஓடிவிட்டார்கள்.

படையினர் தோணியில் வந்தவர்களை துரத்தி துரத்தி பிடித்துக் கொண்டு போனார்கள். ஒரு மனிதனும் இரண்டு சிறுவர்களும் பற்றைக்குள் புகுந்து ஒளிந்ததை அவர்கள் அவதானிக்கவில்லை. அவர்கள் காட்டாற்றில் வந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டு, சாப்பாடு எதுவுமின்றி இரண்டு மூன்று நாட்கள் பதுங்கியிருந்தனர்.

ஒரு நாள் மாலை நேரம் கணபதியார் வேட்டையாட விரும்பி வடக்கு காட்டிற்குள் துவக்குடன் திரிந்தார். அப்போது பற்றைக்குள் ஏதோ சரசரக்கும் சத்தத்தைக் கேட்டார். கணபதியார் பற்றைக்குள் ஒளிந்திருக்கும் மிருகத்தை தனது கண்களால் பார்த்து இனங்காணாமல் சுடமாட்டார். (‘தசரதன் ஆற்றில் தண்ணீர் குடிப்பது மான் தானா என்று உறுதிப்படுத்தாமல் அம்பெய்து வயோதிபர்களான தந்தை, தாயை பரிதவிக்க விட்டு விட்டு அவர்களின் மகனைக் கொன்ற வீண் சாபத்திற்கு உள்ளானான்’)

கணபதியார் பற்றைக்குள் உற்றுப் பார்க்க, பற்றைக்குள்ளிருந்து எலும்பும் தோலுமாய் ஒரு மனிதனும் இரண்டு சிறுவர்களும் வெளியில் வந்தார்கள். அவர்கள் மூவரும் ஓடி வந்து கணபதியாரின் கால்களில் விழுந்து “சாமி காப்பாத்துங்க” என்று கதறினார்கள். கணபதியார் விசாரித்த போது அவர்கள் தாங்கள் தோணியில் வந்த கதையையும், தங்களுடன் வந்தவர்கள் படையினரிடம் பிடிபட்டதையும் கூறினார்கள்.

கணபதியார் “தம்பிமார், ஏன் உயிரை மதிக்காமல் இந்த ஆபத்தான வழியில் வந்தீங்கள்.” என்று கேட்டார். பெரியவனான தனுஷ்கோடி “ஐயா, எங்களூரிலை மழையில்லாமல் பயிருகள் அழிஞ்சு போய்ச்சுங்க, பஞ்சம் வத்திடுச்சு, ஒரு நேர சாப்பாடும் கிடைக்கலை, பஞ்சம் பிழைச்சுக்க கடலாலை வந்தங்க. இவன் பெரியவன் சுந்தரம், அண்ணை பையன். சின்னவன் சுப்பையா, தங்கச்சி மகன். என்னை நம்பி அனுப்பி வைச்சாங்க. மன்னாருக்குப் போய், அங்கிட்டு திருகோணமலை போறதெண்டு வந்தங்க. ஓட்டி திசைமாறி இங்கிட்டு இறக்கிட்டு ஓடிட்டான்.” என்றான். பசியினால் நிக்கமுடியாமல் தடுமாறினான்.

கணபதியார் அவர்களை ஒரு மரநிழலில் இருத்தி விட்டு, தன்னோடு வந்தவனைப் பார்த்து “தம்பி, ஓடிப்போய் பொன்னமாட்டை சொல்லி, கிடக்கிற சாப்பாட்டையும் ஒரு பானையிலை தண்ணியும் கொண்டா.” என்றார். தன்ரை வீட்டுக்கு போய் மீனாட்சியிடம் வாங்கியவர சுணங்கும் எண்டு தான் மருமகளிடம் அனுப்பினார். அனுப்பி விட்டு யோசனையில் ஆழ்ந்தார்.

மகாலிங்கம் தங்களுக்கு டீ.ஆர்.ஓ. (D.R.O) கடைசியாய் நடந்த கூட்டத்தில், “விதானைமார் கவனமாக இருங்கோ. உங்கடை பகுதிக்குள்ளை யாரும் கள்ளத்தோணியிலை வந்தால் உடனையே அறிவித்து விடுங்கள். பிறகு உங்களுக்கும் கரைச்சல் வரும்.” என்று சொன்னதாக கூறியிருந்தார்.

அதனால் கணபதியார் “பசியிலை வந்தவங்களுக்கு ஒரு வாய் சோறு கொடுக்காமல் என்னெண்டு விடுறது. இவங்களை பார்க்க பாவமாய் கிடக்கு. தாங்கள் இஞ்சை ஏதும் உழைச்சு அனுப்பினால் தான் தங்கடை குடும்பம் பசியாறும் எண்டு அழுறாங்கள். நான் என்ன செய்ய..” என்று தடுமாறிப் போனார்.

பொன்னம்மா சாப்பாட்டை அனுப்பி விட்டு தவிப்புடன் காத்திருந்தாள். மாமன் கஷ்டப்படுபவர்களிடம் இரக்கத்துடன் நடப்பதை பலமுறை பார்த்திருக்கிறாள். மகாலிங்கம் சட்டம் தான் முக்கியம் என்று நிற்பவர். ஏன் அவங்களுக்கு அறிவிக்கவில்லை என்று துள்ளப் போறார். இரண்டு பேருக்குமிடையில் முதல் முதலாக ஒரு பிரச்சனை வரப்போகுது. காளியாச்சி, நீ தான் காப்பாற்ற வேணும் என்று கும்பிட்டாள்.

கணபதியார் மூன்று பேரையும் சாப்பிட வைச்சார். அவர்கள் ‘அவக்’ ‘அவக்’ என்று விழுங்குவதைக் கண்டு வருந்தினார். “தம்பிமார், ஆறுதலாக சாப்பிடுங்க” என்றார். அவர்கள் சாப்பிட்டு முடிய கூட்டி வந்து, தியாகர்வயலுக்குள் நுழையாமல் காட்டினுள் பத்தை மறைவில் இருக்கச் செய்து விட்டு, மகன் வந்து விட்டாரா என்று பார்க்க வீட்டிற்கு வந்து, தலைவாசலில் இருந்து கொண்டார். வேட்டைக்கு கணபதியாருடன் துணையாக போனவன், சாப்பாட்டையும் தண்ணியையும் கொடுத்து விட்டு, கணபதியார் வீட்டுக்கு ஓடிப் போய் மீனாட்சியிடம் விசயத்தை சொல்லி விட்டான்.

மீனாட்சி “இதென்னடா கரைச்சல். தகப்பனுக்கும் பிள்ளைக்குமிடையில் பிரச்சனையை கொண்டு வந்து விட்டாவே எங்கடை காளியாச்சி.” என்று புலம்பியபடி தியாகர்வயலுக்கு ஓடிவந்து கணபதியாரின் அருகில் இருக்க, பிள்ளைகள் ஓடி வந்து பேரன் பேர்த்தியின் மடியில் இருந்து கொண்டார்கள்.

அன்று மகாலிங்கம் கொஞ்சம் வேளைக்கு வந்து விட்டார். காரை விடும் போது ‘என்ன அம்மாவையும் காணேல்லை, ஐயாவையும் காணேல்லை’ என்று நினத்த படி வீட்டை நோக்கி நடந்தார். ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் ஒரு கட்டை தூரம் நடக்கவேணும்.

அன்று பிள்ளைகளுக்கு பழங்களும் விளையாட்டுச் சாமான்களையும் வா ங்கியிருந்தார். வீட்டுக்கு வந்த மகாலிங்கத்தை பிள்ளைகள் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களிடம் பொருட்களை கொடுத்துவிட்டு மகளை பொன்னம்மாவிடம் இருந்து வாங்கினார்.

அப்போது தாயும் தகப்பனும் இருப்பதைக் கண்டு விட்டு “என்ன ஐயா, இரண்டு பேரும் இஞ்சை இருக்கிறியள்” என்று கேட்டபடி வந்து அருகில் இருந்தார்.

மீனாட்சி பொன்னம்மாவைப் பார்த்து “பிள்ளை தம்பி களைச்சு போய் வந்திருக்கிறான். முகத்தை கழுவப்பண்ணி தேத்தண்ணியைக் கொடு” என்றா. தகப்பனும் தாயும் ஏன் வந்திருக்கினம் என்ற யோசனையுடன் மகாலிங்கம் தேத்தண்ணியைக் குடித்தபடி திரும்பவும் வந்து தாயின் பக்கத்தில் இருந்தார்.

மகாலிங்கம் தாயைப்பார்த்து “அம்மா, என்ன வீட்டிலை எல்லாத்தையும் போட்டது போட்டபடி விட்டு விட்டு இரண்டு பேரும் இஞ்சை வந்து இருக்கிறியள்” என்று கேட்டார். என்ன சொல்லுறது எண்டு தெரியாமல் மீனாட்சி தவித்துப்போனா.

கணபதியார் ஒரு முறை செருமி விட்டு “தம்பி, காத்து மாறி அடிச்சதாலை ஒரு தோணிக்காரன், தோணியிலை வந்த ஆக்களை சுட்டதீவு கரையில் இறக்கிப் போட்டு ஓடியிட்டான்” என்றார்.

மகாலிங்கம் “எனக்கு தெரியும் ஐயா, டீ. ஆர். ஓ. கந்தோரிலை கதைச்சவை. ஆமிக்காரர் எல்லாரையும் சுத்தி வளைச்சு பிடிச்சுக்கொண்டு போனவையாம்” என்றார்.

கணபதியார் தயங்கியபடி “இல்லை தம்பி, ஒரு மனுசனும் ரெண்டு பொடியளும் பத்தைக்குள்ளை பதுங்கி இருந்திட்டாங்கள். நான் வேட்டைக்கு போய் என்னடா பத்தைக்குள்ளை சர சரக்குதெண்டு பாக்க, அவங்கள் பட்டினி கிடந்து சாகிற நிலைமையிலை வந்து என்ரை காலை பிடிக்கிறான்கள். அது தான் பொன்னம்மாட்டை சாப்பாடு வாங்கி, சாப்பிட பண்ணி கூட்டி வந்து, பத்தை மறைவிலை விட்டிட்டு வந்து, உன்னை பார்த்துக்கொண்டு இருக்கிறன். தங்களை மன்னாரிலை இறக்கிறதெண்டு தானாம் கூட்டி வந்தவங்கள். மாறி இஞ்சை இறக்கிப் போட்டு ஓடிவிட்டாங்களாம். தங்களை பிடிச்சுக்குடுக்க வேண்டாம் எண்டு அழுறான்கள், ஊரிலே மனிசி பிள்ளைகள் பசி, பட்டினியாய் இருக்குதுகளாம். தாங்கள் திருகோணமலைக்கு போயினமாம், பாவமாய் இருக்குது” என்றார்.

மகாலிங்கத்திற்கு தகப்பனைப் பற்றி தெரியும். யாரெண்டாலும் பசி பட்டினியாய் இருப்பதை தாங்க மாட்டார். ஐயா செய்தது சட்டப்படி பிழை எண்டாலும், தானும் அவர் செய்ததை தான் செய்திருப்பன் என்று நினைத்தார்.

தகவல் தெரிந்து வந்து கூட்டமாய் நின்றவர்களைப் பார்த்து “ஒருத்தரும் இதைப்பற்றி மூச்சு விடக்கூடாது. பொடியளும் சேர்ந்து போனால் பிடிபட்டு விடுவார்கள்.  பொடியள் இஞ்சை நிற்கட்டும். மூன்று பேர் உடனையே பெரிய ஆளை, வண்டிலிலை காட்டு வழியாலை கொண்டுபோய் மாங்குளத்துக்கு கிட்டவாய் விட்டிட்டு வாருங்கோ. திருகோணமலைக்கு போற பாதையை காட்டி விடுங்கோ. றோட்டுக்கரையிலை இருக்கிற பத்தை மறைவிலை போகச் சொல்லுங்கோ. தற்செயலாய் பிடிபட்டால் இஞ்சை வந்து இறங்கினதை பற்றி சொல்ல வேண்டாம் என்று சொல்லி விடுங்கோ. சொன்னால் இஞ்சை வந்து பொடியளையும் பிடிச்சுக் கொண்டு போய் விடுவான்கள்.” என்று விளக்கமாக சொன்னார்.

கணபதியார் தனுஷ்கோடியைப் பார்த்து “காளியாச்சி காப்பாற்றுவா. பயப்படாமல் போ” எனக் கூறினார். பெரியபரந்தன் மக்கள் இதைப்பற்றி இனி கதைக்க மாட்டார்கள் என்று விதானையாருக்கு தெரியும். தகப்பனுக்கும் மகனுக்கும் பிரச்சினை வராமல் நல்லபடியாய் எல்லாம் நடந்ததை நினைத்து மாமியாரும் மருமகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

மீனாட்சியும் பேரம்பலத்தாரும் தாங்கள் ஒவ்வொரு பொடியளை பொறுப்பெடுப்பதாக சொன்னார்கள். அதற்கு பொன்னம்மா “உங்கடை வீடுகள் றோட்டுக்கு கிட்டவாய் இருக்குது. தற்செயலாய் அவங்கள் தேடி வந்தாலும் ஒழிக்க இடமில்லை. அவங்கள் இஞ்சை நிற்கட்டும். தேடி வருபவர்கள் றோட்டிலை (Road) இறங்கி இஞ்சை வாறதுக்கிடையில் பொடியள் காட்டுக்குள் ஓடி ஒழிச்சிடுவாங்கள்” என்று சொல்லும் போதே, முதல் வேலையாய் பொடியளின்ரை தலைமயிரை வெட்டிவிக்க வேணும் என்று நினைத்துக் கொண்டாள்.

தனுஷ்கோடி கணபதியாரையும் ஏனையவர்களையும் நூறுமுறை கும்பிட்டு விட்டு இளைஞர்களுடன் போக ஆயத்தமானார். இளைஞர்கள் இரவோடிரவாய் தனுஷ்கோடியை கொண்டு போய் மாங்குளத்தில் இறக்கி விட்டு, கணபதியார் கொடுத்துவிட்ட ஐம்பது ரூபாய் காசையும் கொடுத்து போகும் வழியைக் காட்டி விட்டு “அண்ணை, றோட்டிலை நடக்காதை. நடந்து வவனியாவிற்கு போட்டியெண்டால், பஸ்ஸிலை ஏறி திருகோணமலைக்குப் போய் விடலாம்.” என்று சொல்லி அனுப்பி விட்டு திரும்பி வந்தார்கள்.

இரண்டு கிழமைகள் கழித்து கணபதியாரின் விலாசத்திற்கு கிறுக்கல் எழுத்தில் ஒரு தபால் அட்டை (Postcard) வந்தது. அதில் தனுஷ்கோடி தான் சுகமாய் திருகோணமலக்கு வந்து சேர்ந்ததாயும், துறைமுகத்தில் நாட்டாமையாய் வேலை செய்வதாயும் பசங்களை கவனமாக பார்க்கும்படியும் மன்றாட்டமாய் எழுதியிருந்தான்.

கணபதியாரும் மீனாட்சியும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். (‘நாட்டாமை’ என்பதற்கு இந்தியாவில் வேறு கருத்துக்கள் இருந்தாலும் இலங்கையில் ‘மூட்டை சுமக்கும் தொழிலாளி’ என்ற கருத்தே நிலவுகின்றது.)

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/

பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More