செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 36 | ரெக்கை கட்டிப் பறக்குதடீ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 36 | ரெக்கை கட்டிப் பறக்குதடீ | டாக்டர் ரி. கோபிசங்கர்

11 minutes read

உலகப் பொருளாதாரம் கொரானாவின் உச்சத்தில இருக்கேக்க எல்லாரும் சைக்கிள் வாங்க நானும் ஒண்டை வாங்கினன். “ அப்பா என்னை சைக்கிளில வைச்சு ஒருக்காச் சுத்துவீங்களோ” எண்டு சின்னவள் கேக்க நானும் மூச்சு வாங்க ஒரு சுத்தி சுத்தீட்டு வந்திறங்க , மனிசி தன்னையும் எண்டு கேக்க சைக்கிள் என்னைப் பாத்து சிரிச்சுது.

“ லவ் பண்ணிற காலத்தில ஏறும் ஏறும் எண்டு கேட்டிட்டு இப்ப மாத்திரம் என்ன “ எண்டு மனிசி முறைச்சுது.

லவ் , ரொமான்சுக்கு நல்ல வாகனம் ஒண்டு குதிரை இல்லாட்டிச் சைக்கிள் தான். இதில வாற சுகம் காரிலயோ இல்லைத் தேரிலயோ கூட வராது. சைக்கிளில ஏத்திக்கொண்டு போகேக்க முட்டியும் முட்டாமலும் படிற முதுகு , சட்டையோட சேந்து தட்டுப்படிற இடது கால் , பின்னால வருடிற வலது துடை மூக்கில உரசி வாயில கடிபடிற பறக்கும் தலைமயிர் எல்லாம் ஒரு மயக்கம் தர அப்பிடியே handle கைபிடியில இருக்கிற கையை அரக்கி நடு handle இல நடுங்கி நடுங்கி இறுக்கிப் பிடிச்ச படி சூடா இருக்கிற மூக்கு நுனியால மூச்சை கழுத்துப் பக்கம் குனிஞ்சு விட அந்த சூட்டில மனிசீன்டை காது சிவக்க என்ன கதைக்கிறது எண்டு தெரியாமல் நான் ஏதோ சொல்ல மனிசி திரும்பி “ காணும் நிப்பாட்டுங்கோ நான் இறங்கிறன் “ எண்டு சொல்ல , நானும் சடின் பிறேக்க போட்டு நிப்பாட்டிறதும் மனிசி இறங்கி ஓடிறதும் இடைக்கிடை நடந்தது. ஒவ்வொருக்காலும் கைக்கு சிக்கினது காதோட முடிஞ்சுது எண்டு கவலைப் பட்டாலும் , ஏதோ கிடைச்ச மட்டும் லாபம் எண்டு இருந்தனான்.

யாழ்ப்பாணமும் ஒரு காலத்தில ஒக்ஸ்போட் மாதிரி ஒரு சைக்கிள் சிற்றி தான். VC துரைராஜாவில இருந்து Prof. சிவசூரியா வரை சைக்கிளில தான் திரிஞ்சவை. சைக்கிள் அது ஒரு ஆபத்பாந்தவன், canteen க்கு காசில்லாட்டி அம்மாட்டை காசு வாங்க எனக்காக ரெண்டு ஒட்டு வாங்கும், பள்ளிக்கூடம் பிந்திப் போய் detention class இல மாட்டாம இருக்க காத்துப் போகும். அப்பப்ப சைக்கிள் செயினைக் கழட்டி பொம்பிளைப் பிள்ளைகளின்டை வீட்டைக் கண்டு பிடிக்க உதவும் , இயக்கமோ ஆமியோ சந்தீல நிண்டால் பிடிபடாமப் பறக்கச் செய்யும், குறூப்பாச் சேந்து சண்டைக்குப் போட்டு நிலமையைப் பாத்திட்டு அரைவாசியிலயே தப்பி ஓட வைக்க எண்டு நிறைய உதவி செய்யும். சைக்கிள் ஏற , இறங்க , ஓட நிப்பாட்ட எண்டு எல்லாத்துக்கும் வசதி. எங்கையும் கொண்டே நிப்பாட்டலாம், ஸ்டாண்ட் இருந்தா நடு ரோட்டில, இல்லாட்டி வேலியோ, மரமோ , ஒரு மதிலோ இருக்கும் சாத்திவிட. அதோட மதிலோட சாத்தீட்டு இருக்க அது கதிரை, மரத்தோட சாத்தீட்டு ஏறி மாங்காய் புடுங்க ஏணி, வேலிக்கு மேலால எட்டி விடுப்புப் பாக்க stand , டைனமோவை உருட்டி பாட்டுக்கேக்க உதவிற generator எண்டு multi purpose ஆப் பயன்படும்.

“விட்டா நீ உதில தான் கக்கூசுக்கும் போவாய் “ எண்டு அம்மம்மாவிட்டை பேச்சு வாங்கிற அளவுக்கு சைக்கிள் வாழ்க்கையோட ஒட்டி இருந்தது. எல்லாம் கடன் வாங்கிற வீட்டுப் பழக்கத்தில சைக்கிள் மட்டும் கடன் வாங்க வேண்டி இருக்கிறேல்லை ஏனெண்டால் தெரியாதவன் கூட எங்க மறிச்சாலும் ஏத்திக்கொண்டு போய் விடுவான். “ அண்ணை நேரயோ போறீங்கள் “ எண்ட கேட்டவருக்கு பதில சொல்லாமல் slow பண்ணி இடது கையை தூக்கி இடம் விடப் பாஞ்சு ஏறினவர் நன்றிக் கடனாக pedal போட்டுத் தர ஏத்தின சுமை தெரியாம ஓடலாம். “இது தான் சந்தி ,சரி வாறன் எண்டதில “ இருந்த thank you க்கு சிரிப்பாலயே “ you are welcome “ எண்ட படி தொடந்து உழக்கிறது அடுத்த ஆள் ஏறும் வரை. அப்ப ஆம்பிளைகளுக்கு இருந்த ஒரே ஆபரணம் சைக்கிள் தான் . அதால தான் அவன் அதை துடைச்சு துடைச்சு கவனமாப் பாவிப்பான் ஆரையும் ஏத்துவான் ஆனால் லேசில இரவல் குடுக்க மாட்டான்.

சைக்கிள் எண்டால் Size க்கு ஏத்த மாதிரி அரைச்சைக்கிள், கேபிள் போட்ட முக்காச் சைக்கிள், பின்னுக்கு support ஓட வாற chopper cycle மற்றும் சாதாரண சைக்கிள் எண்டு கன வகை இருந்தது. எண்பதுகளில் பெடியள் எல்லாருக்கும் ரெண்டு crush ஒண்டு சில்க் சுமிதா மற்றது Asia bike.

சிவலிங்கப்புளியடி சண்முகலிங்த்தின்டை சைக்கிள் கடையில அரை நாளுக்கு ஐஞ்சு ரூவா எண்டு வாடகைக்கு அரைச்சைக்கிள் வாங்கி பழகின பக்கத்து வீட்டு அண்ணாட்டை இலவசமா இரவல் வாங்கி உருட்டத் தொடங்கி விழுந்தெழும்பி ஓடிப் பழகத் தொடங்கினன்.

வீட்டை “ஓடிப்பழகவா” எண்டு கேட்டால் “ஏன் இப்ப கொஞ்சம் பொறு “ , பஸ்ஸில போ எண்டு பழகவிடாதுகள். ஓடுவன் எண்டு ஓடிக்காட்டிக் கேட்டாத்தான் சைக்கிள் கிடைக்கும். அடுத்த மாசம் ஊருக்கு வந்த அப்பாவுக்கு ஓடிக்காட்ட அடுத்த வருசம் பள்ளிக்கூடம் போக சைக்கிள் வாங்கித் தாரன் எண்டார். அப்பா திரும்பிப்போக அடுத்த நாளே அம்மாவை “ எப்ப வாங்கித் தாராராம் எண்டு நச்சரிக்க”அடுத்த முறை லீவில அப்பா வரக் கேப்பம் எண்டா.

ஆறாம் வகுப்புக்கு போக முதல் ஒரு மாதிரி கரும்பச்சைக் கலர் ஏசியா சைக்கிள் கஸ்தூரியார் வீதி வெங்கடேஸ்வரா கடையில போய் வாங்கினம். சைக்கிளை மட்டும் வித்திட்டு மற்றதெல்லாம் extra எண்டு சொல்ல பின்னுக்கு ஒரு கரியர்,handle பூட்டிற கரியர், பெல், side ஸ்டாண்ட், barக்கு கவர், பிறேக் கம்பிக்கு வயர், மட்கார்ட் கவர் எண்டு தேடித் தேடி வாங்கி அதோட ரயர் ரெண்டுக்கும் மறக்காம் பூவும் அங்கங்க குஞ்சமும் போட்டு உருட்டிக் கொண்டு வீட்டை வந்தன் , வாங்கின சைக்கிளைக் கழுவிப்பூட்டித்தான் ஓட வேண்டும் எண்ட படியால்.

கட்டின புதிசில மனிசியும் வாங்கின புதுசில வாகனமும் நல்லாத் தான் இருக்கும் போகப் போக தான் பிரச்சினைகள் வாறதோட maintenance costம் கஸ்டமாய் இருக்கும். அப்ப சந்திக்கு ரெண்டு சைக்கிள் கடை இருந்தும் பத்தாமல் இருந்தது.சின்ன வேலைக்கும் waiting time கூடவா இருந்திச்சுது, “ விட்டிட்டுப் போங்கோ பாப்பம் ஐஞ்சு சைக்கிள் நிக்குது” எண்டு தொடங்கி, ஆறேழு தரம் அலைய வைச்சுத்தான் திருத்தித் தருவாங்கள். இப்ப எப்பிடி mobile phone இல்லாம இருக்கேலாதோ அப்பிடித்தான் அப்ப சைக்கிளும் இல்லாமல் இருக்க ஏலாது. சைக்கிளை திருத்தக்குடுத்திட்டு போய் வாறதுக்கு ஆருக்கும் பின்னால கெஞ்சித் திரியிற கொடுமை இருக்குதே , யோச்சாலே எரிச்சல் வரும். இப்ப ஆசுபத்திரிக்கு வாறவனெல்லாம் அரைமணித்தியாலம் இருக்கமுடியாமல் புறுபுறுப்பாங்கள் ஆனால் repair க்கு வாகனத்தைக் குடுத்திட்டு அலையேக்க மட்டும் சும்மா இருப்பாங்கள்.

எங்கயாவது அவசரமாப் போக வெளிக்கிடேக்க தான் சைக்கிள் காத்துப் போய் இருக்கும் . அக்கம் பக்கம் “பம்ப் “ கடன் வாங்கிக் கொண்டு வந்தாக் கைபிடி ஆடும், கிறீஸ் ஒழுகும் பத்துத் தரம் முக்கி முக்கி அடிச்சாலும் கொஞ்சமும் ஏறாது. ஆரோ சொன்னான் எண்டு அவசரத்திக்கு உதவும் எண்டு hand pump ஒண்டு வாங்கிக்க கொண்டு வந்து சீட்டுக்கு கீழ இருக்கிற bar இல பூட்டி வைச்சன். ஆனாலும் ஒரு நாளும் ரயருக்கு காத்தடிக்க உதவேல்லை , கடைசீல நல்லூர் திருவிழாவில தான் தெரிஞ்சுது பலூனுக்கு காத்தடிக்கத்தான் அது பாவிக்கிறது எண்டு .

சைக்கிள் கடையில முந்தி இலவசமாக் காத்தடிச்சும் விட்டவங்கள். பிறகு காத்து அடிச்சுவிட மட்டும் காசு வாங்கி கடைசீல அடிச்சாலும் காசு அடிச்சு விட்டாலும் காசு எண்டு ஆகிச்சுது. டொக்டரிட்டை வருத்தம் எண்டு போறமாதிரித்தான் சைக்கிள் கடைக்குப் போறதும் . பிறேக் பிடிக்கேல்லை எண்டு போனால் நாலு சாமான் மாத்தி ரெண்டு சாமான் வாங்கிப் பூட்டினாப் பிறகு தான் விடுவினம். டொக்டர்மாரும் அப்பிடித்தான் இருமிக்கொண்டு போனவருக்கு இருமல் மருந்தோட இவ்வளவு நாளும் இல்லாத நாலு extra வருத்தத்தையும் கண்டுபிடிச்சு அதுக்கும் சேத்து மருந்து தருவினம்.

அப்பப்ப ஓடேக்க சைக்கிளில இருந்து விதம் விதமா எல்லாம் சத்தம் கேக்கும், இதுகும் இருமல் தடிமன் மாதிரித் தான் உடன ஓடிப்போய் கடையில காட்டத் தேவையில்லை. கை மருந்து மாதிரி செய்தால் சரி. Chain cover இல chain முட்டிற சத்தம் கேக்க காலால தட்டின தட்டுக்கு வகுப்பில மாஸ்டர் பிரம்பை உயத்த அடங்கிற சத்தம் மாதிரி இதுகும் நிக்கும் ஆனால் திருப்பியும் கொஞ்ச நேரத்தில கேக்கும். சைக்கிளில போய் எப்ப அடிபட்டாலும் இல்லாட்டி விழுந்தாலும் பேசினோன்ன மூஞ்சையை திருப்பிற மனிசி மாதிரி Handle உடன திரும்பீடும். கால் ரெண்டுக்கும் நடுவில வைச்சு இழுத்து நிமித்தினால் சரி ( குறிப்பு மனசியை இல்லை) handle சரியாகீடும்.

ஒருக்காலும் சைக்கிள் துறப்பைத் துலைக்காதவன் இருக்க மாட்டான். சைக்கிள் கனபேரின்டை காதலுக்கு “ மாமா” வேலை பாத்திருக்கு . ரியூசன் வழிய பொம்பிளைப் பிள்ளைகள் கதைக்கிறதுக்குச் சந்தர்ப்பம் சைக்கிளல வாறது , “காத்துப் போட்டு, செயின் கழண்டிட்டு, துறப்பைக் காணேல்லை “ எண்டு கேக்கிற பெட்டைகளுக்கு கேக்காமலே செய்யிறதுக்கெண்டே ஒரு உதவிப்படை திரியும் . இதையே டெக்னிக்கா பாவிச்சு மெல்ல மெல்ல லவ்வை develop பண்ணின கனபேர் இருக்கினம். உதவி கிடைக்காத நாங்கள் துறப்பைத் துலைச்சிட்டு பூட்டை உடைக்கத் தெரியாம தூக்கிக் கொண்டு சைக்கிள் கடைக்குப் போய் பூட்டை உடைச்சுட்டு பூட்ட வழியில்லாமல் நாய்ச்சங்கிலிக்கு Gate ன்டை ஆமைப்பூட்டை கொண்டு போய் தூணோட சேத்துக் கட்டின நாளும் இருந்தது.

காலமை எழும்பி பால் வாங்க கடைக்குப் போகத் தொடங்கி , பள்ளிக்கூடம் , ரியூசன், விளையாட்டு , சரக்குச் சுழற்றிறது எண்டு ஊரைச் சுத்தீட்டு வீட்டை வந்து இரவில தலைகீழா கவிட்டு வைச்சு சைக்கிளை சுத்தி BBC , வெரித்தாஸ் , ஆகாசவாணி, லங்காபுவத் எல்லாம் கேட்டிட்டு கடைசீல உள்ளூர் செய்தியோட நித்திரைக்குப் போக அடிச்சுப் போட்ட மாதிரி ஒரு நித்திரை வரும் ஊர் உலகத்தை சுத்தின களைப்பால.

மனிசி திருப்பியும் “என்னப்பா ஏலாதே நான் சொன்னான் உங்களுக்கு வயசு போட்டு எண்டு” என்டை இளமையை நக்கலடிக்கிறதைப் பொறுக்கேலாமல் “ஏறும் “ எண்டு சொல்லி ஏத்திக்கொண்டு உழக்க திருப்பியும் அதே ரொமான்ஸ் மூட் வந்திச்சுது ஆனாலும் கட்டினாப்பிறகு கூட வழமை போல மனிசி காணும் இறங்கிப்போறன் எண்டு சொல்ல திருப்பி வீட்டை வந்திட்டன். இரவு சைக்கிள் ஓடினதால கால் நோகுது எண்டு சொல்ல மனிசி காலை ஊண்டிவிட , செத்தும் கொடுத்த சீதாக்காதி மாதிரி ஓடினாப் பிறகும் ரொமான்ஸ்க்கு வழி செஞ்சுது சைக்கிள்.

Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 24 | இந்த அடி நாளைக்கு… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 25 | பக்கத்து இலைக்கு பாயாசம்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 28 | தாண்டாக்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர் …

சுவடுகள் 29 | அழையா விருந்தாளி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 31 | சுயம் இழந்த சரிதம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More