புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

11 minutes read

“ வாற வெள்ளிக்கிழமை காலமை அந்திரட்டி கீரிமலையில , அண்டே மத்தியானம் வீட்டுக் கிருத்தியம்” எண்டு சொல்லீட்டுப் போச்சினம். அந்திரட்டிக்கும் அப்ப போய்ச் சொல்லிறது. ஆரார் செத்தவீட்டுக்கு வந்தவை , சாப்பாடு தந்தவை, உதவி செய்தவை எண்டு ஞாபகம் வைச்சு எல்லாருக்கும் மறக்காம போய்ச் சொல்லலோணும். கலியாணம் சொந்த பந்தங்களோட எண்ட படியாலும் சொல்லிறது ஆராருக்கு எண்டு தெரியும் எண்டதாலேம் சொல்லிறது சுகம்.

ஆனால் செத்தவீட்டுக்கு அப்பிடி இல்லை எவன் வந்தவன் எவன் வராதவன் எண்டு தெரியாது. படிச்சவன், வேலை செய்தவன், உதவி செய்தவன், வாங்கினவன் எண்டு தெரியாத கன பேர் வருவினம். கொள்ளி வைச்சிட்டு சுடலை வாசலில நிக்க வந்தவன் எல்லாம் போட்டு வாறன் எண்டு சொல்லாமல் கை கொடுத்திட்டுப் போவான் . வந்து போறதில தெரிஞ்ச முகங்கள், தெரியாத முகங்கள், தங்களை இன்னார் எண்டு சொல்லீட்டுப் போனவை, சொல்லாமப் போனவை எண்டு எல்லாரையும் ஞாபகம் வைச்சிருக்க வேணும்.

அதோட சண்டைக்காரரா இருந்தாலும் செத்தவீடெண்டால் கட்டாயம் வருவினம் . வந்தவைக்கு முகத்துச் சீலையை இறக்கி விட்டிட்டு வீட்டுக்காரர் செத்தவரின்டை முகத்தைப் பாத்துச் சொல்லிச் சொல்லி அழ , வந்தவர் கண் கலங்க பல கோவங்கள் எல்லாம் மறந்து பாசம் பொங்க சண்டை சமாதானமாகும். இப்படிப் பாத்து பாத்து எல்லாருக்கும் ஞாபகமா வீட்டை போய் சொல்ல வேணும்.

எல்லா வீட்டையும் நல்லது கெட்டதுக்குப் பிறகு இரவு ஒரு board meeting நடக்கும். அதில சில பேரின்டை தலை உருளும். “ என்ன தான் சண்டை எண்டாலும் அவன் மனிசியோட வந்து சுடலை வரைக்கும் வந்தவன்” எண்டு ஒரு சண்டைக்காரன் நல்லவனாவான் . “ அவருக்கு இப்ப தலை கனத்திட்டு எங்களைத் தெரியாது “ எண்டு போன கிழமை வரை நல்லவனா இருந்திட்டு செத்த வீட்டுக்கு வராதவன் திட்டு வாங்குவான் .

இந்த சமாவில, செத்தவரைப்பற்றி அழேக்க சொல்ல மறந்தது ஏதாவது ஒரு கிழத்திக்கு ஞாபகம் வர திருப்ப ஒரு ஒப்பாரி train ஓடத் தொடங்கும் . ஓடிற train க்கு சிவப்பு சிக்னல் காட்ட ஆரும் வருவினம் . இனிக்காணும் , சின்னன் பயப்பிடப் போது , செம்பில தண்ணி வையும் அந்தாள் இரவு வந்து தண்ணி விடாயக்குது எண்டு தேடும் , காலமை காடாத்து வேலை இருக்கு எண்டு போடிற சிவப்பு சிக்னல் ஒப்பாரியை கொஞ்சம் நிப்பாட்டும் . அழுகை முடிய திருப்பி ஆரார் வந்து போன எண்டு கதைக்கிறது ஞாபகமா முப்பத்தொண்டுக்குச் சொல்ல உதவும். அதோட நாளுக்கு நாள் அழுகை குறைஞ்சு அந்திரட்டி வேலைகள் தொடங்கும். காலமை அந்திரட்டி முடிச்சு கீரிமலையால வரவும் , வீட்டை ஐயர் துடக்குக் கழிச்சு முடியவும் நேரம் சரியா இருக்கும் , அதோட சமையல் வேலையும் தொடங்கும்.

தானம் வாங்கிக் கொண்டு ஐயர் போய் கல்வெட்டு வாச்சு முடிய வாங்கோ சாப்பிடுவம் இந்தாங்கோ செம்பு எண்டு கூப்பிட எழும்பிக் கைகழுவீட்டுப் போய் சபையில யார் யார் இருக்கினம் எண்டு பாத்தி தெரிஞ்ச முகம் ஒண்டுக்குப் பக்கத்தில போய் இருந்தன்.

பந்தியில பக்கத்தில யார் இருக்கினம் எண்டது முக்கியம். பந்தீல இருக்கேக்க மூலையில இருந்தால் கையை அகட்டி நீட்டிச் சாப்பிட ஏலாது , அதோட கேட்டோண்ண கறி சோறு எல்லாம் வராது. நடுப்பந்தீல ரெண்டு பக்கத்திலேம் தெரிஞ்ச ஆக்களோட இருந்தால் சௌகரியம். பந்தீல இருந்து சாப்பிட வேட்டி தான் சரி , சாப்பிடச்சாப்பிட அது கணக்காக இளகி வரும் வண்டியையும் இறுக்காது, பாவம் இப்ப வேட்டிக்கு belt ஐக் கட்டீட்டு முக்கிறாக்கள் கனபேர்.

காலை மடக்கி சப்பாணி கட்டி பந்திப் பாயில போய் இருக்க இலையைக் கொண்டு வந்து போட்டிச்சினம். தலைவாழையிலையின்டை தலைப்பகுதி இடதுகைப் பக்கம் திருப்பீட்டு இருக்க செம்பில தண்ணி வந்திச்சுது. கழுவின இலையெண்டாலும் தண்ணி வாங்கித் தெளிச்சு துடைச்சிட்டு இலையின்டை நடு நரம்பை கொஞ்சம் சின்னி விரல் பக்க கை விளிம்பால தட்டித்தட்டி அமத்தி தட்டையாக்கீட்டுப் பாக்க சபை நிறைஞ்சிட்டுது.

இலை போட்டாப் பிறகு , பின்னால வாழைக்காய் பொரியலும் மோர் மிளகாயும் வைச்சிட்டுப் போக பொறுமையில்லாமல் ஒரு பொரியலைத் தூக்கி வாய்க்க போட சமையலின்டை தரம் தெரிஞ்சுது. மூலையில போட்ட பயித்தங்காய் கறியைப் பாத்திட்டு, மெல்லிய முத்தலில்லாத பயித்தங்காய் எண்டதால இன்னுமொரு கரண்டி எண்டு சொல்ல ரெண்டாவது பெரிய கரண்டியாய் விழுந்திச்சுது.

கறி ஒவ்வொண்டுக்கும் பதம் இருக்கு. பூசணிக்காய் கறி போடேக்க கரண்டீல இருந்து கட்டியாய் செம்மஞ்சள் நிறத்தோட தக்கெண்டு விழுந்தால் அது தான் பூசணிக்காய் கறியின்டை பதம், கரண்டியோட ஒட்டிக்கொண்டு வரமாட்டன் எண்டது மரவள்ளிக் கிழங்குக்கு பதம். கிழங்குப் பிரட்டல் கரண்டீல வழுக்கி விழோணும்.

நாலு தட்டு கறிச்சட்டீல வாழைக்காய்ச் சம்பல் போடிறேல்லை, அதுக்கு தனி வாளி தனிக்கரண்டி. வெங்காயம் மிளகாய் வெளீல தெரியிறமாதிரி குழைஞ்சருக்கிறது வாழை்க்காய் சம்பலுக்குப் பதம். கறியின்டை நிறம், கூட்டின்டை அளவு, மணம் , குணம், மேல எண்ணை மிதக்குதா, தண்ணியா இருக்குதா எண்டு ஒவ்வொரு கறியையும் பாத்தோண்ணயே கண்டு பிடிக்கலாம் எப்பிடி இருக்கும் எண்டு.

கறிகள் போட்டு முடிய சுடச்சுட குத்தரிச் சோறு வந்திச்சுது. மூண்டாவது கரண்டி சோத்தை வைக்கேக்க கொஞ்சம் கையை உயத்திக் காணும் எண்ட மாதிரிக் காட்ட அதைக் கவனிக்காத மாதிரி போட்டிட்டு, “என்ன இவ்வளவு கொஞ்சச் சோறு எப்பிடிக் காணும் “ எண்டு திருப்பியும் நாலாவது கரண்டி போட வர நான் வேண்டாம் எண்ட , ஒரு அரைக்கரண்டி சோத்தில சமரசம் வந்திச்சுது.

மரக்கறிச் சாப்பாட்டுக்கு சோறு கொஞ்சம் குழைஞ்சருந்தா நல்லா இருக்கும். குவிச்சுப் போட்ட சோத்தை கொஞ்சம் பரவி விட உள் சோறு ஆறும் , ஆகலும் தட்டையா பரவினா சோறும் நல்லா ஆறீடும். சுடு சோறு ஆறின கறி இது தான் மரக்கறிச் சாப்பாட்டுக்குப் பதம்.

சாப்பாடு எண்டால் அந்திரட்டிச் சாப்பாடு தான். சாப்பாடு படைக்கிறது எண்ட படியால் உப்புப்புளி வாயில வைச்சுப் பாக்கவும் ஏலாது , எண்டாலும் அந்திரட்டி சாப்பாடுகள் நல்லாத்தான் இருக்கும், அந்திரட்டிக்கு சமைக்கிற சில கறிகள் நல்ல விசேசங்களில சமைக்கிறேல்லை எண்டதாலயோ இல்லாட்டி செத்தவரின்டை ஆவி நிண்டு தன்டை விருந்தெண்டு taste ஏதும் பாக்கிறதோ தெரியேல்லை.

தானம் குடுக்கிற கீரை , மரவள்ளி, பாவக்காய் எல்லாம் கலியாண வீட்டில இருக்காது. அதோட எந்தச் சபையில முருங்கைக்காயும் காச்சிறேல்லை. ஏன் எண்டு காரணம் சரியாத் தெரியாது . முருக்கங்காய் காச்சி ஒரேடியா கனபேருக்கு பிள்ளைகள் கிட்டக்கிட்ட பிறந்தா பிள்ளைப்பெறு பாக்கிற ஆக்களுக்கு கஸ்டம் எண்டு தான் முருங்கைக்காயும் இல்லை எண்டு நான் நினைக்கிறன்.

கடைசி ஆளுக்கும் பருப்புப் போட்டு நெய்விட்டிட்டு “ஏன் பாக்கிறீங்கள் சாப்பிடலாம்” எண்டு சொல்ல, முதல்ல செம்பு வாங்கின senior citizen கை வைக்கச் சபை தொடங்கிச்சுது. தான் மட்டும் சாப்பிடாமல் பக்கத்தில இருக்கிறவனையும் பாத்து அவனுக்காக கறியை கேட்டு தனக்கும் வாங்கிச் சாப்பிட்டிச்சினம் எல்ராரும். நான் திருப்பிச் சோறு கேட்டு வாங்கி குளம்பை விட்டு குழைக்கத் தொடங்க பாயாசம் வரத் தொடங்கிச்சுது.

போற பாயாசம் திருப்பி வராட்டியும் எண்ட சந்தேகத்தில சோத்தை ஒதுக்கி பாயாசத்துக்கு வழி விட்டன். பாயாசத்தின்டை பதம் ,கரண்டீல தண்ணியா இருந்து இலையில விடக் கட்டியாகோணும். கட்டியாகிக்கொண்டிருக்கிற பாயாசத்தின்டை நடுவில கைவைச்சா கை பொங்கீடும் எண்டதால ஆறி இருக்கிற கரைப்பக்கத்தால பாயாசமும் கறியும் கலக்கிற இடத்தில நாலு விரலையும் சேத்துக் கோலி வளிச்சு வாய்க்குள்ள வைச்சு உறிஞ்ச பாயாசம் இனிக்க, பயித்தங்காய் உறைக்க கொஞ்சம் பிரக்கடிச்சிது. பக்கத்தில இருக்கிறாள் தலையில தட்ட, ஒரு முடறு தண்ணியைக் குடிச்சிட்டு பாயாசத்திலை இருக்கிற கஜுவையும் பிளம்ஸ்ஸையும் தேடி வழிச்சு வழிச்சுச் சாப்பிட்டன். இருந்ந இடத்தில இருந்து எழும்ப விடாமப் பொங்கலும் வடையும் வைக்க அதையும் சாப்பிட்டிட்டு இலை மடிச்சு முக்கித்தக்கி எழும்ப கடைசி ரெண்டு பட்டுனுக்காலேம் வண்டி பிதுங்கிச்சுது.

கைகழுவீட்டு வந்து , இளகின வேட்டியை கொஞ்சம் இறுக்கிக் கட்டீட்டு வேப்ப மரத்தடீல நிழலாப் பாத்து கதிரையை இழுத்துப் போட்டிட்டு இருக்க வெத்திலைத் தட்டு வந்திச்சுது. கொண்டந்த வெத்திலைத்தட்டை வாங்கிக் கொண்டு சமாவைச்சபடி வெத்திலையைப் போடத் தொடங்கினன்.

கழுத்து முட்டச் சாப்பிட்டிட்டு வந்து வாய் நிறைய வெத்திலை போட்டிட்டு இருக்க, அடிக்கிற வேப்பங் காத்துக்கு கண்ணைச் சுழற்றிச்சுது.
உண்டதால வந்த களை தொண்டருக்குமாம் எண்டு உறங்குவம் எண்டு வெளிக்கிட்டன்.

Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்.

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 24 | இந்த அடி நாளைக்கு… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 25 | பக்கத்து இலைக்கு பாயாசம்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 28 | தாண்டாக்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர் …

சுவடுகள் 29 | அழையா விருந்தாளி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More