“என்னவாம்” எண்டு மனிசி கேக்க “இல்லை, மூத்தவளுக்கு நாள் வைச்சிருக்காம் எல்லாரையும் கட்டாயம் வரட்டாம் எண்டு சொல்லக் கந்தன் வந்தவன் , உன்னைக் கேட்டவன் நான் தான் நீர் வேலையா இருக்கிறீர் எண்டு சொன்னான்”எண்டு சொல்லி முடிக்க முதல் , “நான் அப்பவும் சொன்னான் எங்கடை மூத்தவனுக்கு கேளுங்கோ எண்டு , நீங்க வாய் பாக்க எவனோ ஒருத்தன் தூக்கீட்டான்” எண்டு என்டை இயலாமையை மனிசி சுட்டிக்காட்ட அதைக்கவனிக்காம சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன்.
அடுத்த கிழமை மூண்டு நாள் கொண்டாட்டத்தோடு கலியாணம் சிறப்பா நடந்து முடிஞ்சுது. கட்டி முடிச்சு மூண்டு மாசத்தில முழுகாம மகள் இருக்கிறா எண்டு கந்தன் சொல்ல வீட்டில இருந்து கோழிமுட்டை கொண்டேக் குடுக்கப் போனன். போனால் கந்தன்டை மருமோன் “வாங்கோ” எண்டு சொல்லீட்டு விடியவே சீவல் வேலைக்கு வெளிக்கிட்டுப் போனான்.
திருப்பி வீட்டை வந்து மனிசிக்கு விசயம் சொல்ல “உவன் நடுவிலான் படிப்பும் இல்லை சும்மா பந்தடிச்சுக் கொண்டு திரியிறான், அவனுக்கு தொழிலைப் பழக்குங்கோ உங்களுக்கும் அடிக்கடி நாரிப் பிடிப்பு வரூது” எண்டு சொன்னதைக் கேட்டு அவனைக் கூட்டிக் கொண்டு போனன்.
எப்பிடியும் கள்ளமா எங்கயாவது ஏறி இருப்பான் எண்டு தெரிஞ்சாலும் தெரியாதது மாதிரி “ ஏறத் தெரியுமோ “ எண்டு கேக்க, “அப்பப்ப இளநி புடுங்க தென்னை ஏறினான் இதுகும் ஏறுவன்” எண்டான் நடுவிலான். “பனை அப்பிடி இல்லை இது பாத்து ஏறோனும்” எண்டு சொன்னதைக் கேக்காமல் எல்லாம் தெரியும் எண்ட மாதிரி அந்தரப்பட்டவனை சரி ஏறிப்பட்டாத்தான் தெரியும் எண்டு போட்டு ஏறி ஓலையை வெட்டு எண்டு விட்டன். சடசடவெண்டு முதல் பத்தடி ஏறினவன் பிறகு அப்பிடியே இறங்கீட்டான் . இறங்கினவன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கிட்ட வந்தான்.
ஏறிறது எண்டால் சும்மா இல்லை. ஏற முதல் இறுக்கமா கச்சையைக்கட்டி, இருந்தால் shorts ஐப்போட்டிட்டு சாரத்தை மடிச்சுக் கொடுக்குக் கட்டு கட்டோணும். உனக்கெண்டு சாமாங்கள் எல்லாம் வேணும். ஏறு பட்டி பழசு தான் வெட்டாது அதோட அடிக்கால் சிராய்ப்பு வராது, எண்டாலும் இழுத்துப் பாத்திட்டு அளவு சரி எண்டாத்தான் காலில போடோணும். தளைநாரைப் பாத்து அம்மாட்டைக் கேட்டுப் பின்னி எடுத்து வை. தொழில் இல்லாட்டியும் பாளைக் கத்தியை ஒவ்வொருநாளும் தீட்டி வைக்கோணும், தொழிலுக்கு கொண்டு போறதை வேற ஒண்டுக்கும் பாவிக்கப்படாது, பழைய கருங்காலித் தட்டுப்பொல்லு ஒண்டிருக்கு பாளையைத்தட்டக் கட்டாயம் தேவை. சுத்திச் சுத்தி தட்டோணும், அப்ப தான் நுனி நசிஞ்சு நல்லா கள்ளு வடியும் எண்டு முறை ஒவ்வொண்டாச் சொல்லத் தொடங்கினன்.
ஏற முதல் மனசுக்கு அம்மனைக் கும்பிட்டிட்டி ஏறோணும். “ஏறு பட்டி வெட்டுதா எண்டு பாத்து , இடுப்புப்பட்டியை இறுக்கிக் கொண்டு பறீக்க சாமான் எல்லாம் இருக்கா எண்டு பாத்து, ஏறேக்க பறிக்கால கீழ விழாம சரியா வைச்சிட்டுத்தான் ஏறத்தொடங்கோணும். பிரதட்டைக்குக் கால் ரெண்டையும் சேத்துக் கீழ்க்கட்டு கட்டிற மாதிரித் தான் கால்ரெண்டையும் சேத்தபடி தளைநாரைப் போடோணும். கட்டிப்பிடிச்சு ரெண்டடி ஏறீட்டுப் கொடுக்கு மாதிரி ரெண்டு காலாலேம் மரத்தைப் பிடிச்சிட்டுக் கையை உயத்தி மரத்தைச் சுத்திப் பிடிச்சபடி உடம்பை நிமித்தி எழும்ப வேணும். எழும்பீட்டு திருப்பியும் காலால மரத்தை கொடுக்குப்பிடி பிடிச்சபடி கையை இன்னும் மேல எடுத்து பிறகு மரத்தைக் ஒரு கையால கட்டிப் பிடிச்சபடி balance பண்ணிக்கொண்டு மற்றக்கையை மரத்தோட கவிட்டுப்பிடிச்சு கையைக்குத்தி கால் ரெண்டையும் சேத்தபடியே எடுத்து மேல எடுத்து வைக்க வேணும் . அப்பிடிக் காலை உயத்தேக்க உடம்பு மரத்தோட சாயாம சரிவாத்தான் இருக்கோணும் இல்லாட்டி காலை உயத்திறது கஸ்டம் . மரத்தைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு மரத்தோட சேத்துக் காலை இழுத்தாக் கை கால் நெஞ்செல்லாம் சிராயப்புத் தான் வரும்” எண்டு சொல்லப் பேசாம கேட்டுக் கொண்டு நிண்டான் இந்த முறை சரியாப் பழகோணும் எண்ட விருப்பத்தோட.
முதலில வெறும் ஏத்தம் இறக்கம் தான் பயிற்சி. ஓலை வெட்டி, நொங்கு புடுங்கி , சீவின பாளையில பானை மாத்தி இறக்கப் பழகி கடைசீல தான் சீவத் தொடங்கிறது. பிளேன் ஓடிற மாதிரித்தான் இதுகும் ஏற முதலே check list மாதிரி எல்லாம் இருக்கா எண்டு விபரமாய்ப் பாக்கோணும், ஏறீட்டு முட்டீல ஓட்டை, கத்தி மொட்டை எண்டு சொல்லக்கூடாது. “தொடக்கத்தில ஏறினாப்பிறகு பாளை வெட்டி முட்டி கட்டேக்க இடுப்புக்கயித்தைப் போட்டுக் கொண்டு நிக்கோணும், போகப்போக மட்டைக்குள்ள ஏறி நிண்டு வெட்டிலாம்”, எண்டு திருப்பித்தருப்பிச் சொல்லிக் குடுக்க இதிலேம் இவ்வளவு விசயம் இருக்கிறது அவனுக்கு விளங்கத் தொடங்கினது .
“அதோட ஏறேக்க நேராப் பாக்கோணும் இல்லாட்டிப் பக்கத்து மரத்தைப் பாக்கலாம். மேல போகேக்க மேகத்தைப் பாத்தாலோ இல்லாட்டி இறங்கேக்க நிலத்தைப் பாத்தாலா சரி தலைசுத்தத் தொடங்கப் பயம் வந்திடும். ஆனால் கொஞ்ச நாளில பழகினாப் பிறகு ஏறி நிண்டபடி கீழ என்ன நடக்குது எண்டு பாக்க நல்லா இருக்கும் எண்டு சொன்னன். காத்துக்க ஏறி இறங்கேக்க பனைசாயிறதுக்கு எதிர்ப் பக்கமா ஏறு மற்றப்பக்கம் நிண்டா மரம் முறிஞ்சு விழப்போற மாதிரி இருக்கும். ஒரு நாளும் பனை ஆக்கள் ஏறேக்க விழாது. ஆளைத் தாங்கிற சத்தில்லாட்டி பனை சோடைபத்தீடும். முதலில ஓலை விழுந்து, நுனி பட்டு பிறகு தான் அடி பழுதாப் போகும் ஆனபடியா நுனி பழுதாப்போன மரங்களில ஏறிரேல்லை.
அதோட ஒருநாளும் விக்கிற சாமானை வாயில வைச்சுப் பாக்காத. மரம் ஒருக்காலும் கலப்படம் செய்யாது. அது தன்டை சாறைத்தான் தாறது. சாறு கெட்டதில்லை, இனிப்பும் புளிப்பும் தண்ணிக்கு, மண்ணுக்கு, மழைக்கு எண்டு மாறும்” எண்டு கள்ளுபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஒலை வெட்டக்கேட்டா கவனம் ஒண்டைவிட்டொரு வருசம் தான் வெட்டிறது, காண்டாவனம் நடக்கேக்க வெட்டிறேல்லை. அப்பிடி ரெண்டு வருசம் வெட்டாத மரம் எண்டால் கவனம் காவோலை வெட்டேக்க குளவி இருக்கும் எண்டு அனுபவத்தை அப்பா சொல்லக் கவனாமாக் கேட்டான் சின்னவன்.
மூண்டு மாசம் அப்பரோட போனவன் , தனக்கெண்டு மூண்டு மரம் தேடிப்பிடிச்சு தனிச்சுத் தொழில் தொடங்கினான்.
காலமைத் தொழிலுக்கு நாலு நாலரைக்குப் போறாக்களும் இருக்கினம். இரவல் காணீல பேசிக் காசு குடுத்து ஏறிப் பாளை வெட்டி நுனி கொத்தி , முட்டி கட்டி இறக்கி , எல்லா மரத்தையும் ஒரு can இல ஊத்திக் முழுசா நிரப்பிக் கொண்டு போக வழி மறிச்சுக் கேட்டவனுக்கும் முட்டீல இருக்கிறதை குடுத்திட்டு மிச்சத்தை தவறணைக்கு கொண்டு போக , அவன் சும்மா விலையைக் குறைக்க “ என்ன நேற்றைக்கு கொஞ்சம் புளிச்சிட்டு” எண்டிற புளிச்சல் கதையையும் கேட்டிட்டு , திருப்பி வந்து மனிசி விடிய கட்டித் தந்ததை விழுங்கீட்டு திருப்பி அடுத்த வளவுக்க ஏறி இறக்க பத்து மணி ஆகீடும். வெய்யில் ஏறக் கள்ளுப் புளிச்சிடும் எண்டதால மத்தியானக் கள்ளை ஆரும் கிட்ட இருக்கிற ஆக்களுக்கு வீடு வளிய போய்க்குடுத்தா கொஞ்சம் கூடக்கூறையத் தாறதோட வெறுந்தேத்தண்ணியும் கிடைக்கும். போய்ச் சாப்பிட்டிட்டுப் படுத்தாஅடுத்த இறக்கம் பின்னேரம் நாலு மணிக்குத்தான்.
“என்ன மாமா வெளீல இருந்து வந்திருக்கிறார் போல, எங்களுக்கு ஏதும் போத்திலைக் கீத்திலைக் கொண்டந்தவரே” எண்டு கேட்ட படி வாறவருக்கு ஓம் ஒரு party ஐப் போடுவம் ஆனால் , “ அவருக்கு நல்ல கூழ்வேணுமாம் அதோடரெண்டு கிடாய்ப் பங்கும் வேணுமாம், பங்கு போட்டிட்டு ரத்தவறை வறுத்து முடிய உடன் கள்ளும் வேணுமாம்” எண்ட சம்பாசணை எல்லா வீட்டையும் கேட்டிருக்கும் .
இக்கரைக்கு அக்கரைப் பச்சையாய் எங்கடை சனத்துக்கு அவை கொண்டாற போத்தில தான் நாட்டம் இருக்கும் , ஆனா அவை குடிச்சா ஒரு பனைக்கள்ளுத் தான் குடிப்பன் எண்டு தேடிக் குடிப்பினம். அவையோட ஊருக்குப் புதுசா வாறதுகள் இறக்கிறவனை ஏறவிட்டு நிமிந்து பாத்துப் வீடியோ எடுத்து ஊரெல்லாம் “எங்கள்” புகழைப் பரப்ப வெளிக்கிடுவினம் .
வந்தவை இறக்கினதை குனிஞ்ச படி குடிச்சிட்டு “எண்டாலும் பழைய taste இல்லை” எண்டு ஒரு கதை விட்டு ஆனாலும் அடி மண்டி வரை குடிப்பினம். இறக்கினதை மட்டும் பாக்கிறவைக்கு ஒருநாளும் இறக்கிறவனைத் தெரியாது . நெஞ்சு மடிப்போட சேத்தா 8 packs பனங்கட்டி நிறத் தேகம், பிறப்புக்கு முதலே எழுதப்பட்ட விதியால் பிரியோசனமில்லாமல் போய் ஏறிஏறியே அழிக்கப்பட்ட கைரேகை,
காலமை குளிச்சாப்பிறகு உடம்பைத் துடைச்சிட்டுத் தலையில கட்டின துவாயத்துண்டு, எப்பவுமே மடிச்சுக்கட்டின சாரம், இடுப்பில கட்டின சாரத்தை இறுக்கிக் கொண்டிருந்த இடுப்புப் பட்டியில இயனக்கூடு, சைடில தொங்கிற தளைநார், அதோட சேந்த முட்டி , சாரத்துக்க செருகின பாளைக்கத்தி, tyre less ரியூப் மாதிரி இருக்கிற வழுவழுப்பான tyreஓட முன்னுக்கும் பின்னுக்கும் பழைய can தொங்கவிட்ட கறள் கட்டின சைக்கிளில வாறவனின்டை கள்ளு மட்டும் எங்களுக்கு இனிக்கும், ஆனாலும் இன்னும் இறக்கிறவனை மட்டும் ஏனோ இனிக்கேல்லை இன்றைக்கும்.
Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்
சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்
சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்
சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 24 | இந்த அடி நாளைக்கு… | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 25 | பக்கத்து இலைக்கு பாயாசம்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 28 | தாண்டாக்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர் …
சுவடுகள் 29 | அழையா விருந்தாளி | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 31 | சுயம் இழந்த சரிதம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 39 | இலக்கை நோக்கி | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 40 | ‘பாலுமகேந்திரா’ | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 41 | ‘காய்ச்சல்’ | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 42 | ஏற்றுமதி | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 43 | பாஸ் எடுத்தும் fail | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 44 | வெத்து இலை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 45 | பிரி(யா)விடை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 46 | “கப்பு முக்கியம்” | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 47 | காதல் கடை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 48 | சாண் ஏற பப்பா சறுக்கும் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 49 | லௌ(வ்)கீகம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 50 | “யாரொடு நோகேன்…” | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 51 | துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 52 | மெய்ப்பொருள் காண்பது அ(ரிது)றிவு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 53 | உறவுகள் தொடர்கதை | டாக்டர் ரி. கோபிசங்கர்