September 21, 2023 2:25 pm

சுவடுகள் 28 | தாண்டாக்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர் …

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

1992 ஆவணி, நல்லூர் திருவிழாவோட சேத்து இந்த திருவிழாவும் தொடங்கி எல்லா அம்மாமாரின்டை நேத்தியால பூங்காவனத்தோட செல்லடி, பொம்பர் அடி ஹர்த்தால் எண்டு அசம்பாவிதம் ஒண்டும் இல்லாமல் ஒரு மாதிரி ஒரு பெரிய கண்டம், ( A/L )ம் முடிஞ்சது எண்டு இருக்க, எங்கயோ physics paper முதலே out ஆகீட்டாம் எண்டு திருப்பிப் படிக்கச் சொன்னாங்கள். என்னடா மதுரைக்கு வந்த சோதனை எண்டு, ஒரு மாதிரி அந்தச் சோதினைக்கும் போட்டு வந்தம். அடுத்தது என்ன? எண்ட விடை தெரியாத கேள்வியோட சும்மா திரிய, இவங்கடை நடவடிக்கையும் சேர்க்கையும் சரியில்லை எண்டு மற்ற friends ன்டை அம்மாமாரும் சொன்ன மாதிரியே என்டை அம்மாவும் சொல்ல, என்னை கொழும்புக்கு அனுப்ப மேலிடங்கள் முடிவு செய்தது.

கள்ளமா ஒரு வேலைக்கு Set up பண்ணின கடித்ததோட பாஸ் எடுக்கப் போய் , குடும்பக் கஸ்டம் மற்ற எல்லாரும் படிக்கினம், பிணைக்கு ரெண்டு பேர் நிக்கினம் எண்டு பவ்வியமாக் கதைச்சுப் பாஸ் எடுத்திட்டு வர அம்மா சொன்னா” எண்டாலும் உன்னைத் தனிய விடமாட்டன் எண்டு. எப்பிடியோ ஒரு தூரத்துச் சொந்தக் கிழவியை கிட்டச் சொந்தமாக்க அந்தச் சொந்தக்கார ஆச்சியோட கொழும்புக்குப் போக approval வீட்டை கிடைச்சுது.போறதெண்டு முடிவெடுத்திட்டு என்னெண்டு மனிசிக்கு இதைச் சொல்லிற எண்டு யோசிக்க அனுமார், அன்னப்பறவைகள் எல்லாம் உதவ “ஏமாறவும் மாட்டன் ஏமாத்தவும் மாட்டன்” எண்டு நடு ரோட்டில சத்தியம் செய்திட்டு வெளிக்கிட்டன்.

எனக்கு pass கிடைச்ச நேரம் ஆனையிறவில சண்டை, ரெண்டு நாளா மழை எண்டு கொஞ்ச நாளா வள்ளம் ஓடேல்லை. ஒவ்வொரு நாளும் காலமை பேப்பரில நல்ல செய்தி வருமா எண்டு பாத்து பாத்து இருக்க, இண்டைக்கு வள்ளம் ஓடத் தொடங்கீட்டாம் எண்டு கேள்விப்பட்ட உடனயே வெளிக்கிட்டன். துணைக்கு வாறன் எண்ட கிழவியை நீங்கள் பஸ்ஸில வாங்கோ நான் முதல் போய் கியூவில நிக்கிறன் எண்டு சொல்லிப்போட்டு இருக்க, மண்ணெண்ணை மூண்டு போத்தில் தாறன் எண்டு இரவல் வாங்கின மோட்டச்சைக்கிளிலை சத்தியும் பிரசாந்தனும் ஏத்திக் கொண்டு வந்தாங்கள். மோட்டச்சைக்கிள் வேற போற வழியில அடிக்கடி நிண்டிச்சுது. தும்மல் மாதிரி இதுகும் ஒருக்கா எண்டாத் தான் கூடாது எண்டு சத்தி மாஸ்டர் நம்பிக்கை தர, தூக்கின பையை கொழும்பில கொண்டேத்தான் வைக்கிற முடிவோட கிளாலி பயணம் தொடர்ந்திச்சுது.

மிருசுவில் தாண்டி மூண்டு மைல் போக வாற சந்தியால போனாக் கிளாலிதான் எண்டு யாரோ சொன்னதை நம்பி ஒவ்வொரு சந்தி சந்தியா இறங்கி இறங்கி அண்ணை எப்படிப் போறது எண்டு கேட்டுக் கேட்டு ஒரு மாதிரி வந்து சேந்தம். இதுக்கு அங்கால வாகனம் போகாது எண்டு சீருடைக்காரர் சொல்ல என்னை இறக்கிப் போட்டு, “ நாங்கள் அடுத்த shy க்குப் படிக்கப் போறம் நீ திருப்பி வராத” எண்டு சொல்லீட்டு அவங்கள் வெளிக்கிட நான் உள்ள போனேன்.

Barrier தாண்டி ஒரு தென்னந்தோப்புக்குள்ள போக எக்கச்செக்கம் தலைகள் தெரிஞ்சுது. அதுக்குள்ள முகம் மட்டும் தெரிஞ்ச ஒராள் கண்டிட்டு, “ இப்பவோ வந்தனீங்கள், நான் வந்து நாலு நாள் ஆச்சுது” எண்டு கள நிலவரத்தை முன் மொழிய, முந்தி வந்த ஆக்களை ஏத்தீட்டுத் தான் இண்டைக்கு வந்த ஆக்களை ஏத்துவம் எண்டு துவக்கோட நிண்ட தம்பி வழி மொழிஞ்சார். துணைக்கு பஸ்ஸில வந்த ஆச்சி ஆரோ தெரிஞ்ச பொம்பிளைகள் இருக்கினம் எண்டு அவையோட போய்ச் சேர நான் இரவுக்கு தங்க இடம் பாக்கத் தொடங்கினன். சந்திரனில நீல் ஆம்ஸ்ரோங் போகேக்கயே தேத்தணிக்கடை வைச்சு வரவேற்றவை எண்ட (கதை) பெருமை கொண்ட எங்கடை ஆக்கள் இந்த இடைத்தங்கல் இடத்தை சாப்பாட்டுக் கடை போட்டு departure முகாமா மாத்தி இருந்தாங்கள். அவசரம் ஆத்திரத்துக்கு தற்காலிக கக்கூஸ், மரத்தில இருந்து ஓலை, தேங்காய் ஏதும் விழாம இருக்க கூரை போட்ட கொட்டில், எல்லாம தனித்தனிய ஆண் பெண் எண்டு அறிவிப்புப் பலகையோட இருந்துச்சிது. கொட்டிலையும் கடைகளையும் பாத்தோண்ணயே விளங்கீட்டுது இது சும்மா ஒரு நாள் தற்காலிகம் இல்லை எண்டு.

கட்டாயம் medicine தான் படிக்கோணும் எண்டிற அம்மா,
பள்ளிக்கூடத்திக்கு நல்ல results எடுத்து தருவான் எண்டு நம்பின வாத்தி மார்,
இயக்கம் கியக்கம் எண்டு போனா நான் இருக்க மாட்டன் எண்டு வெருட்டிற அம்மம்மா,
நம்பி ஓமெண்டனான் என்னை கைவிட்டிடாத எண்டிற ( இந்நாள்) மனிசி ,
இது சரி வராது ,மச்சான் நாங்களும் போவமா எண்டு கேக்கிற நண்பன் ,
எப்பிடியாவது வெளிநாடு எங்கேம் போயிட வேணும் எண்டு மனதை மயக்கும் area நண்பர்கள்,
வள்ளத்தில ஏத்திக் கொண்டு போய் அங்கால விட ஜம்பது கேக்கிறாங்கள் என்ன மாதிரி எண்டு கேக்கிற தொடர்புகள்,
சோதினை எப்பிடி எண்டு கேட்டிட்டு பரவாயில்லை திருப்பியும் படி நாங்கள் எல்லாம் மூண்டாம் தரம் தான் கம்பஸ் போனாங்கள் எண்டு free advise குடுக்கிற நெருக்கங்கள்,
எண்டதை எல்லாம் தாண்டி, எப்பிடியும் கொழும்புக்குப் போனாச்சரி எண்ட குறிக்கோளோட மட்டும் வெளிக்கிட்டன்.

மூண்டு நாளாகியும் வள்ளம் கிடைக்கேல்லை. அக்கரைப் பச்சைக்குப் ஆசையாப் பாத்துக்கொண்டிருந்த என்டை குறிக்கோள் இப்பிடி கிளாலியிலயே முடிஞ்சடுமோ எண்டு யோசிக்க சனங்கள் திடீரெண்டு அல்லகோலப்பட்டு ஓடிப்போய் வரிசையில் இடம் பிடிக்க நானும் அதில ஐக்கியமாகி, ஒரு மாதிரி துணைக்கு வந்த ஆச்சியை தேடிப்பிடிச்சு என்டை வரிசையில சேக்க குடும்ப அட்டையில இருக்கிற அ,உ,ஆ மாதிரி இங்கையும் போராளி மாவீரர் குடும்பம், அரச உத்தியோகத்தர் மற்றது எங்களை மாதிரி தேவையில்லாமல் கொழும்பு போறாக்கள் எண்டு மூண்டு row வில நிக்க விட்டாங்கள். மற்ற row வில நிண்டவன் எல்லாம் போக எங்கடை தேவையில்லாத ஆக்களின்னடை row மட்டும் அசையாம நிண்டிச்சுது. தென்னங் குத்தியை வெட்டி நட்டு, கயித்தைக்கட்டி வைச்சிருந்த பாதுகாப்பு வலயத்துக்குள்ளால பாக்கையும் தூக்கிக்கொண்டுஓடப்போய் முன்னுக்கு நிண்டும் ஒண்டும் அசையேல்லை. அங்க நிண்டபடி கடலை எட்டிப்பாத்து ஒண்டும் தெரியாம , போய் முன்னுக்க நிக்கிற ஆக்களை எண்ணிப் பாத்து, இண்டைக்கு எத்தினை வள்ளமாம் எண்டு விபரம் அறிஞ்சு , ஒரு வள்ளத்திக்கு 16 பேர் எண்ட கணக்கின் படி எப்பிடியும் இண்டைக்குப் போகலாம் எண்டு கணக்குப் பாத்திட்டு வந்து நிண்டன். படம் பாக்க ரிக்கற் எடுக்கப் போய் இதே மாதிரி கம்பிக்குள்ளால வரிசையில போக திடீரெண்டு house full board போட்ட மாதிரி, இண்டைக்கு இவ்வளவும் தான் எண்டு அண்ணையவை சொல்ல, ரிக்கற் எடுத்து கடற்கரையில ஏற நிக்கிறவனைப் பாத்து பொறாமைப் பெருமூச்சு விட்ட படி திரும்பி வந்தன். வந்து மூண்டு நாளா இப்பிடி நிக்கிறதும் போறதுமா பழகின படியால் திருப்பியும் இடைத்தங்கல் கொட்டிலில படுக்கிறதுக்கு இடத்தை்தேடிக் கொண்டிருந்தன்.

Queue இல நிண்ட கனபேர் திரும்பிப் போக சிலவேளை திருப்பிக் கூப்பிட்டாலும் எண்ட நப்பாசையில் நிண்ட கொஞ்சப் பேரை “ஒருக்காச் சொன்ன விளங்காதோ” எண்டு கையில இருந்த சாமாங்கள் அளவு உயரமான பெரியாக்கள் பேசிறதை மரியாதை நிமித்தம் அமைத்தியா சனம் கேட்டிக் கொண்டு நிண்டிச்சுது. “கரடிக்கு விட்ட அம்பு just missed “ ஆன மாதிரி நாலாம் நாள் கடலுக்குள்ள ஏறிர வரைக்கும் வந்தும் boat ஏறேல்லாமல் திரும்பி போனம் . Boat கிடைக்காத்துக்கு காரணங்கள் தெரியாம நாங்களே “ இண்டைக்கு பெடியள் அடிக்கப் போறாங்களாம், பெரியாக்கள் எல்லாம் meetingஆம், புதிசா ஆயுதங்கள் வந்திருக்காம் “ எண்டு கேட்ட வதந்தியைப் பரப்பிப் போட்டு படுத்திட்டு பாக்க திருப்பியும் அடுத்த நாள் அதே சனம், அதே queue எண்டு நாள் போச்சுது.

இப்பிடி போக வழியில்லாமல் நாங்கள் நிக்கேக்க செல்வாக்கா போற சில ஆக்களும் இருந்தவை. ஓருத்தர் இப்பிடித்தான் வந்த உடனயே அங்க நிக்கிற ரெண்டு அண்ணைமாருடன் கதைக்க, அண்ணைமார் அவரை முன்னுக்கு விட, சரி ஒராள் தானே எண்டு மனதை சாந்திப் படுத்த முன்னுக்கு நிண்டவர் கையைக் காட்ட ஒரு குடும்பமே வந்து முதல் வள்ளத்தில ஏறிச்சுது. “இப்பிடி எண்டால் நாங்கள் எப்ப போறது “ எண்டு ஒரு துவக்குக்கு பயப்பிடாத ஒருத்தன் மெல்லமா பிலத்துச் சொல்ல , “அண்ணையவை ஏதும் கதைக்கிறதெண்டால் வாங்கோ காரியாலயத்தில போய் கதைப்பம் “ எண்டு ஒரு துவக்குத் தம்பி சொன்னோன்ன , கதைச்சவை, கதைக்க நினைச்சவை எல்லாம் ஒரு தலைப்பட்ச வாய்போர் நிறுத்தம் செய்திச்சினம். “அவையின்டை ஆக்கள் எண்டால் தான் போகலாம் போல” எண்டு குசுகுசுக்கும் சனத்தோட ஒண்டும் கதைக்காம வெளிக்கிட்டு போய் மீண்டும் இடத்தைப் பிடிச்சு பாக்கை வைச்சன். பிளேன் ரீயும் பராட்டாவும் சாப்பிட்டிட்டு ரெண்டு காவோலையை சேத்துப் போட்டிட்டு தலைக்க கொண்டு வந்த பாக்கை வைச்சிட்டுப் அந்தக் குருமண்ணுக்க படுக்க காலமையில இருந்து காத்து நிண்ட களைக்கு நித்திரை சுழட்டிச்சுது.

ஆறாம் நாள் , காலை 8.00 மணி, இடம் கிளாலி, இன்று நீங்கள் எப்பிடியாவது பயணம் செய்தால் மட்டுமே இந்தப் போட்டியில் நிலைத்திருக்கலாம் எண்டு big boos அறிவிக்க, நானும் செல்வாக்கைப் பயன்படுத்துவம் எண்டு முடிவெடுத்திட்டு அங்க நிண்ட பாத்தா பாவமா ஒரு துவக்கை்காவிக்கொண்டு திரிஞ்ச தம்பியிடம் போய் “அண்ணை நான் பங்கர் வெட்டினான், சென்ரிக்குப் போனான், மீட்டிங்குக்கு வந்தனான் அதோட இன்னாரைத் தெரியும்” எண்டு விலாவாரியாச் சொல்ல, கேட்டாரோ இல்லையோ தெரியேல்லை, “ அப்ப ஏன் கொழும்புக்குப் போறீங்கள் எங்களோடயே நிக்கலாமே” எண்டு சொல்லி முடிய முதல் ஓடிப் போய் திருப்பியும் மூண்டாவது வரிசையில நிண்டன் இண்டைக்கு எப்படியும் கடலைத் தாண்டீடிலாம் எண்ட குருட்டு நம்பிக்கையில்.

Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 24 | இந்த அடி நாளைக்கு… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 25 | பக்கத்து இலைக்கு பாயாசம்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்